படக்குறிப்பு, புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) புதன்கிழமை அன்று மின்னணு முறையில் கையெழுத்திடப்பட்டு, தற்போது முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக இரு நாடுகளும் பின்னர் உறுதிப்படுத்தின.கட்டுரை தகவல்
எழுதியவர், டேனியல் புஷ்
பதவி, வாஷிங்டன் செய்தியாளர்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
புதன்கிழமை அன்று அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தமானது ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறப்பதைக் குறிக்கிறது.
அதே வேளையில், மற்ற அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் இறுதி உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சிகள் தொடரும்.
பிரான்சில் நடைபெற்ற ஜி-7 உச்சிமாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு நீண்ட செய்தியாளர் சந்திப்பில், இதனைத் தன்னுடைய நாட்டுக்குக் கிடைத்த ஒரு மாபெரும் வெற்றியாகக் குறிப்பிட்டார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) புதன்கிழமை அன்று மின்னணு முறையில் கையெழுத்திடப்பட்டு, தற்போது முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக இரு நாடுகளும் பின்னர் உறுதிப்படுத்தின.
இருப்பினும், அமெரிக்க அதிகாரிகள் செய்தியாளர்களுடன் பகிர்ந்து கொண்ட உரையாடல்களின் படி, இரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதைத் தடுக்கும் டிரம்பின் இலக்கை அடைவதற்கான ஒரு விரிவான மற்றும் இறுதி அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இரு நாடுகளும் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஒப்பந்தத்திற்குப் பதிலாக இரானுக்கு அமெரிக்கா எந்தப் பணமும் தராது என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
இரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை வாங்கவோ, உருவாக்கவோ, அல்லது உற்பத்தி செய்யவோ முடியாது என்பதை இந்த ஒப்பந்தம் உறுதி செய்கிறது என டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
ஆனால், பேச்சுவார்த்தையின் போது அதிகாரிகளால் வாசிக்கப்பட்ட ஒப்பந்தத்தின் மூல உரையானது, ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட அந்தக் கூற்றுக்கு இணையானதாக இல்லை என தெரிகிறது.
அதற்குப் பதிலாக, போர்நிறுத்தத்தை நீட்டிக்கும் இந்த ஒப்பந்தம், அடுத்த 60 நாட்களுக்குள் நிரந்தர அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுவதற்காக இரு எதிரி நாடுகளுக்கும் இடையிலான முயற்சிகளைத் துரிதப்படுத்துவதாகத் தோன்றுகிறது.
2015 இல் எட்டப்பட்ட அசல் இரான் அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ஒபாமா நிர்வாகத்துக்கு 20 மாத கால பேச்சுவார்த்தை தேவைப்பட்டது.
அப்படியென்றால், டிரம்ப் நிர்வாகத்தால் இதை வெறும் இரண்டு மாதங்களில் செய்ய முடியுமா?
இரானுக்கான 300 பில்லியன் டாலர் திட்டம் என்பது என்ன?
பட மூலாதாரம், Iranian Foreign Ministry / Handout/Anadolu via Getty Images
படக்குறிப்பு, இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ஜூன் 16 அன்று தெஹ்ரானில் இரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே எட்டப்பட்ட ஒப்பந்தம் குறித்து தூதர்கள் மற்றும் ராஜீய பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தார்.
தற்போது, இந்த ஒப்பந்தத்தின் உரை, சர்வதேச அணுசக்தி முகமையின் மேற்பார்வையின் கீழ் இரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை குறைந்த சுத்திகரிக்கப்பட்ட தரத்துக்கு குறைக்கும் என்பதை மட்டுமே உறுதி செய்கிறது.
புதன்கிழமை, மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் இதனை இரானின் “ஒரு குறிப்பிடத்தக்க சலுகை” என்று குறிப்பிட்டார்.
ஆனால் இதைச் செய்வதற்கான வழிமுறை மற்றும் இதனுடன் தொடர்புடைய காலக்கெடு போன்ற தொழில்நுட்ப விவரங்கள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
இந்த விவகாரங்களில் ஒருமித்த கருத்தை எட்டுவதற்கான முயற்சிகள், அடுத்த 60 நாட்கள் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் மேற்கொள்ளப்படும்.
இந்த பேச்சுவார்த்தைகள், வெள்ளிக்கிழமை முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்த கையெழுத்துக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக தொடங்கும்.
