• Tue. Jul 28th, 2026

24×7 Live News

Apdin News

இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா

Byadmin

Jul 28, 2026


நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது “மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை” சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு நேர்மையாக இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு விருதுகளையும் ரொக்க பரிசுகளையும் வழங்கி வருகிறார்.

அந்த வகையில் இந்த ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 இயற்கை விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருதும், தலா ரூ.5,000 ரொக்கப் பரிசும் வழங்கி கவுரவித்தார்.

ரொக்கப் பரிசு:

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் “நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சாவூரைச் சேர்ந்த 11 இயற்கை விவசாயிகளுக்கு எனது மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை மூலம் விருதும் ரொக்கப் பரிசும் வழங்கி, அவர்களுக்கான எனது நன்றியை வெளிப்படுத்தியுள்ளேன். இதை எனது வாழ்க்கையின் மிகப்பெரிய அர்த்தமுள்ள தருணங்களில் ஒன்றாக கருதுகிறேன்.

கடந்த ஆண்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 11 விவசாயிகளுக்கு விருதுகளும் ரொக்கப் பரிசுகளும் வழங்கினோம். அப்போது கிடைத்த வரவேற்பும், விவசாயிகளின் மகிழ்ச்சியும் இந்த ஆண்டும் இந்நிகழ்வை நடத்துவதற்கு ஊக்கமாக அமைந்தது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இன்றைய இளைஞர்கள் விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். உணவை உருவாக்கும் விவசாயிகளை மதிக்கும் மனப்பான்மை சமூகத்தில் வளர வேண்டும். இயற்கை விவசாயம் என்பது வெறும் விவசாய முறை மட்டுமல்ல; அது மண்ணையும், மனிதர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் வாழ்க்கை முறையாகும்.

மிகப்பெரிய நம்பிக்கை:

தற்போதைய “முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் அடுத்த ஜென்மம் என்று இருந்தால் நான் விவசாய மகனாக பிறப்பேன்” என்று கூறியிருந்தார். அதனால் கண்டிப்பான முறையில் விவசாயிகளுக்கு அவர் நல்லது செய்வார் என்று எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது.

விவசாயிகளைப் பாதுகாப்பதும், இயற்கை விவசாயத்தை மீட்டெடுப்பதும் நமது கடமையாகும். அதிகளவில் மரங்களை நட வேண்டும், நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும், நடப்பட்ட மரங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும். சுற்றுச்சூழலை காக்கும் பணிகளில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.

எனது மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை மூலம் வருங்காலங்களிலும் விவசாயிகள், மாணவர்கள் மற்றும் சமூக நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்” என்றார்.

By admin