
-
- எழுதியவர், ஜான்வி முலே
- பதவி, பிபிசி மராத்தி
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
மகாராஷ்டிர மாநிலம், சதாராவில் உள்ள தராலி அணையில் அதானி கிரீன் நிறுவனம் மேற்கொண்டு வரும் திட்டம் தற்போது விவாதத்திற்குள்ளாகியுள்ளது. கர்ஜத்தில் உள்ள சாய்டோங்கர் திட்டத்தைப் போலவே, இங்கும் நீரேற்று மின் சேமிப்புத் திட்டம்செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் செலவு குறித்த விவரங்களை அளித்தபோது அதானி கிரீன் நிறுவனம் தவறான புள்ளிவிவரங்களைச் சமர்ப்பித்ததாக சதாராவின் கௌரவ வனவிலங்குப் பாதுகாவலர் ரோஹன் பாட்டே குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தத் திட்டத்தின் உண்மையான மதிப்பு ரூ.5,675 கோடி. ஆனால், நிறுவனம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் திட்டத்தின் மதிப்பு ரூ.56.75 கோடியாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இது உண்மையான திட்ட மதிப்பைவிட 99 சதவீதம் குறைவாகும்.
இதன் காரணமாக, சஹ்யாத்ரி புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்காகச் செலுத்த வேண்டிய ரூ.227 கோடிக்குப் பதிலாக, ரூ.2.27 கோடியை மட்டுமே நிறுவனம் செலுத்த வேண்டியிருக்கும்.
இந்தக் குற்றச்சாட்டுகளை அதானி கிரீன் நிறுவனம் மறுத்துள்ளது.
வனவிலங்குப் பாதுகாப்புக்காக செலுத்த வேண்டிய தொகையை குறைப்பதற்காக அந்த நிறுவனம் திட்டத்தின் மதிப்பைப் பெருமளவில் குறைத்துக் காட்டியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று அதானி கிரீன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு மகாராஷ்டிர வனத்துறைக்கு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, தேசிய வனவிலங்கு வாரியத்தின் அனுமதியைப் பெறாமலேயே திட்டப் பணிகள் தொடங்கப்பட்டதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
நவம்பர் 15ஆம் தேதி தராலியில் கூட்டம் ஒன்றை நடத்த ‘சேவ் சஹ்யாத்ரி’ அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
சஹ்யாத்ரி மற்றும் தராலி பகுதிகளைப் பாதுகாக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்று நடிகரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான சாயாஜி ஷிண்டேவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்ளூர் மக்கள் இந்தத் திட்டத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக, இந்தத் திட்டத்தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்தும் நிபுணர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
தராலி திட்டம் என்பது என்ன?
பட மூலாதாரம், PIB
மகாராஷ்டிர மாநிலம், சதாரா மாவட்டத்தின் பாடன் தாலுகாவில் உள்ள தராலி ஆற்றுப் பள்ளத்தாக்கில் காச்சே, தொண்டோஷி, கலம்பே மற்றும் ஜாலு ஆகிய கிராமங்களில் மொத்தம் 150.74 ஹெக்டேர் நிலப்பரப்பில் அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனம் இந்த திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
இந்தப் பகுதி சதாராவில் உள்ள கொய்னா வனவிலங்குகள் சரணாலயம் மற்றும் சஹ்யாத்ரி புலிகள் காப்பகத்தின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ளது.
தராலியில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், 1,500 மெகாவாட் திறன் கொண்ட நீரேற்று நீர்மின் சேமிப்புத் திட்டமாகும்.
நீரேற்று மின் சேமிப்புத் திட்டங்களில் இரண்டு நீர்த்தேக்கங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மின்சாரத்திற்கான தேவையும் அதன் விலையும் அதிகமாக இருக்கும் போது, மேல் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
பின்னர், மின்சாரத்திற்கான தேவையும் விலையும் குறைவாக இருக்கும் போது, அதே தண்ணீர் மீண்டும் மேல் நீர்த்தேக்கத்திற்கு உந்தி ஏற்றப்படுகிறது.
சூரிய ஆற்றல் அல்லது பிற வழிகளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை இதுபோன்ற நீரேற்று மின் சேமிப்புத் திட்டங்கள் மூலம் சேமித்து வைக்க முடியும்.
இதனால்தான் இந்தத் தொழில்நுட்பம் ‘நீர் பேட்டரி’ என்றும் அழைக்கப்படுகிறது.
தராலி நீரேற்று மின் சேமிப்புத் திட்டம், திறந்த சுழற்சி முறையிலான திட்டமாகும்.
அதாவது, இரண்டு நீர்த்தேக்கங்களில் கீழே உள்ள நீர்த்தேக்கம் தராலி ஆற்றில் அமைந்திருக்கும். இதன் மூலம் ஆற்றில் பாயும் தண்ணீர் பயன்படுத்தப்படும்.
மேல் நீர்த்தேக்கங்கள் கேடே மற்றும் தொண்டோஷி பகுதிகளில் அமைக்கப்பட உள்ளன.
இதற்காக ஆற்றில் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள அணை பயன்படுத்தப்படும்.
ஆனால், இந்த அணையில் உள்ள தண்ணீர் சுற்றியுள்ள 140 கிராமங்களின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தண்ணீரின் ஒரு பகுதி இனி மின்சார உற்பத்திக்கும் பயன்படுத்தப்படும்.
இதனால்தான் தொடக்கத்திலிருந்தே உள்ளூர் மக்கள் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தத் திட்டம் முன்மொழியப்பட்டது. அதே ஆண்டு மார்ச் 12ஆம் தேதி கலம்பேயில் உள்ள ககன்கிரி மகாராஜ் மடத்தில் பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெற்றது. அப்போது விவசாயிகளும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
2025ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்தத் திட்டத்திற்குச் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது. இந்த அனுமதி சில நிபந்தனைகளுடன் வழங்கப்பட்டது. இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே திட்டத்தின் மதிப்பு குறைத்துக் காட்டப்பட்டதாக ரோஹன் பாட்டே குற்றம்சாட்டுகிறார்.
கடந்த 30 ஆண்டுகளாக சஹ்யாத்ரி புலிகள் காப்பகத்தில் ஆராய்ச்சியாளராகவும் வனவிலங்குப் பாதுகாப்பு ஆர்வலராகவும் ரோஹன் பாட்டே பணியாற்றி வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இங்கு செலுத்த வேண்டிய தொகை குறைத்துக் காட்டப்பட்டிருப்பதை நாங்கள் கவனித்தோம். முழுத் தொகையும் செலுத்தப்பட வேண்டும்” என்றார்.
ஆவணங்கள் கூறுவது என்ன?
பட மூலாதாரம், Balasaheb Sapkal
முன்மொழியப்பட்டுள்ள தராலி திட்டம், கொய்னா வனவிலங்குகள் சரணாலயம் அல்லது சஹ்யாத்ரி புலிகள் காப்பகத்தின் எல்லைக்குள்ளோ, அதன் இடையக மண்டலத்திற்குள்ளோ (Buffer Zone) அமைந்திருக்கவில்லை.
ஆனால், இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் இடம், கொய்னா சரணாலயத்தின் முன்மொழியப்பட்ட சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்திற்குள்அமைந்துள்ளது.
விதிமுறைகளின்படி, இதுபோன்ற முன்மொழியப்பட்ட மண்டலத்திற்குள் செயல்படுத்தப்படும் எந்தவொரு திட்டமும், அதன் மொத்த மதிப்பில் நான்கு சதவீதத் தொகையை வனவிலங்குப் பாதுகாப்புக்காகச் சம்பந்தப்பட்ட சரணாலயத்திற்கு வழங்க வேண்டும்.
தராலி திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதிக் கடிதத்தில், திட்டத்தின் மதிப்பு ரூ.5,675 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, நிறுவனம் வனத்துறைக்கு ரூ.227 கோடி செலுத்த வேண்டியிருந்தது.
இந்தத் திட்டம் முன்மொழியப்பட்ட சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்திற்குள் வருவதால், தேசிய வனவிலங்கு வாரியத்தின் அனுமதியைப் பெறுவது அவசியம் என்றும் சுற்றுச்சூழல் அனுமதிக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரோஹன் பாட்டே சேகரித்த ஆவணங்களின்படி, பிப்ரவரி 23ஆம் தேதி அதானி கிரீன் நிறுவனம் மாநில வனவிலங்கு வாரியத்திடம் விண்ணப்பித்துள்ளது.
அனுமதி வழங்கும்போது, நான்கு சதவீதத் தொகையைச் செலுத்துவது தொடர்பாக மாநில வனவிலங்கு வாரியம் மொத்தம் 15 நிபந்தனைகளை விதித்தது.
2026ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், மகாராஷ்டிர மாநில முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் ரூ.227 கோடியைச் செலுத்துமாறு கோரியிருந்தார்.
இதையடுத்து, செப்டம்பர் 7ஆம் தேதி அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனம் பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்தது.
அதில், திட்டத்தின் மதிப்பு ரூ.56.75 கோடி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக, அக்டோபர் 12ஆம் தேதி முதன்மை வனத்துறைச் செயலாளர், ரூ.227 கோடிக்குப் பதிலாக ரூ.2.27 கோடியை நிறுவனம் செலுத்துவதற்கு ஒப்புக்கொண்டார்.
இந்தத் தொகையில் ஒரு சதவீதத்தை தற்போது செலுத்த வேண்டும் என்றும், தேசிய வனவிலங்கு வாரியத்தின் அனுமதி கிடைத்த பிறகு மீதமுள்ள தொகையைச் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இதையடுத்து, சஹ்யாத்ரி புலிகள் காப்பகத்திற்கு அதானி கிரீன் நிறுவனம் ரூ.56.75 லட்சம் வழங்கியது.
