பட மூலாதாரம், Getty Images
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
சிறுநீரகத்தில் கற்கள் என்றால் சிறிய தனித்தனி கற்கள் தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், மான் கொம்பு வடிவிலும் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படக் கூடும். இது ஒரு குறிப்பிட்ட பிரிவினர், அல்லது இணை நோய் கொண்டவர்கள் என்றில்லாமல் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சிறுநீரகத்தில் ஏற்படும் மான் கொம்பு கல் எதனால் உருவாகிறது, எதனால் அந்த வடிவில் இருக்கிறது, அதன் பாதிப்புகள் என்னவென்று மருத்துவர்களின் கருத்துகளுடன் இந்தக் கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.
ஏன் மான்கொம்பு வடிவில் உள்ளது?
இந்த கல் சிறுநீரகத்தில் சிறுநீரை சேகரித்து வைக்கும் கேலிக்ஸ் (calycs) என்ற பகுதியில் உருவாகிறது. மரக்கிளை போன்ற வடிவில் கேலிக்ஸ்-ன் உட்பகுதி இருக்கும். அதில் சிறிய அளவில் உருவாகும் கல், கேலிக்ஸ் பகுதி முழுவதும் வளரும் போது, மான் கொம்பு போன்ற வடிவில் காணப்படுகிறது. இது ஆங்கிலத்தில் ‘ஸ்டேகோர்ன் ஸ்டோன்’ (staghorn stone) எனப்படுகிறது. ‘ஸ்டேகோர்ன்’ என்றால் மான் கொம்பு என அர்த்தம்.
பட மூலாதாரம், Instagram/draksurology
இந்த கல் எதனால் உருவாகிறது?
இந்த வகையிலான கல், பாக்டீரியா தொற்று மற்றும் வளர்சிதை மாற்றங்கள் (நாம் உண்ணும் உணவை உடலில் சக்தியாக மாற்றும் உயிரியல் நிகழ்வுகள்) காரணமாக உருவாகக் கூடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சிறுநீரகத்துக்கு அருகில் ஏற்படும் பாக்டீரியா தொற்று இந்த கல் உருவாவதற்கு முக்கிய காரணிகளில் ஒன்று என, சிறுநீரகவியல் அறுவை சிகிச்சை மூத்த மருத்துவர் தீபக் ராகவன் கூறுகிறார். “சிறுநீரில் யுரியா (urea) எனும் கழிவு உள்ளது. அதை சிதைக்கும் திறன் கொண்ட பாக்டீரியாக்களே இந்த தொற்று ஏற்பட முக்கிய காரணம். அவற்றில் ப்ரோடியஸ் (Proteus) எனும் பாக்டீரியாவே பல நேரங்களில் தொற்றை ஏற்படுத்துகிறது” என்கிறார் அவர்.
பட மூலாதாரம், Deepak Raghav
பெண்களில் அதிகம் ஏற்பட காரணம் என்ன?
அடிக்கடி சிறுநீர் தொற்று ஏற்படுபவர்களில் இந்த பாக்டீரியா தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். “பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கே சிறுநீர் தொற்று அடிக்கடி ஏற்படக்கூடும். இதற்கு பெண்களின் சிறுநீர் குழாய் அமைந்திருக்கும் விதம் ஒரு காரணமாகும். சிறுநீரகத்தில் சாதாரண கற்களை கொண்ட நோயாளிகளை விட மான்கொம்பு கல் கொண்ட நோயாளிகளின் எண்ணிக்கை குறைவே” என்று சிறுநீரகவியல் மருத்துவர் வி.பலராமன் கூறுகிறார்.