பட மூலாதாரம், ThenappanP-Shree Raajalakshmi Films
தமிழ் சினிமாவில் இயக்குநராக, நடிகராக மணிவண்ணன் கடந்து வந்த பாதை கொஞ்சம் வித்தியாசமானது,
அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த கருத்துகளை நடிகர் எம்.ஆர். ராதாவுக்கு பிறகு திரையில் துணிச்சலாகப் பேசியவராக மணிவண்ணன் அறியப்படுகிறார்.
அமைதிப்படை, 100வது நாள் போன்ற ஹிட் படங்களை இயக்கினாலும், நகைச்சுவை, வில்லத்தனம், குணச்சித்திரம் எனப் பன்முக வேடங்களில் வேடங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர்.
பாரதிராஜாவின் உதவியாளர்
கோவை மாவட்டம் சூலூரில் பிறந்த மணிவண்ணன், இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளராகத் தனது சினிமா பணியை தொடங்கினார்.
அவர் திறமையைப் பார்த்து ‘நிழல்கள்’ படத்தின் கதை மற்றும் வசனகர்த்தா வாய்ப்பு பாரதிராஜாவால் வழங்கப்பட்டது. ‘அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், மனோபாலாவின் ‘ஆகாய கங்கை’ போன்ற படங்களுக்கு கதை, வசனம் எழுதினார் மணிவண்ணன்.
50 படங்களின் இயக்குநர்
மோகன், சுகாசினி, ராதா நடித்த ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ படத்தின் மூலம் இயக்குநராக மணிவண்ணன் அறிமுகமானார். இந்தப் படத்தை கலைமணி கதை எழுதி, தயாரித்தார்.
அதைத் தொடர்ந்து ’24 மணி நேரம்’, ‘நூறாவது நாள்’ போன்ற கிரைம் திரில்லர் படங்களை இயக்கினார். 100வது நாள் திரைப்படம் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது.
சமூகம் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் ‘பாலைவன ரோஜாக்கள்’ போன்ற படங்களைக் கொடுத்த மணிவண்ணன் ‘சின்னதம்பி பெரியதம்பி’ போன்ற வணிக நோக்கிலான படங்களையும் இயக்கியுள்ளார்.
அதுமட்டுமின்றி, அவர் தமிழ் மொழி தவிர, தெலுங்கு, ஹிந்தியிலும் சேர்த்து மொத்தம் 50 படங்களை இயக்கினார். அவர் இயக்கிய கடைசி திரைப்படம் அமைதிப்படை-2. இதுதவிர மணிவண்ணன் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
பட மூலாதாரம், D. SHANKAR
ரஜினிகாந்த் முதல் தனுஷ் வரை
தமிழ் சினிமாவில் சில கூட்டணிகள் வெற்றி பெறும், தொடர்ந்து படங்களையும் கொடுக்கும். அந்த வகையில் மணிவண்ணன், சத்யராஜ் கூட்டணி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கூட்டணியாக மாறியது.
இருவரும் இணைந்து அரசியல், கடவுள் மறுப்பு, சாதி எதிர்ப்பு உள்ளிட்ட பகுத்தறிவு, முற்போக்குக் கருத்துகளைக் கொண்ட படங்களைக் கொடுத்தனர்.
கடந்த 1990களுக்குப் பிறகு மணிவண்ணன் நடிப்பில் அதிக கவனம் செலுத்தினார். நகைச்சுவை, வில்லன், குணச்சித்திர நடிகர் எனப் பல கதாபாத்திரங்களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், சரத்குமார், கார்த்திக், பிரபு, முரளி, விஜய், அஜித், மாதவன் எனப் பல நடிகர்களுடன் நடித்துள்ளார்.
அத்துடன் நிற்காத அவர், இளம் தலைமுறை நடிகர்களான சிம்பு, தனுஷ் ஆகியோருடனும் நடித்துள்ளார். இயக்கம், நடிப்பு, மேடைப் பேச்சு, அரசியல் எனப் பல தளங்களில் தடம் பதித்தவர் உடல்நலக் குறைவால் தனது 59வது வயதில் 2013ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதியன்று காலமானார். இன்று அவரின் 72வது பிறந்தநாள்.
பட மூலாதாரம், D. SHANKAR
‘எந்தப் படத்துக்கும் கதை சொல்லமாட்டார்’
மணிவண்ணன் படங்களில் 26 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த டி.சங்கர் அவருடனான அனுபவத்தை பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார்.