இதுகுறித்து ரோஹன் பாட்டே கூறுகையில், “இவ்வளவு பெரிய திட்டத்தின் மதிப்பு ரூ.56.75 கோடியாக இருக்க முடியாது என்பதைச் சாதாரண மனிதரால்கூட புரிந்துகொள்ள முடியும். தற்போது அவர்கள் அனைத்து அனுமதிகளையும் பெற்றுவிட்டனர். ஆனால், முழுத் தொகையையும் செலுத்தவில்லை. இதுதான் எனது முக்கியமான புகார்” என்றார்.
அக்டோபர் 30ஆம் தேதி, பிரதமர் அலுவலகத்தின் புகார் அளிக்கும் இணையதளம் மற்றும் மகாராஷ்டிர அரசின் ‘ஆப்லே சர்க்கார்’ (Aaple Sarkar) இணையதளம் மூலம் முதலமைச்சருக்கு ரோஹன் பாட்டே கடிதம் எழுதி இந்த விவகாரத்தைத் தெரிவித்தார்.
நவம்பர் 6ஆம் தேதி, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு மாநில வனத்துறைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டது.
இந்தத் திட்டத்திற்கு தேசிய வனவிலங்கு வாரியத்தின் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை.
குற்றச்சாட்டுகளுக்கு அதானி குழுமம் கூறுவது என்ன?
பட மூலாதாரம், Balasaheb Sapkal
ரோஹன் பாட்டே அளித்த புகார் தொடர்பான செய்திகள் உள்ளூர் நாளிதழ்களிலும், ஆங்கில நாளிதழான இந்தியன் எக்ஸ்பிரஸிலும் வெளியானதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் நாடு முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்தது.
சட்ட நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்காகவும், வனவிலங்குப் பாதுகாப்புக்கான செலவைக் குறைப்பதற்காகவும் நிறுவனம் திட்டத்தின் மதிப்பைக் குறைத்துக் காட்டியதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்துள்ளது.
ஊடகங்களுக்கு வெளியிட்ட கடிதத்தில், “இணையவழி விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ரூ.56.75 கோடி என்பது, திட்ட இடத்தை ஆய்வு செய்வதற்கும் கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்வதற்குமான செலவு மட்டுமே என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டம் முழுவதுமாகத் தனியாருக்குச் சொந்தமான, வனப்பகுதி அல்லாத நிலத்தில் செயல்படுத்தப்படுவதாக அதானி கிரீன் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இது சஹ்யாத்ரி புலிகள் காப்பகத்தின் இடையக மண்டலத்திற்கு வெளியே அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“இந்தத் திட்டத்தால் புலிகள் நடமாடும் பாதைகளுக்கோ, அறிவிக்கப்பட்ட சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்திற்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படாது. இதுபோன்ற எந்தவொரு மண்டலத்திற்கும் அருகிலும் இந்தத் திட்டம் அமைந்திருக்கவில்லை. பாதுகாக்கப்பட்ட பகுதி, ஒதுக்கப்பட்ட வனப்பகுதி அல்லது அறிவிக்கப்பட்ட சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் ஆகியவற்றில் நிலப் பயன்பாட்டை மாற்ற வேண்டிய அவசியமும் இந்தத் திட்டத்திற்கு இல்லை” என்று அதானி கிரீன் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
சதாராவில் போராட்டத்திற்கான ஏற்பாடுகள்
தராலி நீரேற்று மின் சேமிப்புத் திட்டம் சர்ச்சைக்குள்ளாவது இது முதல்முறையல்ல.
இதற்கு முன்பும் இந்தத் திட்டத்தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
குறிப்பாக, உள்ளூர் புவியியல் நிலைமைகள் குறித்த தகவல்களை வழங்குவதற்குப் பதிலாக, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கிராமங்கள் மற்றும் திட்டங்கள் தொடர்பான விவரங்கள் அந்த அறிக்கையில் அப்படியே நகலெடுத்து ஒட்டப்பட்டிருந்ததாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இதற்கு எதிராக அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்தத் திட்டத்திற்குப் பயன்படுத்தப்படவுள்ள தராலி அணையின் கீழ் நீர்த்தேக்கத்தை நம்பியிருக்கும் உள்ளூர் மக்களும், தண்ணீரைப் பகிர்ந்துகொள்வது தொடர்பான பிரச்னைகளை முன்வைத்து இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தேசிய வனவிலங்கு வாரியத்தின் அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகள் முடிவடைவதற்கு முன்பே திட்டப் பணிகள் தொடங்கப்பட்டதாக உள்ளூர்வாசியும் சமூக ஆர்வலருமான பாலாசாகேப் சக்பால் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கூட்டம் ஒன்றை நடத்த ‘சேவ் சஹ்யாத்ரி’ அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு