• Sun. Jun 14th, 2026

24×7 Live News

Apdin News

போதைப்பொருட்களில் 70 சதவீதம் குஜராத்தில் இருந்து தான் வருகிறது – கெஜ்ரிவால்

Byadmin

Jun 14, 2026


பஞ்சாப் மாநிலத்திற்குள் கடத்தி வரப்படும் போதைப்பொருட்களில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டவை குஜராத் மாநிலத்தில் இருந்துதான் வருகின்றன என ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி உள்ளார்.

பாஜக ஆட்சியில் குஜராத் மாநிலம் போதைப்பொருட்களின் நுழைவாயிலாக மாறியுள்ளது என்றும் சர்வதேச கடத்தல் மன்னன் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கு பாஜக பாதுகாப்பு வழங்குகிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடைபெற்ற வர்த்தகர்கள் மற்றும் தொழிலதிபர்களுடனான கலந்துரையாடலில் பேசிய கெஜ்ரிவால்,

லாரன்ஸ் பிஷ்னோய்

“லாரன்ஸ் பிஷ்னோய் தற்போது குஜராத்தில் உள்ள சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு சிறப்பு உத்தரவைப் பிறப்பித்து, அவரை அந்தச் சிறையை விட்டு வேறு எங்கும் மாற்றக் கூடாது என்று பஞ்சாப் போலீசாருக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது. பஞ்சாப் போலீசாரால் கூட அவரிடம் நேரடியாக விசாரணை நடத்த முடியவில்லை.

மத்திய அரசின் முழுமையான ஆதரவு இருப்பதால்தான், சிறைக்குள் சொகுசாக இருந்துகொண்டே உலகெங்கிலும் உள்ள தனது குற்றவியல் நடவடிக்கைகளையும், கொலைச் சம்பவங்களையும் பிஷ்னோயால் எளிதாக ஒருங்கிணைக்க முடிகிறது.

எலிகள்

குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் ஒரே நேரத்தில் ரூ. 21,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பிடிபட்டது நமக்குத் தெரியும்.

அதுமட்டுமன்றி, குஜராத் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த 2,200 கிலோ போதைப்பொருளை எலிகள் தின்றுவிட்டன என்று சிஏஜி அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதரவு

பஞ்சாப் மாநிலத்திற்குள் கடத்தி வரப்படும் போதைப்பொருட்களில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டவை குஜராத் வழியாகவே வருகிறது.

இதையெல்லாம் பார்க்கும் போது கடத்தல்காரர்களுக்கு யாருடைய ஆதரவு இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

பாஜக பறிப்பு

பாஜக, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையை அனுப்பி வர்த்தகர்களை மிரட்டி, அவர்களிடம் இருந்து தேர்தல் நிதி என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாயைப் பறிக்கிறார்கள்” என குற்றம்சாட்டினார்.

By admin