அப்போது அவர், ”நானும் மணிவண்ணனும் இணைந்து 51 படங்களில் பணியாற்றியுள்ளோம். அவர் உதவி இயக்குநராக, கதாசிரியராக இருந்தபோது, நான் உதவி ஒளிப்பதிவாளராக இருந்தேன். அவர் இயக்குநரான பிறகு, அவரது ஆஸ்தான கேமராமேன் ஆகிவிட்டேன். வாழ்க்கைச் சக்கரம் படத்தில் தொடங்கிய எங்கள் நட்பு 25 ஆண்டுகளுக்கும் மேலாக நீண்டது” என்று குறிப்பிட்டார்.
தமிழ் சினிமா இயக்குநர்களில் மணிவண்ணன் வித்தியாசமானவர் என்கிறார் டி.சங்கர்.
“எந்தப் படத்திற்கும் அவர் என்னிடம் கதையைச் சொன்னது இல்லை. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்புகூட சீன் சொல்லமாட்டார். சில குறிப்புகளைச் சொல்லிவிட்டு, லைட்மேனிடம், என் உதவியாளர்களிடம், படக் குழுவிடம் பேசிவிட்டு வருவார். அதற்குள் அவருக்கு சீன், வசனங்கள் வந்துவிடும்.”
அதற்குப் பிறகு, “காட்சியை விளக்குவார். எந்தெந்த ஷாட் எப்படி எடுக்க வேண்டுமென அறிவுறுத்துவார். நடிகர், நடிகைகளுக்கு மட்டுமின்றி, மணிவண்ணன் தன்னிடம் பணியாற்றும் உதவி இயக்குநர்களுக்குக்கூட படத்தின் கதை, வசனம், எடுக்கப்போகும் சீன் ஆகியவை முன்பே தெரியாது. ஆனால் ஒவ்வொரு நாளும் சீன்களை சிறப்பாக இயக்குவார்,” என்று கூறினார்.
பட மூலாதாரம், TheHindu
‘பட்டினியோடு வேலை செய்ய விடமாட்டார்’
மணிவண்ணன் குறித்து மேலும் பேசிய டி.சங்கர், “படப்பிடிப்பு நாளில் எங்களுடன் வருவார். நாங்கள் செல்லும் பகுதியில் உள்ள சிறப்பான உணவகங்களைத் தெரிந்து வைத்திருப்பார். அங்கே திருப்தியாகச் சாப்பிட வைப்பதுடன், மதிய உணவுக்கு என்ன வேண்டும் என்பதையும் தெரிவித்துவிட்டு, படப்பிடிப்பு தளத்திற்கு வருவார்.”
“அவர் உணவு விஷயத்தில் பாகுபாடு பார்க்கமாட்டார். அனைவரையும் நன்றாகச் சாப்பிடச் சொல்வார். அனைவரும் சாப்பிட்ட பிறகுதான் படப்பிடிப்பைத் தொடங்க வேண்டும், பட்டினியாக வேலை செய்யக்கூடாது என்பதை ஒரு கொள்கையாகக் கொண்டிருந்தார்,” என்று விவரித்தார்.
பல இயக்குநர்களுடன் தான் பணியாற்றி இருப்பதாகவும் கிட்டத்தட்ட அவர்கள் அனைவருமே சில வாரங்களுக்கு முன்பே கதை மற்றும் காட்சிகளைச் சொல்லிவிடுவார்கள் என்றும் குறிப்பிட்ட சங்கர், “ஆனால் மணிவண்ணன் சற்று வித்தியாசமானவர். அவர் அதிகம் படிப்பார், புத்தகங்களைக் கொடுத்து எங்களையும் வாசிக்கச் சொல்வார். ஒரு நூலகம் அளவுக்குப் பல புத்தகங்களை மணிவண்ணன் வைத்திருந்தார்” என்றும் கூறினார்.
பட மூலாதாரம், D. SHANKAR
பாரதிராஜாவிடம் பணியாற்றிய அனுபவம், முந்தைய சினிமா அனுபவத்தால், பேப்பர் இல்லாமலே படப்பிடிப்பு நடத்துகிறார் என்பதைத் தான் புரிந்துகொண்டதாகக் கூறுகிறார் சங்கர்.
“அனைத்து படங்களுக்கும் இந்த நிலைதான். ஒவ்வொரு படப்பிடிப்புத் தளத்திலும் சுற்றி நடப்பதைக் கூர்ந்து கவனிப்பார், அனைவரிடம் இயல்பாகப் பேசி ஊர் நிலவரத்தைத் தெரிந்துகொள்வார். தான் நடிக்கப் போகும் இடங்களில் கேமரா, லென்ஸ், ஆங்கிள், உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் உன்னிப்பாகக் கவனிப்பார். மணிவண்ணனுக்கு அதிகமாக கோவம் வரும் என்றாலும், அனைவரிடமும் மகிழ்ச்சியாக, பாகுபாடின்றிப் பேசுவார். அவரைப் போலவே, அவர் இயக்கிய படங்களும் அழுத்தமான கருத்துகளைக் கேலியான அணுகுமுறையில் வெளிப்படுத்தி இருக்கும்,” எனக் கூறினார்.
மணிவண்ணன் தாடி வளர்த்தது ஏன்?
ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்த மணிவண்ணன், ஒல்லியாக இருந்ததால் தன்னை ஒரு பெரிய ஆளாகக் காட்டிக் கொள்ளவே தாடி வளர்த்ததாக சங்கர் கூறுகிறார். பின்னர் அதுவே அவரது அடையாளமாகிவிட்டது.
“அவருக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள், அதில் சிறந்த நண்பர் நடிகர் சத்யராஜ். இருவருமே கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். கல்லூரிக் காலந்தொட்டுப் பழகி வந்தவர்கள். பிறகு இருவருமே சென்னை வந்து திரையுலகில் வாய்ப்பு தேடியுள்ளனர்.”
“அவரது படங்களில் ஒன்றான ‘100வது நாள்’ படக் கதை தொடர்பான விவாத நேரத்தில் தயாரிப்பாளர் மூலமாக சத்யராஜ் அதில் கலந்து இருக்கிறார். அப்போது பல தடைகளை மீறி முக்கியமான கதாபாத்திரத்தில் சத்யராஜை நடிக்க வைத்தார். 100வதுநாள் படமும், சத்யராஜ் நடித்த கதாபாத்திரமும் வெற்றி பெறவே, மணிவண்ணன், சத்யராஜ் இடையிலான நட்பு தொடர்ந்தது,” என்றும் விவரித்தார் சங்கர்.
பட மூலாதாரம், ThenappanP-Shree Raajalakshmi Films
அமைதிப் படை உருவானபோது சந்தித்த தடைகள்
சத்யராஜ், மணிவண்ணன் கூட்டணியில் பல படங்கள் வந்தன.
அவர் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிகளை நினைவுகூர்ந்து பேசிய சங்கரின் கூற்றுப்படி, “ஒரு கட்டத்தில் மணிவண்ணன் இயக்கிய படங்கள் பொருளாதார ரீதியாக வெற்றி பெறாததால் அவர் கடனில் சிக்க நேரிட்டது. ‘மணிவண்ணன் கதையே இல்லாமல் படம் எடுக்கிறார், இஷ்டத்துக்கு ஏதோ செய்கிறார்’ என்று சிலர் குறை கூறினார்கள்.”
அந்த நேரத்தில் மணிவண்ணன், இளையராஜா கூட்டணயிலும் பிரிவு ஏற்பட்டதாகக் குறிப்பிட்ட சங்கர், “சத்யராஜுடனான நட்பு தொடர்ந்தாலும் ‘சிறிது காலம் இடைவெளி விட்டு, பிறகு இணைந்து படம் எடுக்கலாம்’ என்று சத்யராஜ் கூறிவிட்டார். அந்த நேரத்தில் பார்த்திபனை வைத்து மணிவண்ணன் எடுத்த படமும் வெற்றி பெறவில்லை” என்றார்.
அதைத் தொடர்ந்து மீண்டும் சத்யராஜை அணுகியபோது, “அவர் கதையைக் கூறுமாறு கேட்டதாகவும், முதன்முறையாகத் தனது அலுவலகத்தில் அமர்ந்து கதை, காட்சிகள், வசனம் எழுதிவிட்டு சத்யராஜை அணுகினார். அந்தக் கதை அவருக்குப் பிடிக்கவே, உடனடியாக அதில் நடிப்பதற்கென நேரம் ஒதுக்கினார்.”
அப்படி உருவான படம்தான் அமைதிப் படை.
இருப்பினும், “வழக்கம் போல படப்பிடிப்புத் தளத்திற்கு வந்த பிறகு வசனம் எழுதும் பழக்கத்தைத் தொடர்ந்தார். அந்தப் படத்தை 68 நாட்கள் பொள்ளாச்சியில் எடுத்தோம். இளையராஜா மணிவண்ணன் இயக்கத்தில் இசையமைக்க சம்மதித்தார். இது படத்தின் அஸ்திவாரத்தை உறுதி செய்து, படம் பெருவெற்றியைப் பெற வித்திட்டது,” என்று சங்கர் விளக்கினார்.
பட மூலாதாரம், M. R. Films International
மணிவண்ணன், சத்யராஜ் கூட்டணியின் ரகசியம்
சங்கரின் கூற்றுப்படி, சத்யராஜ், மணிவண்ணன் ஆகியோர் சில நேரம் அண்ணன், தம்பியாக இருப்பார்கள், சில நேரம் நண்பர்களாக இருப்பார்கள்.
“மணிவண்ணன் மனதில் நினைப்பதை சத்யராஜ் புரிந்துகொள்வார். அவர் எப்போதும் கேமரா அருகிலேயே இருப்பார், சைகையில் தனக்கு என்ன வேண்டும் என்பதைத் தெரிவிப்பார்.”
அவர்கள் இருவரும் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பது சுற்றியிருந்த தங்களுக்குச் சிறிதும் தெரியாது என்று கூறிய அவர், சத்யராஜ் மட்டும் அவர் கூறுவதைச் சரியாகப் புரிந்துகொண்டு நடிப்பார். அந்த அளவுக்கு அவர்களிடயே ஆழமான புரிதல் இருந்தது,” என்று சங்கர் மணிவண்ணனுடன் படப்பிடிப்புத் தளத்தில் பார்த்தவை குறித்து பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார்.
‘மனைவியுடன் கோயிலுக்குப் போகும் பகுத்தறிவாளன்’
இயக்குநர் மணிவண்ணன், பகுத்தறிவாளர், கடவுள் மறுப்பாளர். ஆனால் “அவருடைய மனைவி தீவிர கடவுள் பக்தி கொண்டவர். காதல் ஓவியம் படப்பிடிப்பு தஞ்சையில் நடந்தபோது, இருவருக்கும் காதல் ஏற்பட்டு, குன்றத்துார் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்” என்றார் சங்கர்.
மேலும் விவரித்த சங்கர், “மனைவி அழைத்தால் அனைத்து கோயில்களுக்கும் செல்வார். எனக்குத் தெரிந்த வகையில் பல முன்னணி கோயில்களுக்கு அவரது மனைவி அவரை அழைத்துச் சென்றுள்ளார். மனைவி அழைத்ததற்காக உடன் செல்வார் என்றாலும் அவர் கடவுள் வழிபாட்டில் ஈடுபட மாட்டார். மனைவியின் சொல்படி கோயிலுக்கு காணிக்கை கொடுப்பார். ஆனால், கடவுள் மறுப்பு பற்றி அதிகம் பேசுவார். மனைவியைத் தனது கொள்கைக்கு இழுத்தது இல்லை,” என்று கூறினார்.
பட மூலாதாரம், M. R. Films International
‘தமிழ் சினிமாவின் பெருமை’
அமைதிப் படை இரண்டாம் பாகத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான சுரேஷ் காமாட்சியிடம் பிபிசி தமிழ் மணிவண்ணன் பேசியபோது, “நான் தயாரித்த முதல் படம் அமைதிப் படை-2. சினிமா தாண்டி அரசியல், இலக்கியம் என அனைத்தையும் பற்றி பல மணிநேரம் பேசக் கூடியவர். மனதில் தோன்றுவதை சிறு காகிதத்தில் எழுதி வைத்து அதைச் செயல்படுத்துவார். அமாவாசை 2 படப்பிடிப்பு நேரத்தில் நடக்க முடியாமல் உடல்நலக் குறைவால் சிரமப்பட்டார். யாரேனும் ஒருவரது தோளில் கை போட்டு நடப்பார்” என்று விளக்கினார்.
உடல்நலனில் சவால்கள் இருந்தபோதிலும், “படப்பிடிப்பில் அதை முற்றாக மறந்துவிட்டுத் தீவிரமாகப் பணியாற்றினார். தீவிர வாசிப்புப் பழக்கம் கொண்ட மணிவண்ணன், அவரைச் சந்திக்க வருவோருக்கும் புத்தகங்களைக் கொடுத்து வாசிக்குமாறு அறிவுறுத்துவார்.”
அவர் இருக்குமிடம் கலகலப்பாக, சிரிப்பொலி நிறைந்து இருக்கும் என்பதுடன், இரவில் எவ்வளவு தாமதமாகத் தூங்கினாலும், காலை 6 மணிக்குத் தயாராகி படப்பிடிப்புத் தளத்திற்கு வந்துவிடுவார் என்கிறார் சுரேஷ் காமாட்சி.
“அவருடைய உழைப்பு அபாரமானது. அமைதிப் படை வெற்றிக்குப் பிறகு அவர் மேலதிகமாக உற்சாகமடைந்தார். பல கம்பெனிகளுக்கு கதை சொன்னார். மணிவண்ணனை பொருத்தவரையில் அரசியல், கிரைம், காமெடி, குடும்பம், திரில்லர் என எல்லா ஜானரிலும் படம் எடுப்பவர், அதில் வெற்றியும் பெற்றவர்” என்கிறார் அவர்.
மணிவண்ணன், சத்யராஜ் கூட்டணி குறித்தும் அவர்களுடனான தனது அனுபவங்கள் குறித்தும் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, “அவர்கள் இருவருமே நல்ல நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அப்பாவும் அவரும் கூட்டணி சேர்ந்து உருவாக்கிய படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது அமைதிப் படை” என்றார்.
அத்துடன், “மணிவண்ணன் போன்ற இயக்குநர்கள் தமிழ் சினிமாவின் பெருமை” என்றும் திவ்யா சத்யராஜ் கூறினார்.
பட மூலாதாரம், TOI
‘அமைதிப் படை போன்றதொரு படைப்பு இன்று சாத்தியமில்லை’
அமைதிப் படை அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ள நடிகை கஸ்தூரி “ஸ்பாட்டில் சீன்களை மாற்றுவார், வசனங்களை எதிர்பாராத வகையில் திடீரென மாற்றுவார். அமைதிப் படை படத்தில் நான் கர்ப்பமாகி தவிக்கும் காட்சியில் மணிவண்ணன், சத்யராஜ் இருவருமே வசனங்களை மாற்றி, சீனை இன்னும் மேம்படுத்தினர்” என்று கூறினார்.
அதுமட்டுமின்றி, தமிழ் மொழி தெரிந்த கதாநாயகிகள் இவர்களைப் போன்ற ஒரு கூட்டணியில் நடிப்பது நல்ல அனுபவத்தைக் கொடுத்ததாகவும் கஸ்தூரி குறிப்பிட்டார்.
தன்னிடம் நிறைய புத்தகங்களைக் கொடுத்து மணிவண்ணன் படிக்க வைத்ததாகவும், அவருடன் பேசுவது வழக்கமானதாக இருக்காது, அறிவு சார்ந்த உரையாடலாக இருக்கும் என்றார் கஸ்தூரி. அதோடு, தனது ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் ஒவ்வோர் எழுத்தாளரின் தொகுப்பை பரிசாகக் கொடுப்பதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்ததாகவும், அவர் தனக்குக் கடைசியாக புதுமைப் பித்தன் கதைகளைக் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.
நடிகர் சத்யராஜ் அளித்த ஒரு பேட்டியில், அமைதிப் படை கதையைச் சொன்னபோது, “தலைவரே நான் இப்பதான் வில்லனாக இருந்து கதாநாயகனாக நடிக்கத் தொடங்கியுள்ளேன். இப்போது மீண்டும் வில்லனா?” என்று தயங்கியதாகக் குறிப்பிட்டார்.
பின்னர், படத்தின் கதையைக் கேட்டபிறகு, “தேர்தல் முடிவுகள் வெளியாகும் காட்சிகளைக் கேட்டு, வியந்து உடனடியாக அமைதிப் படையில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.”
படப்பிடிப்பு 70 நாட்கள் வரை நடந்ததாகவும், காரணத்தைக் கேட்டபோது படத்தைப் பெரிய விலைக்கு விற்றுவ்ட்டதாகவும் விநியோகஸ்தர்கள் ஏமாற்றமடைந்து விடக்கூடாது என்றும் மணிவண்ணன் கூறியதாக சத்யராஜ் குறிப்பிட்டார்.
மெலும், “அந்தப் படத்தில் வரும் பிரபலமான அல்வா கொடுக்கும் காட்சியை பொள்ளாச்சியில் ஒரு ஹோட்டல் மாடியில் மிகச் சாதாரணமாக எடுத்தோம். அமைதிப் படை மாதிரியான படத்தை இப்போது எடுக்க முடியாது. தணிக்கை வாரியம் வெளியிட அனுமதிக்காது” என்று குறிப்பிட்டார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு