3
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் சுப்பர் லிக் சம்பியன்ஷிப்பின் ஏழாவது வாரப் போட்டிகள் இன்று செவ்வாய்க்கிழமை (01) நிறைவடையவுள்ள நிலையில் தத்தமது முதலாவது வெற்றிக்கான தாகத்துடன் கொட்டாஞ்சேனை ரட்னம் கழகமும் வென்னப்புவை நியூ யங்ஸ் கழகமும் ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன.

இந்தப் போட்டி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
ரட்னம் கழகம் இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் தொல்வி அடைந்துள்ளது.
நியூ யங்ஸ் கழகம் 4 தோல்விகளை சந்தித்துள்ளதுடன் 2 போட்டிகளை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டுள்ளது.
இதன் காரணமாக இந்த இரண்டு அணிகளும் தரமிறக்கல் சுற்றில் விளையாடவுள்ளன.

ரட்னம் கழகம் 2 கோல்களை மாத்திரம் போட்டுள்ளதுடன் 26 கோல்களை எதிரணிகளுக்கு விட்டுக்கொடுத்துள்ளது.
நியூ யங்ஸ் கழகம் 4 கோல்களைப் போட்டுள்ளதுடன் 28 கோல்களை எதிரணிகளுக்கு விட்டுக்கொடுத்துள்ளது.

இந்த இரண்டு அணிகளினதும் பெறுபேறுகள் மிக மோசமாக இருக்கின்றபோதிலும் தங்களது கௌரவத்தைக் காப்பாற்றிக்கொள்ளும் வகையில் முதலாவது வெற்றியை ஈட்டும் குறிக்கோளுடன் இன்றைய போட்டியை எதிர்கொள்கின்றன.
இரண்டு கடைநிலை அணிகள் மோதும் இந்தப் போட்டி பரபரப்பை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.