“மூன்று துறைகளின் கோப்புகள் என் மேஜையில் உள்ளன” – இன்று சட்டப்பேரவையில், தங்கள் மீது ஆளும் அரசு வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு திமுகவினர் ஆதாரம் கேட்ட நிலையில், முதலமைச்சர் விஜய் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஒவ்வொரு துறைகள் சார்ந்த மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த வரிசையில் இன்று நீர்வளத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை உள்ளிட்ட துறைகள் தொடர்புடைய மானியக் கோரிக்கைகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
அப்போது திமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான ஐ.பெரியசாமி ஊரக வளர்ச்சித் துறை குறித்துப் பேசினார். அதற்கு நீர்வளத் துறை அமைச்சர் என்.ஆனந்த் பதிலளித்தார்.
அப்போது இருவரும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். விவாதத்திற்கு மத்தியில் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை வழங்க வேண்டும் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பதில் அளிக்கும் வகையிலேயே முதல்வர் விஜய் கருத்துக்களை பதிவிட்டார்.
முன்னாள் அமைச்சர் பெரியசாமி கேள்வியும் அமைச்சர் ஆனந்த் பதிலும்
பட மூலாதாரம், Tamil Nadu Assembly
படக்குறிப்பு, முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி
“கடந்த ஐந்து ஆண்டுகளில் ‘கலைஞர் கனவு இல்லத் திட்டம்’ மக்கள் மனதில் நீங்காத இடம்பெற்றுள்ளது. கடந்த ஆட்சியில் 2030-ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் வீடுகள் கட்ட வேண்டும் எனக் கணக்கிட்டு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வீடுகள் கட்ட வேண்டும் என முடிவு செய்யப்பட்டு முதலாம் ஆண்டில் ரூ.3,500 கோடி செலவில் 1 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. இரண்டாம் ஆண்டிலும் 1 லட்சம் வீடுகளுக்கான பணிகள் தொடங்கப்பட்டு 80% பணிகள் நிறைவடைந்துவிட்டன.
நீங்கள் அந்தத் திட்டத்தை வெற்றி வீடு கட்டும் திட்டம் என மாற்றி ஒரு வீட்டுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என அறிவித்தீர்கள். ஆனால் வீடுகளின் எண்ணிக்கையை 70,000 ஆக குறைத்துவிட்டீர்கள். ஒதுக்கீடு தொகை அதே ரூ.3,500 கோடி தான். ஆனால் வீடுகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. ஐந்து ஆண்டுகளில் 3.5 லட்சம் வீடுகள்தான் கட்டிமுடிக்க முடியும்.” என்றார்.
பட மூலாதாரம், Tamil Nadu Assembly
படக்குறிப்பு, அமைச்சர் என்.ஆனந்த்
இதற்குப் பதிலளித்துப் பேசிய ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், “நீங்கள் 1 லட்சம் வீடுகள் என்று கூறுகிறீர்கள். ஆனால் நாங்கள் நேரில் சென்று பார்த்தபோது பல வீடுகளில் அடித்தளம் மட்டுமே போடப்பட்டிருக்கிறது. அந்த தொகை அவர்களுக்குப் போதுமானதாக இல்லை. அதனால் தான் ரூ.5 லட்சமாக உயர்த்தலாம் என முதலமைச்சர் முடிவு செய்து இன்று உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது பணிகள் வெவ்வேறு நிலையில் உள்ளன. தேவையான தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.
அதன்பிறகு பேசிய ஐ.பெரியசாமி, “திட்டம் தொடங்கியபோது இருந்ததைவிட தற்போது கட்டுமானப் பொருட்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்தத் தொகையும் போதுமானதாக இருக்காது.” என்றார்.
அதனைத் தொடர்ந்து மீண்டும் பேசிய அமைச்சர் ஆனந்த், “நீங்கள் 8 லட்சம் வீடுகள் கணக்கெடுத்ததாகச் சொல்கிறீர்கள். உண்மையாகச் சொல்லப்போனால் அதில் பல தவறுகள் நடந்துள்ளது என்பதை நான் திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன். வீடு இருப்பவர்களுக்கே வீடுகள் கொடுக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.
அதன்பிறகு கடந்த ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் புதிய நிதிநிலை அறிக்கையில் உள்ள திட்டங்கள் தொடர்பாகவும் இருவரும் பரஸ்பரம் கேள்விகளை எழுப்பி பதிலளித்துக் கொண்டனர்.
இதற்கிடையே பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனும் குறுக்கிட்டுப் பேசியிருந்தார்.
குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை வழங்க வேண்டும் என திமுக உறுப்பினர்கள் சார்பில் குரல் எழுப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் விஜய் பேசுவதற்காக எழுந்தார். அப்போது அவர், “ஆதாரம், ஆதாரம் எனக் கேட்கிறார்கள். கடந்த வாரம் நிதியமைச்சர் பேசும்போது மூன்று துறைகளை ஆய்வு செய்து அந்த கோப்புகள் எனது மேசையில் தான் இருப்பதாகக் கூறினார். அவர் போகிற போக்கில் அதைச் சொல்லவில்லை, உண்மையில் அவை என் மேசையில் இருக்கின்றன. அத்தனையும் ஆதாரத்தோடு இருக்கிறது. திறக்க வைத்துவிடாதீர்கள். எதை, எப்போது திறக்க வேண்டுமோ அவை அப்போது திறக்கப்படும்.” என்று கூறினார்.
“மக்களிடம் எப்போது, எப்படி, என்ன பேச வேண்டும் என்பதை பேசிவிட்டு தான் அன்பாக, ஆசையாக எங்கள் எல்லோரையும் இங்கு அமர வைத்திருக்கிறார்கள். நான் பேசுவேன், பேசக்கூடாது என்று இல்லை. இடைத்தேர்தலிலாவது சிலருக்கு நல்லது நடக்கும் வேண்டும்.” என்று கூறி முடித்தார்.
திமுகவின் பதில் என்ன?
பட மூலாதாரம், X/RS Bharathi
படக்குறிப்பு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “முதலமைச்சர் கோப்பு இருக்கிறது என்று பேசிக்கொண்டு மட்டுமே இருக்கக்கூடாது. கோப்பு இருக்கிறதென்றால் அவற்றை சட்டப்பேரவையிலோ அல்லது பொதுவெளியிலோ வெளியிட வேண்டும். வழக்குத் தொடர வேண்டும்.
அப்படிச் தொடர்ந்தாலும் அதனை எதிர்கொள்ள திமுக தயாராக இருக்கிறது. முதலமைச்சர் திமுகவை அச்சுறுத்துவதாக நினைத்துக் கொண்டு பேசக்கூடாது. அது வெறும் கவனம் ஈர்க்கும் உத்தியாக மட்டுமே உள்ளது. திமுக நிறையச் சந்தித்திருக்கிறது. இனி என்ன வந்தாலும் சந்திப்போம். தவெக அரசு 100 நாட்களில் செய்ததை நாங்களும் சேகரித்து வைத்துள்ளோம். அவர்கள் வெளியிடுகிறபோது நாங்களும் வெளியிடுவோம்.” என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் துரை கருணா, “கடந்த வாரம் நிதியமைச்சர் பேசியதைத் தான் முதலமைச்சர் இன்று மீண்டும் கூறியிருக்கிறார். அவர் பேசியதால் மட்டும் எதுவும் நடந்துவிடாது. விவாதத்திற்கு வேண்டுமானால் இது நன்றாக இருக்கலாம்.
ஆனால் நிர்வாகக் கண்ணோட்டத்தில் பார்க்கையில் அந்த அறிக்கைகளைச் சமர்பித்து விவாதத்துக்கு உட்படுத்துவதே சிறந்ததாக இருக்கும். தணிக்கை அறிக்கைகளை எப்போது சட்டப்பேரவையில் சமர்பிப்பது என்பது அரசாங்கம் எடுக்க வேண்டிய முடிவு. இந்தக் கோப்புகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான முகாந்திரம் இருக்கிறதென்றால் அதனைச் செய்ய வேண்டும்.” என்றார்.