10
இங்கிலாந்தின் ஸ்டாக்போர்ட் (Stockport) பகுதியைச் சேர்ந்த ஒரு மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து, அவரை வன்புணர்ந்த மற்றும் பாலியல் வன்கொடுமை செய்த கணவன் மற்றும் அவனது கூட்டாளிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
60 வயதான அந்த கணவன் மீது 48 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2004ஆம் ஆண்டு முதல் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, அவன் தனது மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து, அவரை வன்புணர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். 2018ஆம் ஆண்டு முதல் அவன் கைது செய்யப்படும் வரை, ஏனைய ஆண்களுடன் சேர்ந்து, தனது மயக்க நிலையில் இருந்த மனைவியை பாலியல் வன்கொடுமை செய்யவும், வன்புணரவும் சதி செய்துள்ளான்.
அவன் 15 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளான். அவற்றில் 5 வன்புணர்வு, 3 பாலியல் வன்கொடுமை, 6 புணர்ச்சி வன்கொடுமை மற்றும் 3 ஆண்டுகளில் (மார்ச் 2022 முதல் ஒக்டோபர் 2025 வரை) தனிப்பட்ட படங்களைப் பகிர்ந்தமை ஆகியவை அடங்கும்.
வன்புணர்வு மற்றும் புணர்ச்சி வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் சில ஏனைய ஆண்களின் ஈடுபாட்டையும் குறிப்பிடுகின்றன. மீதமுள்ள குற்றச்சாட்டுகளை அவன் மறுக்கிறான்.
இந்த வழக்கில், 28 முதல் 73 வயதுக்குட்பட்ட 13 ஆண்கள் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களில் முன்னாள் கால்பந்து கிளப் உரிமையாளர் மற்றும் மூத்த மருத்துவ உதவியாளர் (paramedic) ஒருவரும் அடங்குவர். இவர்கள் அனைவரும் அதே பாதிக்கப்பட்ட பெண்ணுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.
இவர்களின் பெயர்கள் மற்றும் விவரங்கள், இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 26) நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட அறிக்கை தடை (reporting restrictions order) நீக்கப்பட்டதன் காரணமாக, இப்போது முதல் முறையாக வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.