1
இங்கிலாந்தின் டர்பி (Derby) பகுதியில் கார் ஒன்று மரங்களில் மோதி விபத்துக்குள்ளானதில், ஒரு கைக்குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.
சனிக்கிழமை இரவு சுமார் 11 மணியளவில், ஒரு சிவப்பு நிற ஹூண்டாய் (Hyundai) கார் A38 வீதியில் சென்று கொண்டிருந்தபோது, வீதியை விட்டு விலகி, மரங்களில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து A50 டொயோட்டா தீவுக்கும் (Toyota Island) A516க்கும் இடையில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் காரில் பயணித்த 18 மற்றும் 30 வயதுடைய இரு பெண்கள் மற்றும் 36 வயது ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பலத்த காயமடைந்த ஒரு பெண் கைக்குழந்தை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே உயிரிழந்தது. உயிரிழந்த அனைவரும் மேற்கு யார்க்ஷயரின் லீட்ஸ் (Leeds) பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
காரை ஓட்டிச் சென்ற 33 வயது மதிக்கத்தக்க நபர், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரும் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தைத் தொடர்ந்து பல மணிநேரம் மூடப்பட்டிருந்த அந்த வீதி தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களுக்கு சிறப்பு அதிகாரிகள் மூலம் ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது இது தொடர்பான ‘டேஷ்கேம்’ (dashcam) வீடியோக்கள் வைத்திருப்பவர்கள் பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.