
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
மதுரை, காளவாசல் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள ‘தனிஷ்க்’ நகைக்கடையில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன என காவல்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை மாநகரக் காவல் ஆணையர் ராஜேந்திரன், “இன்று (நவம்பர் 12) அதிகாலை மூன்று மணிக்கு இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. நகைக்கடையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மொத்த தங்க நகைகளில் சுமார் 30 சதவீதம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்றுவருகிறது” என்றார்.
“விசாரணை முடிவடையாமல் எதுவும் கூற முடியாது. முறையான புகார் கிடைத்ததை தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு தகவல் தெரிவிக்கப்படும். மூன்று உதவி ஆணையர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது,” என மதுரை மாநகர துணை ஆணையர் இனிகோ திவ்யன் தெரிவித்தார்.

இந்த நகைக்கடை திறக்கப்பட்டு 15 நாட்களே ஆகியுள்ள நிலையில், இதுவரை முறையான திறப்பு விழா நடைபெறவில்லை என்றும், கடையின் உள் அலங்காரம் உள்ளிட்ட சில பணிகளும் முழுமையாக நிறைவடையவில்லை என்றும் பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
இந்த ஷோரூமில் எவ்வளவு நகைகள் இருந்தன, திருடப்பட்ட நகைகளின் சரியான அளவு மற்றும் அவற்றின் மதிப்பு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.
