பட மூலாதாரம், Maria Patzwald
-
- எழுதியவர், கேட் போவி
- பதவி, க்ளோபல் ஹெல்த்
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
“இந்தச் சிகிச்சை மட்டும் இல்லாதிருந்தால், அவர் இன்னும் சீக்கிரமாகவே பிறந்திருப்பார் என்றும், அவரது வாழ்க்கையைத் தொடங்குவது அவருக்கு இன்னும் கடினமாக இருந்திருக்கும் என்றும் நான் நினைக்கிறேன்” என்கிறார் மரியா பாட்ஸ்வால்ட்.
38 வயதான அவர் தனது இரண்டாவது குழந்தையைக் கருத்தரித்த போது, ஆரம்பத்தில் அவருக்கு எந்தக் கவலையும் இருக்கவில்லை.
“எல்லாம் சரியாகத்தான் இருந்தது. ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு அது மாறத் தொடங்கியது” என்று மரியா பிபிசி உலக சேவையிடம் கூறுகிறார்.
பின்னர், 32 வாரம் கர்ப்பமாக இருந்தபோது, மரியாவுக்கு ப்ரீ-எக்லாம்ப்சியா இருப்பது கண்டறியப்பட்டது.
இது அதிக ரத்த அழுத்தத்தால் வகைப்படுத்தப்படும் மற்றும் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஒரு சிக்கலாகும். அவர் குழந்தையைப் பிரசவிக்கும் வரை மருத்துவமனையிலேயே இருக்க வேண்டும் என்று அவரிடம் கூறப்பட்டது.
தனது மகன் பிறப்பதற்காக அவர் காத்துக் கொண்டிருந்த வேளையில், இந்த நோயின் மூலக் காரணத்திற்கு முதன்முறையாகச் சிகிச்சையளிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பும் ஒரு தொழில்நுட்பச் சோதனையில் பங்கேற்கும் 16 பெண்களில் ஒருவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 70,000 க்கும் மேற்பட்ட தாய்மார்கள் மற்றும் 500,000 குழந்தைகளின் இறப்புகளுக்கு ப்ரீ-எக்லாம்ப்சியா மற்றும் அதிக ரத்த அழுத்தம் தொடர்பான இதர பாதிப்புகள் காரணமாக அமைகின்றன.
இது பரவலாகக் காணப்பட்டாலும், இதற்கான சிகிச்சை முறை பல ஆண்டு காலங்களாக எந்த முன்னேற்றமும் இல்லாமல் தேக்கமடைந்துள்ளது. இந்த பாதிப்பு ஒருமுறை தொடங்கிவிட்டால் மருத்துவர்களால் அதைக் கட்டுப்படுத்த முடிவதில்லை.
குழந்தையைப் பிரசவிப்பது மட்டுமே இதற்கான ஒரே தீர்வாக இருந்து வருகிறது.
இந்த ஆரம்பகட்ட சோதனையில், அமெரிக்க விஞ்ஞானிகள் ப்ரீ-எக்லாம்ப்சியாவைத் தூண்டக்கூடும் என்று அவர்கள் நம்பும் ஒரு புரதத்தை இலக்காகக் கொண்டனர். அதைத் தாயின் ரத்தத்திலிருந்து இயற்பியல் ரீதியாக அகற்றுவது அவரது ஆரோக்கியத்தை மேம்படுத்துமா மற்றும் அவரது கர்ப்ப காலத்தைப் பாதுகாப்பாக நீட்டிக்குமா என்று கண்டறிய முயன்றனர்.
தீவிரமான மற்றும் முன்கூட்டியே வரக்கூடிய ப்ரீ-எக்லாம்ப்சியா பாதிப்பு கொண்ட அந்த 16 பெண்கள், தங்களுக்கோ அல்லது தங்களது குழந்தைகளுக்கோ எந்தவொரு எதிர்மறையான பாதிப்பும் இல்லாமல் தங்களது கர்ப்ப காலத்தைச் சராசரியாக 10 நாட்கள் நீட்டித்திருப்பதை அந்த விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். தங்களது இந்த முடிவுகளை ‘நேச்சர் மெடிசின்’ இதழில் வெளியிட்டுள்ளனர்.
இதன் மூலம் மரியாவுக்கு அவரது மகன் பென்னட் 34 வாரங்களில் பிறந்தார்.
இது கர்ப்ப காலத்தின் ஒரு முக்கிய மைல்கல்லாகும், இது முன்கூட்டியே பிறக்கும் குழந்தைகளுக்கு உயிர் பிழைப்பதற்கான வலுவான வாய்ப்பை வழங்குகிறது.
பட மூலாதாரம், Getty Images
ரத்தத்தை வடிகட்டும் சிகிச்சை
விஞ்ஞானிகளுக்கு இதுகுறித்து திட்டவட்டமாகத் தெரியவில்லை என்றாலும், நஞ்சுக்கொடி அசாதாரணமாக உருவாகி, ரத்த ஓட்டத்தின் வழியை மாற்றி, தாயின் சாதாரண ரத்த அழுத்தக் கட்டுப்பாடுகளில் குறுக்கிடும் போது ப்ரீ-எக்லாம்ப்சியா ஏற்படுகிறது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
அதனால் ஏற்படும் அதிக ரத்த அழுத்தம் பக்கவாதம் மற்றும் உறுப்புச் சேதத்திற்கு வழிவகுக்கும்.
பொதுவாகக் கர்ப்பத்தின் 20 வாரங்களுக்குப் பிறகு அல்லது குழந்தை பிறந்த சில நாட்களிலேயே இது உருவாகிறது.
வழக்கமான பிரசவ கால ரத்த அழுத்தப் பரிசோதனைகள் மற்றும் சிறுநீர்ப் பரிசோதனைகள் மூலம் இதைக் கண்டறிய முடியும்.
இதன் மற்ற அறிகுறிகளில், சாதாரண வலி நிவாரணிகளால் குணமாகாத கடுமையான தலைவலி, பார்வை குறைபாடுகள், விலா எலும்புகளுக்குக் கீழே வலி, முகம், கைகள் அல்லது கால்களில் திடீர் வீக்கம், மருந்துகளால் குணமாகாத நெஞ்செரிச்சல் மற்றும் வாந்தி ஆகியவை அடங்கும்.
அமெரிக்காவின் சிடார்ஸ்-சினாய் மருத்துவ மையத்தைச் சேர்ந்த குழுவினரால் நடத்தப்பட்டு, பேராசிரியர் ரவி ததானி மற்றும் பேராசிரியர் ஆனந்த் கருமஞ்சி ஆகியோரால் வழிநடத்தப்பட்ட இந்தச் சோதனையில், பெண்களிடமிருந்து ரத்தம் எடுக்கப்பட்டு, இந்த பாதிப்பைத் தூண்டுவதாக அவர்கள் நம்பும் ‘எஸ்எப்ஃஎல்டி -1 (sFlt-1) என்ற புரதம் வடிகட்டப்பட்டு, சிறுநீரக டயாலிசிஸ் போன்ற ஒரு செயல்முறையின் மூலம் மீண்டும் உடலுக்குள் செலுத்தப்பட்டது.
இந்த பாதிப்பு கண்டறியப்பட்ட தாய்மார்களுக்கு வலிப்பு ஏற்படுவதைத் தடுக்கவும், அவர்களின் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் மருந்துகள் வழங்கப்படலாம் என்றாலும், குழந்தையைப் பிரசவிப்பதன் மூலம் மட்டுமே இதைக் குணப்படுத்த முடியும்.
ஆனால் முன்கூட்டியே பிரசவிப்பது குழந்தைக்கு ஆபத்துகளை ஏற்படுத்துகிறது.
ஜெர்மனியைச் சேர்ந்த மரியா போன்ற சில பங்கேற்பாளர்கள் இந்தச் சோதனையில் பல அமர்வுகளில் பங்கேற்றனர். இந்தச் சிகிச்சை அவரது குழந்தையின் வளர்ச்சிக்கு முக்கியமான கூடுதல் இரண்டு வாரங்களை வழங்கியது.
“ஒரு குழந்தை 34 வது வாரத்திலோ அல்லது அதற்குப் பிறகோ பிறந்தால், அவர்களுக்கு எந்தவொரு உடல்நலப் பிரச்னைகளோ அல்லது நீண்டகாலப் பாதிப்புகளோ ஏற்படாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்,” என்று கூறும் அவர், மேலும், “இது ஒரு மிகப் பெரிய நிம்மதியாக இருந்தது” என்றும் கூறுகிறார்.
இந்த சிகிச்சை முறையானது கர்ப்ப காலத்தை இன்னும் அதிகமாக நீட்டிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று இந்த ஆய்வின் ஆசிரியர் நம்புகிறார்.
மேலும் “உண்மையில் இதற்கான இலக்கு என்னவென்றால், இன்னும் முன்னதாகவே சிகிச்சையைத் தொடங்குவது தான்… நாம் முன்னதாகவே தொடங்கினால், நம்மால் கர்ப்ப காலத்தை இன்னும் பல வாரங்களுக்கு நீட்டிக்க முடியும்” என்று ததானி கூறுகிறார்.
‘பெரிதும் அறியப்படாத ஒன்று’
பட மூலாதாரம், Getty Images
“இது மிகவும் உற்சாகமளிக்கும் ஒரு ஆரம்பகட்ட ஆய்வு,” என்று லண்டனின் செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையின் மகப்பேறியல் ஆலோசகர் பேராசிரியர் அஸ்மா கலீல் கூறுகிறார்.
