• Thu. Sep 17th, 2026

24×7 Live News

Apdin News

மருந்துண்டு உடல் தேற மறுத்துக் கிடந்தான் | நதுநசி

Byadmin

Sep 17, 2026


திலீபன் போலொரு
தியாகி இங்கில்லை.
தீங்கென்று தெரிந்தும்
தீரத்தோடு நடந்தான்.

தீராது தொடரும்
நெடுங்காலக் குழப்பம்
தீருமென்று எண்ணி
தீக்குளித்தான் பசியோடு.

பார்த்தவர் விழியது
கலங்கி நீர்சொரிய
பார்த்தீபன் வார்த்தை
கோர்த்துப் பேசினான்.

பொறுப்பைச் செய்தான்
வெறுப்பின்றி அன்று.
கனவெனும் தாயகத்தை
தன் மனதில் சுமந்து.

மக்கள் புரட்சி வெடிக்கும்
நாளை புதிய ஈழம்
தமிழர்க்கென்று இங்கே
தோன்றும் என்றான்.

விண்ணில் தானும்
ஒரு நச்சத்திரமாய்
சுதந்திர தமிழ் ஈழத்தை
காண்பேன் என்றுரைத்தான்.

வாய்வீரம் பேசும் போலி
போலில்லை இவர்கள்.
வாள்வீசும் வீரத்தோடு
களத்திடை துணிந்தவர்.

உடல் உருக்கி அதில்
உருக்குலைந்து போக,
சிறு தளர்வேனும் தன்
கொள்கையில் இல்லை.

நாவெடித்து நரகவலி
உதடு வறண்டு எரிந்து
உயிரோடு இருந்து அவன்
கொடும் வலி சுமந்தான்.

கொண்ட கொள்கையில்
பின்வாங்க மறுத்து
மருந்துண்டு உடல் தேற
மறுத்துக் கிடந்தான்.

ஈற்றில் உயிர் துறந்து
திலீபன் ஆனான்
உடல் சுருங்கிக் கருகிய
தேகமாய்க் கறுகறுத்து.

நெஞ்சம் கனத்து என்
மனமும் உணர்ந்தது.
அன்று பார்த்தீபன்
பட்டபாடு என்னவென்று.

மௌனத்தோடு அந்த
பாரத நாடு இருந்தது.
வினைஎறிந்து விளைவு
அறுவடை செய்திடவென்று.

முடிந்து போகாது இந்த
புறவரசியல் கொள்கை.
ஒருநாள் சுடும் விரலை
திலீபன் தியாகத்தின் விடையாய்.

நதுநசி

By admin