• Thu. Nov 5th, 2026

24×7 Live News

Apdin News

மாநில மின்சார விநியோக நிறுவனங்களுக்கு மின் சேமிப்பு கட்டாயம்: இந்தியாவில் அறிவிப்பு

Byadmin

Nov 5, 2026


இந்தியாவில் மின்சாரத்திற்கான கிராக்கி அதிகரிக்கும் நேரங்களில் பயன்படுத்துவதற்காக, மாநில மின்சார விநியோக நிறுவனங்கள் மின்கல சேமிப்புக் கட்டமைப்புகளை ஏற்படுத்துவது விரைவில் கட்டாயமாக்கப்படவுள்ளது.

புதுடெல்லியில் இடம்பெற்ற பாரத் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மாநாட்டில் உரையாற்றிய இந்திய மின்சக்தி அமைச்சின் செயலாளர் பங்கஜ் அகர்வால் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான அனுமதிப்பத்திரம் பெற்றுள்ள அனைத்து நிறுவனங்களும், குறிப்பாக மாநில மின்சார விநியோக நிறுவனங்களும் மின்சார சேமிப்பு வசதிகளை நிறுவுவதை கட்டாயமாக்கும் புதிய விதிமுறைகள் மிக விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பகல் வேளைகளில் சூரிய ஒளி உள்ளிட்ட வழிகளில் உற்பத்தியாகும் மேலதிக புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை சேமித்து வைத்து, உச்ச தேவை காணப்படும் மாலை மற்றும் இரவு நேரங்களில் விநியோகிப்பதே இந்த ஒழுங்குமுறையின் பிரதான நோக்கமாகும்.

மின்சாரத்தை கொள்வனவு செய்யும் மாநில நிறுவனங்களிடம் போதுமான மின்கல சேமிப்பு கட்டமைப்புகள் இன்மையால், இவ்வருடம் இந்தியாவின் பல்வேறு பிராந்தியங்களிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் கடுமையான மின்சாரத் தட்டுப்பாடு நிலவியமை பதிவாகியுள்ளது. எனினும், ஒவ்வொரு நிறுவனமும் பராமரிக்க வேண்டிய மின்சார சேமிப்பு கொள்ளளவின் துல்லியமான விபரங்கள் இன்னும் உத்தியோகபூர்வமாக இறுதி செய்யப்படவில்லை என செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 300 ஜிகாவாட்டை விடவும் அதிகமான புதைபடிவமற்ற மின்னுற்பத்தி திறன் காணப்படுகின்ற போதிலும், உற்பத்தியாகும் உபரி மின்சாரத்தை சேமிக்க வசதிகள் இன்மையால், மாலை வேளைகளில் ஏற்படும் கூடுதல் தேவையை சமாளிக்க நிலக்கரி அடிப்படையிலான அனல் மின்னுற்பத்தியை தீவிரமாக நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அதேவேளை, எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக போதிய மழைவீழ்ச்சி கிடைக்காமையால் நீர்மின் உற்பத்தியிலும் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இந்நிலையை கருத்தில்கொண்டு, மின்சார சேமிப்பு உட்கட்டமைப்பு திட்டங்களை விரிவுபடுத்துவதற்காக 145 பில்லியன் இந்திய ரூபாய் நிதியொதுக்கீட்டிலான திட்டமொன்றுக்கு இந்திய மத்திய அரசாங்கம் கடந்த புதன்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் சகல புதிய சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்களிலும் மின்கல சேமிப்பு வசதிகளை கட்டாயமாக்குவதற்கும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

By admin