• Fri. Oct 30th, 2026

24×7 Live News

Apdin News

முகமற்ற மனிதன் | வசந்ததீபன்

Byadmin

Oct 30, 2026


பூங்கொத்துக்களோடு போனேன்
துவக்கோடு அவன் வழிமறித்தான்
திடுக்கிட்டேன்
பரிசோதிக்க வேண்டும் என்றான்
அனுமதி நான் கொடுப்பதற்கு முன்பே
எனது உடைகளை அவிழ்க்கச் சொல்லியபடி
என்னை நிர்வாணப்படுத்த ஆரம்பித்தான்
பூக்களின் இதழ்கள் நிலத்தில் உதிர்ந்தன
உடைகள் கிழிபட நான் ஏதும் இயலாது நின்றேன்
குற்றப்படுத்த ஆதாரங்களற்று பூங் கொத்துக்களை ஆராய்ந்த படி…
உள்ளே வெடிகுண்டு உண்டா… ? என்றான்
நான் புன்னகைத்தபடி அமைதியாய் இருந்தேன்
முகத்தில் வெறுப்பு வழிய
” எங்கே போகிறாய்?.. ” எனக் கேட்டான்
குளிர்ந்த குரலில் நான் சொன்னேன்
” கோவிலுக்குப் போகிறேன்…”
கோவிலா…?
ஆம்… நடுகற்கள் நிற்கும்
கல்லறை நிலங்களுக்கு…
கேட்டவனின் முகம்
மறையத் தொடங்கியது.
🦀
வசந்ததீபன்

The post முகமற்ற மனிதன் | வசந்ததீபன் appeared first on Vanakkam London.

By admin