இந்த பாதிப்பின் உயிரியல் காரணியை இலக்காகக் கொள்ளக்கூடிய ஒரு சிகிச்சை முறை “குறிப்பாக நம்பிக்கையளிப்பதாக” உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
“மிகவும் முன்கூட்டியே தீவிரமான ப்ரீ-எக்லாம்ப்சியா பாதிப்புக்குள்ளாகும் பெண்களுக்கு, பாதுகாப்பான முறையில் சில கூடுதல் நாட்களைப் பெறுவது கூட குழந்தைக்கு மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்” என்று அவர் விளக்குகிறார். அதே வேளையில் இதற்கு இன்னும் பெரிய அளவிலான சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகள் தேவை என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இந்தச் செயல்முறை புத்திசாலித்தனமானது என்பதை ஒப்புக்கொண்டாலும், இந்தச் சோதனை மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவர்களிடம் மட்டுமே நடத்தப்பட்டதால், ரத்தத்தை வடிகட்டும் இந்த முறை தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் உண்மையிலேயே பாதுகாப்பானதா என்பது தற்போது “பெரிய அளவில் அறியப்படாத ஒன்றாகவே” உள்ளது என்று ‘ஆக்ஷன் ஆன் ப்ரீ-எக்லாம்ப்சியா’ தொண்டு நிறுவனத்தின் தலைவரும், லண்டன் கிங்ஸ் கல்லூரியின் தாய் மற்றும் கரு ஆரோக்கிய பேராசிரியருமான ஆண்ட்ரூ ஷென்னன் கூறுகிறார்.
ப்ரீ-எக்லாம்ப்சியா காரணமாக உயிரிழக்கும் பெரும்பாலான பெண்கள், போதிய மருத்துவ வசதிகள் இல்லாத குறைந்த வருவாய் கொண்ட நாடுகளிலேயே வாழ்கின்றனர் என்று அவர் கூறுகிறார்.
“மிகவும் தொழில்நுட்பம் சார்ந்த” இந்த ரத்த வடிகட்டுதல் தொழில்நுட்பத்திலிருந்து இந்த பெண்களுக்குப் பலன் கிடைக்க வாய்ப்பில்லை என்றும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள சிகிச்சை முறைகளின் மூலமே பலரைத் தப்ப வைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
மேலும், “நாம் சில அடிப்படை விஷயங்களை இன்னும் சிறப்பாகச் செய்தால், நாளையே ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தொழில்நுட்பம் நம்மிடம் உள்ளது,” என்று அவர் வலியுறுத்துகிறார்.
ஆனால், ரத்தத்தை வடிகட்டுவதற்குத் தேவைப்படும் உபகரணங்கள் சிறுநீரக டயாலிசிஸ் இயந்திரங்களைப் போலவே இருக்கின்றன என்றும், போதிய வசதிகள் இல்லாத கிளினிக்குகள் ப்ரீ-எக்லாம்ப்சியாவிற்குச் சிகிச்சையளிப்பதற்காக இந்த இயந்திரங்களை மாற்றியமைத்துக் கொள்வது “மிகவும் சாத்தியமான ஒன்று” என்றும் ததானி கூறுகிறார்.
பட மூலாதாரம், Maria Patzwald
‘நான் பெருமைப்படக் கூடிய ஒன்று’
இந்தச் சிகிச்சை முறை குறித்த ஒரு பெரிய அளவிலான ஆய்வு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கப்பட உள்ளதாக ததானி கூறுகிறார்,
அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் இது மருத்துவமனைகளுக்கு வந்துவிடக்கூடும் என்று அவர் நம்பிக்கையுடன் உள்ளார்.
“பங்கேற்க ஒப்புக்கொண்ட அந்த துணிச்சலான பெண்கள் இல்லையென்றால் நாம் இன்று இங்கு இருந்திருக்க மாட்டோம்… இதில் எந்தக் கேள்வியுமில்லை, உண்மையில் அவர்கள்தான் இந்தக் கதையின் நாயகிகள்” என்று அவர் குறிப்பிட்டார்.
தான் பங்கேற்ற அந்தச் சிறிய ஆய்வு, தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் உதவும் என்று நினைத்துப் பார்ப்பதே “சற்று வியப்பாக” இருப்பதாகவும், ஏனெனில் தனக்குக் கிடைத்த அந்த வாய்ப்பிற்காக தான் நன்றியுடன் மட்டுமே இருந்திருந்ததாகவும் மரியா தெரிவித்தார்.
“சில நாட்களுக்கு முன்பு, நான் ஒரு தாய்மார்கள் குழுவிடம் இதைப் பற்றிப் பேசினேன், இதில் பங்கேற்கும் தைரியத்தைப் பெற்றதற்கும், குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க உதவியதற்கும் அவர்கள் எனக்கு நன்றி தெரிவித்தனர்” என்று பகிர்ந்து கொண்ட அவர், “அதன் பிறகுதான் இது நானும் பெருமைப்படக்கூடிய ஒன்று என்பதை உணர்ந்தேன்” என்கிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு