
-
- எழுதியவர், ஃபெர்குஸ் வால்ஷ்
- பதவி, சுகாதாரப் பிரிவு ஆசிரியர்
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
பிரிட்டன் முழுவதும் சுமார் ஏழு லட்சம் பெண்கள், மார்பகப் புற்றுநோய் பரிசோதனையில் செயற்கை நுண்ணறிவு எவ்வாறு உதவ முடியும் என்பதை ஆய்வு செய்யும் உலகின் மிகப்பெரிய மருத்துவப் பரிசோதனையில் பங்கேற்க அழைக்கப்படவுள்ளனர்.
மார்பக எக்ஸ்-ரே படங்களான மாமோகிராம்களை ஆய்வு செய்ய ஏ.ஐ பயன்படுத்தப்படும். புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே சிறப்பாகக் கண்டறிவதுடன், மருத்துவப் பணியாளர்களின் பணிச் சுமையையும் குறைப்பதே இதன் நொக்கம். அதேநேரம், தேவையின்றி பெண்களுக்கு அதிகப்படியான நோயறிதல் ஏற்படாதவாறும் உறுதி செய்யப்படும்.
ஈடித் (EDITH) எனப்படும் இந்த ஆய்வில் பங்கேற்பாளர்களைச் சேர்க்கும் பணி ஏற்கெனவே கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மருத்துவமனைகளில் தொடங்கியுள்ளது. இது பிரிட்டன் முழுவதும் உள்ள 30 ஆய்வு மையங்களில் முதல் மையமாகும்.
பிரிட்டனில், 50 முதல் 71 வயதுக்கு உட்பட்ட பெண்கள் ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒருமுறை வழக்கமான மார்பகப் பரிசோதனைக்கு அழைக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் 20 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் இதில் பங்கேற்கின்றனர். தற்போது ஒவ்வொரு மாமோகிராம் படத்தையும் தேசிய சுகாதார சேவையின் இரண்டு நிபுணர்கள் ஆய்வு செய்கின்றனர். ஆனால், இந்தப் பரிசோதனைத் திட்டத்தில் அந்த இரண்டு மனித ஆய்வாளர்களில் ஒருவருக்குப் பதிலாக செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படும்.
சிறிய அளவிலான பல ஆய்வுகள் ஏற்கெனவே செயற்கை நுண்ணறிவு மார்பகப் புற்றுநோயைக் கண்டறியும் விகிதத்தை மேம்படுத்த முடியும் என்பதைக் காட்டியுள்ளன. இருப்பினும், தேவையின்றி பெண்களைக் கூடுதல் பரிசோதனைகளுக்காக மீண்டும் அழைக்கும் சூழ்நிலையை உருவாக்கி பாதிப்பை ஏற்படுத்தாதா என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்று இந்த ஆய்வை மேற்கொள்ளும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வார்விக் பல்கலைக்கழகத்தின் மக்கள்தொகை சுகாதாரப் பேராசிரியரும் இணை முதன்மை ஆய்வாளருமான சியான் டெய்லர்-பிலிப்ஸ், “ஏஐ உதவியுள்ள தொழில்நுட்பம், புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதை மேம்படுத்த உதவக்கூடும். ஆனால், எந்தவித அறிகுறிகளையும் ஏற்படுத்தாமல் இருந்திருக்கும் மிக லேசான நோய்களுக்குத் தேவையற்ற நோயறிதல் வழங்கப்படுவதைத் தவிர்க்க விரும்புகிறோம்,” என்று கூறினார்.
மார்பகப் புற்றுநோய், பிரிட்டனில் பெண்களிடையே அதிகம் காணப்படும் புற்றுநோயாகும். ஆண்டுதோறும் சுமார் 59,000 புதிய நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். இவற்றில் சுமார் மூன்றில் ஒரு பங்கு நோயாளிகள், வழக்கமான மாமோகிராம் பரிசோதனைகள் மூலம் கண்டறியப்படுகின்றனர். பெரும்பாலும் இவை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கப்படுவதால், சிகிச்சை அளிப்பதும் எளிதாகிறது.
இந்த மார்பகப் பரிசோதனைத் திட்டம் ஆண்டுக்கு சுமார் 1,300 உயிர்களைக் காப்பாற்ற உதவுகிறது என மதிப்பிடப்பட்டுள்ளது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கதிரியக்கவியல் துறை பேராசிரியரும் அடன்புரூக்ஸ் மருத்துவமனையின் கௌரவ ஆலோசகரும் இணை முதன்மை ஆய்வாளருமான பேராசிரியர் ஃபியோனா கில்பர்ட், “ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கான பெண்கள் மாமோகிராம் பரிசோதனை செய்துகொள்கின்றனர். அவர்களில் மிகச் சிறிய எண்ணிக்கையிலானோர் மட்டுமே, அதாவது ஒரு சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள்,” என்றார்.
“இந்தப் படங்களை ஆய்வு செய்வதை தொழில்நுட்பம் மேலும் திறமையானதாக மாற்ற முடியும். இதன் மூலம் மார்பகப் புற்றுநோயில் நிபுணத்துவம் பெற்ற கதிரியக்க மருத்துவர்கள், புற்றுநோயாளிகளின் நேரடி பராமரிப்பில் அதிக நேரம் செலவிட முடியும். மேலும் விரைவான நோயறிதலையும் ஆரம்பக்கட்ட சிகிச்சையையும் வழங்க இது உதவும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், கதிரியக்க மருத்துவர்களின் எண்ணிக்கையில் “மிகப்பெரிய பற்றாக்குறை” இருப்பதாகவும், மருத்துவப் படப் பரிசோதனைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் சும்மார் 8% அதிகரித்து வருவதாகவும் கில்பர்ட் பிபிசியிடம் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
‘பரிசோதனை என் உயிரைக் காப்பாற்றியது’
கேம்பிரிட்ஜ்ஷையரை சேர்ந்த 70 வயதான ஷிர்லி எசெக்ஸ் வழக்கமான மார்பகப் பரிசோதனையின்போது ஓர் ஆண்டுக்கு முன்பு ஆரம்ப நிலையிலேயே மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.
அவருக்கு அறுவை சிகிச்சையும் கதிர்வீச்சு சிகிச்சையும் வழங்கப்பட்டன. ஆனால், கீமோதெரபி சிகிச்சை தேவைப்படவில்லை. தனது மாமோகிராம் பரிசோதனை தனது உயிரைக் காப்பாற்றியதாக அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
“எனக்கு எந்த அறிகுறிகளும் இல்லை. எனவே எனக்கு புற்றுநோய் இருப்பதாகச் சொன்னபோது நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.”
ஷிர்லி இந்த ஆய்வுத் திட்டத்தில் பங்கேற்கவில்லை. இருப்பினும், மார்பகப் பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அவர் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார்.
“என் புற்றுநோய் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டதில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். அது என்னுடைய கடைசி வழக்கமான மாமோகிராம் பரிசோதனை. நான் அந்தப் பரிசோதனைக்குச் செல்லாமல் இருந்திருந்தால், என் புற்றுநோய் தொடர்ந்து வளர்ந்திருக்கும்,” என்று அவர் கூறினார்.
ஆய்வு எவ்வாறு நடக்கும்?
வழக்கமான மார்பகப் பரிசோதனைக்கான அழைப்புக் கடிதத்தைப் பெறும் பெண்களுக்கு இந்த ஆய்வு பற்றிய தகவலும் வழங்கப்படும். ஆனால், அவர்கள் இதில் கட்டாயமாகப் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை. இந்த ஆய்வு, மார்பகப் பரிசோதனையின் நடைமுறையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
அதற்குப் பதிலாக, மாமோகிராம் படங்களை ஆய்வு செய்யும் இரண்டு மனித நிபுணர்களில் ஒருவரை செயற்கை நுண்ணறிவு உதவியுள்ள கருவிகள் மாற்ற முடியுமா என்பதைச் சோதிக்கும்.
ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இயந்திரக் கற்றல் (Machine Learning) மென்பொருளை கோடிக்கணக்கான முந்தைய மருத்துவப் படங்களின் அடிப்படையில் பயிற்றுவிக்க முடியும். இதன் மூலம், மனிதக் கண்கள் தவறவிடக்கூடிய மார்பகத் திசுக்களில் ஏற்படும் மிகவும் நுண்ணிய மாற்றங்களைக்கூட அது கண்டறியக்கூடும்.
பட மூலாதாரம், Getty Images
இந்த ஆய்வின் ஒரு பிரிவில், செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மாமோகிராம் படங்களை முதலில் மதிப்பீடு செய்து, பின்னர் அவற்றை தேசிய சுகாதார சேவையின் நிபுணர்களுக்கு அனுப்பும்.
மற்றொரு பிரிவில், தேசிய சுகாதார சேவை நிபுணர்கள் ஆய்வு செய்த பிறகு, ஏஐ அந்தப் படங்களை மீண்டும் பரிசீலனை செய்யும்.
ஒரு கோடி பவுண்டுகள் மதிப்பிலான இந்த ஆய்வுக்கு, தேசிய சுகாதார மற்றும் பராமரிப்பு ஆராய்ச்சி நிறுவனம் (National Institute for Health and Care Research) நிதியுதவி வழங்குகிறது.
இந்த ஆய்வை வார்விக் பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மருத்துவமனைகள் தேசிய சுகாதார சேவை அறக்கட்டளை (Cambridge University Hospitals NHS Foundation Trust) ஆகியவை, தேசிய சுகாதார சேவை இங்கிலாந்துடன் இணைந்து முன்னெடுத்து வருகின்றன.
‘மிகப்பெரிய திறன் உள்ளது’
அடன்புரூக்ஸ் மருத்துவமனையின் மார்பகப் பரிசோதனை பிரிவுக்குச் சென்றிருந்த பிரிட்டன் சுகாதாரச் செயலாளர் இவெட் கூப்பர் பிபிசியிடம் பேசியபோது, “சிகிச்சை முறைகளை மேம்படுத்துவதில் செயற்கை நுண்ணறிவுக்கு மிகப்பெரிய திறன் உள்ளது. அதனால்தான் இதுபோன்ற ஆய்வுகள் அவசியம். போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், இந்தத் தொழில்நுட்பத்தை மிகவும் பயனுள்ள முறையில் பயன்படுத்துகிறோமா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்” என்றார்.
தேசிய சுகாதார சேவை இங்கிலாந்தின் புற்றுநோய் சிகிச்சைக்கான தேசிய மருத்துவ இயக்குநரான பேராசிரியர் பீட்டர் ஜான்சன், தேசிய சுகாதார சேவையின் மார்பகப் பரிசோதனை திட்டம் “உயிர்களைக் காப்பாற்றுகிறது” என்று கூறினார். மேலும், இந்த ஆய்வில் பங்கேற்க அழைக்கப்படும் ஒவ்வொரு பெண்ணையும் இதில் பங்கேற்குமாறு அவர் வலியுறுத்தினார்.
“ஒவ்வொரு ஸ்கேனும் தொடர்ந்து ஒரு மருத்துவ நிபுணரால் பரிசீலிக்கப்படும். இந்த முறை வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டால், பெண்கள் தேவையான நோயறிதலையும் சிகிச்சையையும் இன்னும் விரைவாகப் பெறுவதை உறுதி செய்ய முடியும்,” என்று அவர் தெரிவித்தார்.
சுமார் மூன்று ஆண்டுகள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த ஆய்வில், நான்கு செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் பங்கேற்று வருகின்றன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு