• Sun. Aug 2nd, 2026

24×7 Live News

Apdin News

பொதுநலவாய விளையாட்டு | ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கம் சுவீகரித்து வரலாற்றுச் சாதனை

Byadmin

Aug 1, 2026


ஸ்கொட்லாந்தில் நடைபெற்றுவரும் கிளாஸ்கோ 2026 பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 89.75 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்த ருமேஷ் தரங்க, தங்கப் பதக்கத்தை சுவீகரித்து வரலாற்றுச் சாதனை படைத்தார்.

இதன் மூலம் பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் மெய்வல்லுநர் போட்டிகளில் 1950இல் டன்கன் வைட்டுக்குப் பின்னர் இலங்கைக்கு தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்தவர் என்ற பெருமையை ருமேஷ் தரங்க பெற்றுக்கொண்டார்.

மேலும், மெல்பர்ன் 2006  பொதுநலவாய விளையாட்டு விழாவில் பளுதூக்கல் போட்டியில் சின்தன விதானகே தங்கப் பதக்கம் வென்ற பின்னர் இலங்கைக்கு கிடைத்த முதலாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.

ருமேஷ் தரங்கவின் முதலாவது முயற்சி தகுதி நீக்கம் செய்யப்பட்டது. எனினும் இரண்டாவது முயற்சியில் ஈட்டியை 89.75 மீற்றர் தூரத்திற்கு எறிந்து முதல் இடத்துக்கு முன்னேறினார்.

அதுவே அவர் தங்கப் பதக்கத்தை சுவீகரிப்பதற்கான எறிதலாக அமைந்தது.

மூன்றாவது முயற்சியில் அதனைவிட தூரத்திற்கு ஈட்டியை ருமேஷ் தரங்க எறிவார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அந்த முயற்சி தகுதி நீக்கம் செய்யப்பட்டது. அவரது அடுத்த மூன்று முயற்சிகளும் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.

பெரும்பாலான போட்டியாளர்களின் முயற்சிகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இப் போட்டியில் இந்திய வீரர்களான நீராஜ் சொப்ரா (இரண்டாவது முயற்சியில் 85.83 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும் யாஷ் விர் சிங் (ஆறாவதும் கடைசியுமான முயற்சியில் 85.41 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

By admin