இரானுக்கு அமெரிக்கா எந்தப் பணமும் தராது என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டில் ஒபாமா நிர்வாகத்தால் இரானுக்கு வழங்கப்பட்ட 1.7 பில்லியன் டாலர் தொகையை அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சித்து வந்ததால், இது அவருக்கு ஒரு முக்கிய பிரச்னையாக உள்ளது.
தனது அரசியல் பாரம்பரியத்தை மனதில் வைத்து, முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஒப்பந்தத்தை விட தனது இரான் ஒப்பந்தம் சிறந்தது என்பதைக் காட்ட டிரம்ப் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்.
இரானுக்கு எதிராகத் தான் ஒரு கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளதை நிரூபிக்க, பணம் கொடுக்கும் இந்த விவகாரத்தையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.
ஆனால் ஒப்பந்த உரையின் படி, இரானை மறுசீரமைக்க உதவுவதற்காக குறைந்தபட்சம் 300 பில்லியன் டாலர் மதிப்பிலான இறுதி மற்றும் பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு திட்டத்தை உருவாக்க, பிராந்திய கூட்டாளிகளுடன் அமெரிக்கா ஒத்துழைக்கும்.
டிரம்பின் ஒப்பந்தம் குறித்து ஏன் கேள்விகள் எழுப்பப்படுகின்றன?
இந்த ஒப்பந்தம் இரானுக்கு ஒரு டாலர் கூட வழங்குமாறு அமெரிக்காவைக் கட்டாயப்படுத்தவில்லை என்று மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார்.
ஆனால் ஒப்பந்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழி மிகவும் தெளிவற்றதாக உள்ளது, மேலும் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டால், எதிர்காலத்தில் அமெரிக்கா இரானுக்கு சில தொகையை வழங்குவதற்கான வாய்ப்பு இதில் உள்ளது.
இது டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஆகியோருக்கு ஒரு பெரிய அரசியல் பிரச்னையாக மாறக்கூடும்.
எந்தவொரு புதிய “முடிவற்ற போர்களையும்” தொடங்க மாட்டோம் என்று அவர்கள் இருவரும் தேர்தல் பிரசாரத்தின் போது உறுதியளித்திருந்தனர்.
மற்றொரு நாட்டின் விவகாரங்களில் தலையிடும் கொள்கையைக் கொண்ட ‘மேக் அமெரிக்கா கிரேட் அகைன்’ ஆதரவாளர்களும் இந்த ஏற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும்.
இரானுக்கான எந்தவொரு பொருளாதார உதவியும் அமெரிக்காவிலிருந்து நேரடியாக வராது என்றாலும் இந்த எதிர்ப்பு எழலாம்.
டிரம்பின் சொந்த குடியரசுக் கட்சிக்குள்ளும் கூட, இந்த ஒப்பந்தத்தின் மீதான விமர்சனங்கள் வேகமாக அதிகரித்துள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்த ஒப்பந்தம் மற்றும் இதனுடன் தொடர்புடைய நிச்சயமற்ற தன்மைகள் குறித்து டிரம்ப் நிர்வாகத்திடமிருந்து விரிவான தகவல்களையும் விளக்கங்களையும் கோரி வருகின்றனர்.
குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் சிலரும் இந்த ஒப்பந்தம் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர், மேலும் முன்னணி குடியரசுக் கட்சி செனட் உறுப்பினர் ஒருவர் இதை வெளிப்படையாக விமர்சித்துள்ளார். டிரம்ப் இரானுக்கு பல சலுகைகளை வழங்கியுள்ளார், ஆனால் அதற்குப் பதிலாகப் போதிய பலனைப் பெறவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
பதவி விலகும் லூசியானா செனட் உறுப்பினர் பில் காசிடி, டிரம்ப் ஆதரித்த எதிர்ப்பாளருக்கு எதிரான முதன்மைத் தேர்தலில் தோல்வியடைந்தார்.
“இரான் அதன் அணுசக்தி லட்சியங்களிலிருந்து திறம்பட தடுக்கப்படவில்லை. மேலும், ஹோர்மூஸ் நீரிணையை மூடுவது அல்லது அச்சுறுத்துவது போன்ற உத்திகள் வேலை செய்கின்றன என்பதை இரான் கற்றுக்கொண்டுள்ளது, மேலும் எதிர்காலத்தில் இதை இரான் பயன்படுத்திக்கொள்ள முயலும்” என்று அவர் எக்ஸ் தளத்தில் எழுதியுள்ளார்.
