2
ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற முதலாவது மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் சகலதுறை ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் இலங்கை அணி தோல்வியைத் தழுவியது.
அப் போட்டியில் 7 ஓவர்கள் மீதம் இருக்க பாகிஸ்தான் மகளிர் அணி 5 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது.
இந்த இரு தரப்பு தொடர் ஐசிசி உலக மகளிர் கிரிக்கெட் சம்பியன்ஷிப் 2025 – 2029 தொடராகவும் அமைவதுடன் பாகிஸ்தான் 2 வெற்றிப் புள்ளிகளைக் பெற்றுக்கொண்டது.
இதற்கு அமைய 7 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளைப் பெற்று உலக மகளிர் சம்பியன்ஷிப் அணிகள் நிலையில் நியூஸிலாந்துக்கு அடுத்ததாக 2ஆம் இடத்தில் இருக்கிறது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை மகளிர் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 210 ஓட்டங்களைப் பெற்றது.


43 ஓவர்கள் நிறைவில் இலங்கை 4 விக்கெட்களை இழந்து 178 ஓட்டங்களைப் பெற்று பலமான நிலையில் இருந்தது. ஆனால் 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 5 விக்கெட்களை இழந்ததால் இலங்கையினால் கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெற முடியாமல் போனது.
விஷ்மி குணரட்ன (26), அணித் தலைவர் சமரி அத்தபத்து (46) ஆகிய இருவரும் ஆரம்ப விக்கெட்டில் பகிர்ந்த 56 ஓட்டங்களே இலங்கை இன்னிங்ஸில் சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது.
இரண்டாவது விக்கெட்டில் சமரி அத்தபத்து, ஹசினி பெரேரா (35) ஆகிய இருவரும் 53 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
அதன் பின்னர் சிறந்த இணைப்பாட்டங்கள் ஏற்படுத்தப்படாதது இலங்கைக்கு நெருக்கடியைக் கொடுத்தது.


மத்திய வரிசையில் கவிஷா டில்ஹாரி (35), நிலக்ஷிகா சில்வா (48 ஆ.இ.) ஆகிய இருவரே திறமையை வெளிப்படுத்தினர்.
இந்த ஐவரை விட வேறு எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையைத் தொடவில்லை.
211 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 43 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 211 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றியீட்டியது.
பாகிஸ்தானின் முன்வரிசை வீராங்கனைகள் நால்வரும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி இலங்கைக்கு நெருக்கடியைக் கொடுத்தனர்.




முதலாவது விக்கெட்டில் சதாப் ஷமாஸுடன் 58 ஓட்டங்களைப் பகிர்ந்த குல் பெரோஸா, 2ஆவது விக்கெட்டில் சித்ரா ஆமினுடன் பெறுமதிமிக்க 90 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.


குல் பெரோஸா 78 ஓட்டங்களையும் சித்ரா ஆமின் 57 ஓட்டங்களையும் சதாப் ஷமாஸ் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.
மத்திய வரிசையில் ஆயிஷா ஸபார் ஆட்டம் இழக்காமல் 27 ஓட்டங்களையும் நஜிஹா அல்வி 13 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் கவிஷா டில்ஹாரி 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
ஆட்டநாயகி: குல் பெரோஸா