• Tue. Sep 15th, 2026

24×7 Live News

Apdin News

புளூ ஸ்டார் கழகத்தின் சுப்பர் சிக்ஸ் வாய்ப்பை தீர்மானிக்கும் சுப்பர் லீக் போட்டி

Byadmin

Sep 15, 2026


இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் சுப்பர் லீக் கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் நடப்பு சம்பியன் களுத்துறை புளூ ஸ்டார் கழகத்தின் சுப்பர் சிக்ஸ் வாய்ப்பை தீர்மானிக்கும் போட்டி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று (14) பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இப் போட்டியில் ரட்னம் கழகத்தை எதிர்த்தாடவுள்ள புளூ ஸ்டார் கழகம் கட்டாய வெற்றிக்கு குறிவைத்து களம் இறங்கவுள்ளது.

‘நாங்கள் சுப்பர் சிக்ஸ் வாய்ப்பை பெறுவதாக இருந்தால் இன்றைய போட்டியில் ரட்னம் கழகத்தை வெற்றிகொண்டே ஆகவேண்டும். போட்டிக்கு போட்டி முன்னேற்றத்தை வெளிப்படுத்திவரும் ரட்னம் கழகத்தை நாங்கள் குறைத்து மதிப்பிடமாட்டோம். வெற்றியை மாத்திரமே குறிவைத்து விளையாடவுள்ளோம்’ என புளூ ஸ்டார் கழக பயிற்றுநர் ஹம்ஸா தெரிவித்தார்.

சுப்பர் லீக் கால்பந்தாட்டத்தில் புளூ ஸ்டார் கழகமும் புளூ ஈக்ள்ஸ் கழகமும் 3 வெற்றிகள், ஒரு வெற்றிதோல்வியற்ற முடிவு, 4 தோல்விகள் என்ற பெறுபேறுகளுடன் தலா 10 புள்ளிகளைப் பெற்றுள்ளன.

எனினும் இந்த இரண்டு கழகங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டபோது புளூ ஸ்டார் வெற்றிபெற்றுள்ளதால் அக் கழகம் 6ஆம் இடத்தில் இருக்கிறது. புளூ ஈக்ள்ஸ் 7ஆவது இடத்தில் இருக்கிறது.

ரட்னம் கழகம் இந்த வருட சுப்பர் லீக்கில் தான் விளையாடிய 8 போட்டிகளிலும் தோல்வி அடைந்து கடைசி இடத்தில் இருக்கிறது.

எனவே இன்றைய போட்டியில் ரட்னம் கழகம் வெற்றிபெறும் என எதிர்பார்க்க முடியாது.

By admin