மேலும், “இது பல ஆண்டு காலங்களில் செய்யப்பட்ட மிகப்பெரிய வெளியுறவுக் கொள்கைத் தவறு” என்றும் அந்த குடியரசுக் கட்சித் தலைவர் கூறியுள்ளார்.
வேறு பல முக்கிய விவகாரங்களுக்கும் இந்த ஒன்றரை பக்க ஒப்பந்தத்தில் மிகக் குறைந்த இடமே ஒதுக்கப்பட்டுள்ளது.
ஹெஸ்பொலாவின் நிதி உதவியை நிறுத்த முடியுமா?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஹெஸ்பொலா அமைப்புக்கான நிதியுதவியைத் தடுப்பதும் டிரம்ப் நிர்வாகத்தின் ஒரு முக்கிய குறிக்கோள் ஆகும்.
போர் தொடங்கியபோது, இப்பிராந்தியத்தில் செயல்பட்டு வரும் ஹெஸ்பொலா போன்ற அதன் கூட்டாளிகள் அல்லது பிரதிநிதி குழுக்களுக்கு இரான் நிதியுதவி வழங்குவதைத் தடுப்பதே தனது முக்கிய முன்னுரிமைகளில் ஒன்று என்று டிரம்ப் கூறியிருந்தார்.
அமெரிக்காவுடன் இணைந்து போரைத் தொடங்கியிருந்த இஸ்ரேலுக்கும் இது ஒரு முக்கிய கவலையாக இருந்தது, மேலும் அது லெபனானில் இரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொலாவுக்கு எதிராக ஒரு தனி ராணுவ நடவடிக்கையையும் தொடங்கியிருந்தது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் உள்ள பகைமை ஒழிப்பு பிரிவு ஹெஸ்பொலா அமைப்புக்கும் பொருந்தும். இருப்பினும், இதைத் தவிர இந்த ஒப்பந்தத்தில் அந்த அமைப்பைப் பற்றி வேறு எந்தக் குறிப்பும் பெரிதாக இல்லை.
அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள், ஹெஸ்பொலா மற்றும் பிராந்தியத்தில் உள்ள பிற பிரதிநிதி குழுக்களுக்கு ஆதரவளிப்பதை நிறுத்துமாறு இரானுக்கு அழுத்தம் கொடுக்குமா என்பதும் தெளிவாக இல்லை.
புதன்கிழமை வெளியிடப்பட்ட ஒப்பந்தத்தின் உரையில் இரானின் ஏவுகணைத் திட்டம் குறித்தும் விரிவாகக் குறிப்பிடப்படவில்லை.
போரின் தொடக்கத்தில் டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் தங்களது முன்னுரிமைகளாகக் குறிப்பிட்ட முக்கிய விவகாரங்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்த வாரம் ஜெனீவாவில் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், ஒரு இறுதி மற்றும் விரிவான ஒப்பந்தத்துக்கு வழிவகுக்குமா என்பது இன்னும் நிச்சயமற்றதாகவே உள்ளது.
இந்த ஒப்பந்தம், இரு தரப்பினரும் 60 நாட்களுக்குள் பேச்சுவார்த்தைகளை முடிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஆனால் தேவைப்பட்டால் இந்த காலக்கெடுவை நீட்டிக்க முடியும் என்றும் அது கூறுகிறது.
இவ்வளவு குறுகிய காலத்தில் இன்னும் விரிவான மற்றும் நீடித்த ஒப்பந்தத்தை எட்ட முடியும் என்பதில் இரு நாடுகளுமே முழு நம்பிக்கையுடன் இல்லை என்பதை இது உணர்த்தக்கூடும்.
ஜி-7 உச்சிமாநாட்டில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, இரானுடன் நீடித்த அமைதி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து டிரம்ப் அதிக நம்பிக்கையை வெளிப்படுத்தவில்லை.
” 60 நாட்களில் ஒரு ஒப்பந்தத்தை எட்டவில்லை என்றால், அதில் எந்தப் பிரச்னையும் இல்லை. நாங்கள் மீண்டும் குண்டுவீச்சைத் தொடங்குவோம்” என்று டிரம்ப் கூறியுள்ளார்.