• Sun. Oct 4th, 2026

24×7 Live News

Apdin News

போர் அறியாக் காலத்தின் வாழ்வியலை மீட்டெடுக்கும் தாமரைச்செல்வியின் ‘பனங்கிழங்கு’

Byadmin

Oct 4, 2026


அக்டோபர் மாதம் நூலக மாதமாகக் கடைப்பிடிக்கப்படும் நிலையில், ஜீவநதி பதிப்பகம் முன்னெடுத்துள்ள “30 நாளும் 30 நூல்கள்” வெளியீட்டுத் திட்டத்தின் முதல் நாளில், ஈழத்தின் மூத்த எழுத்தாளர் தாமரைச்செல்வியின் ‘பனங்கிழங்கு’ சிறுகதைத் தொகுதி வெளியாகியுள்ளது. ஜீவநதியின் 564ஆவது வெளியீடாக வெளிவந்துள்ள இந்நூலில் 20 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.

தாயகத்தில் போர் தீவிரமடைவதற்கு முன்னரான காலப்பகுதியில் தாமரைச்செல்வி எழுதிய சிறுகதைகளே இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இதனால், போரின் நிழல் முழுமையாகப் படர்வதற்கு முன்னரான ஈழத் தமிழர்களின் அன்றாட வாழ்வியல், உறவுகள், மனிதர்களின் கனவுகள், ஏக்கங்கள், சமூகச் சூழல் மற்றும் கிராமிய வாழ்க்கையின் நுண்ணிய அசைவுகளைப் பதிவு செய்யும் இலக்கிய ஆவணமாகவும் இத்தொகுப்பு அமைகிறது.

போருக்கு முந்தைய வாழ்வை அறிந்த தலைமுறையினருக்கு, இக்கதைகளை வாசிப்பது காலத்தைக் கடந்து சென்ற அனுபவமாக அமையக்கூடும். அந்தக் கதைகளில் இடம்பெறும் மனிதர்களும் அவர்களின் வாழ்வியலும் இன்று பெருமளவில் மாறிப்போன சமூகச் சூழலுடன் ஒப்பிடும்போது, ஒரு காலத்தில் நாம் வாழ்ந்த உலகம் எவ்வளவு வேறுபட்டிருந்தது என்பதை உணர்த்துகின்றன. போர் அறியாத அந்தக் கதாமாந்தர்களின் வாழ்க்கைக்குள் பின்னர் ஒரு தலைமுறை எதிர்கொண்ட பேரழிவு இடம்பெறவில்லை. அதனால் அந்த உலகம் இன்று வாசிக்கும்போது ஒரு கனவுபோல கண்ணுக்குள் விரிகிறது.

அதேவேளை, அந்தக் காலத்து கதைகளை இன்றைய வாசிப்பில் அணுகும்போது பல விடயங்கள் மட்டும் மாறாமல் தொடர்வதையும் உணர முடிகிறது. மனித உறவுகளின் அடிப்படைச் சிக்கல்கள், பெண்களின் வாழ்வியல், சமூக ஏற்றத்தாழ்வுகள், குடும்பங்களுக்குள் நிலவும் முரண்பாடுகள் போன்றவை காலம் மாறினாலும் வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டிருப்பதை இக்கதைகள் உணர்த்துகின்றன. மாறிப்போனவை எவை, மாறாமல் தொடர்கின்றவை எவை என்பதை வாசகர்கள் தாமாகவே கண்டறியக்கூடிய வகையில் தொகுப்பு அமைந்துள்ளது.

‘பனங்கிழங்கு’ என்ற தலைப்பே தாயகத்தின் மண்ணோடும் மக்களின் வாழ்வோடும் நெருக்கமான ஒரு குறியீட்டை முன்வைக்கிறது. ஈழத்தின் கிராமிய வாழ்வில் பனை ஒரு மரமாக மட்டுமல்லாமல் வாழ்வாதாரத்துடனும் பண்பாட்டுடனும் நினைவுகளுடனும் பின்னிப் பிணைந்த ஒன்றாக இருந்து வந்துள்ளது. அந்தச் சூழலின் வாசனையையும் மனிதர்களின் இயல்பான வாழ்வையும் தாமரைச்செல்வியின் கதைகள் மீட்டெடுக்கின்றன.

இத்தொகுப்பின் முகப்பை எழுத்தாளர் இந்து வரைந்துள்ளார். பனைமரங்களையும் தாயகத்தின் நிலப்பரப்பையும் பின்னணியாகக் கொண்டு பெண்ணின் முகத்தை மையப்படுத்தியுள்ள இந்த ஓவியம், நூலின் உள்ளடக்கத்துடன் நெருக்கமாகப் பொருந்தும் வகையில் அமைந்துள்ளது. முகப்பின் நிறங்களும் ஓவிய அமைப்பும் தாயகத்தின் பழைய வாழ்வை நினைவூட்டும் தன்மையைக் கொண்டுள்ளன.

ஈழத் தமிழ் இலக்கியத்தில் தாமரைச்செல்விக்கு தனித்த இடம் உண்டு. குறிப்பாக தாயக மக்களின் அன்றாட வாழ்வையும் பெண்களின் அனுபவங்களையும் சமூக மாற்றங்களையும் எளிமையான மொழியில் கதைப்படுத்திய அவரது படைப்புகள் ஈழத்து சிறுகதைப் பரப்பில் கவனிக்கத்தக்கவை. இந்நிலையில், போருக்கு முற்பட்ட காலத்தில் எழுதப்பட்ட கதைகளை ஒரே தொகுப்பாக மீண்டும் வாசகர்களிடம் கொண்டுவருவது இலக்கிய ரீதியிலும் நினைவுப் பதிவாகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

அக்டோபர் நூலக மாதத்தில் ஜீவநதி முன்னெடுத்துள்ள “30 நாளும் 30 நூல்கள்” திட்டத்தின் தொடக்க வெளியீடாக ‘பனங்கிழங்கு’ வெளிவந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக 30 நாட்களில் 30 நூல்களை வாசகர்களிடம் கொண்டு செல்லும் இத்திட்டம், ஈழத் தமிழ் இலக்கிய வெளியீட்டுத் துறையில் புதிய கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

20 சிறுகதைகளைக் கொண்ட ‘பனங்கிழங்கு’ நூலின் விலை 900 ரூபாய். இலங்கைக்குள் தபால் சேவை இலவசம் என ஜீவநதி பதிப்பகம் அறிவித்துள்ளது.

போர் ஒரு சமூகத்தின் நிலத்தை மட்டுமல்ல, அதன் நினைவுகளையும் மாற்றிவிடுகிறது. அந்த மாற்றத்திற்கு முன்னரிருந்த வாழ்வை இலக்கியம் மீண்டும் திறந்து காட்டும்போது, அது வெறுமனே பழைய கதைகளின் வாசிப்பாக இருப்பதில்லை; இழந்துபோன ஒரு சமூக வாழ்வின் தடயங்களைத் தேடும் பயணமாகவும் மாறுகிறது. அந்த வகையில் தாமரைச்செல்வியின் ‘பனங்கிழங்கு’, ஒரு காலத்தின் வாழ்வை மீண்டும் வாசிக்க அழைக்கும் முக்கியமான சிறுகதைத் தொகுப்பாகிறது.

எங்கள் நிலத்தின் முதுசம், தாமரைச்செல்வி அவர்கள். அவரின் இத்தொகுதி வரலாற்றில் நிலைத்திருக்கும். 

வணக்கம் இலண்டனுக்காக பூங்குன்றன்

The post போர் அறியாக் காலத்தின் வாழ்வியலை மீட்டெடுக்கும் தாமரைச்செல்வியின் ‘பனங்கிழங்கு’ appeared first on Vanakkam London.

By admin