• Fri. Oct 16th, 2026

24×7 Live News

Apdin News

முஸ்லிமாக மதம் மாறுவோருக்கு இடஒதுக்கீட்டை மறுப்பது ஆயிரக்கணக்கான குடும்பங்களை எப்படி பாதிக்கும்?

Byadmin

Oct 16, 2026


உச்சநீதிமன்றம்

    • எழுதியவர், யாழினியன்
    • பதவி, செய்தியாளர், பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

“இந்து மதத்தில் இருந்தபோது, சமூக அந்தஸ்தின் அடிப்படையில் ஒருவர் பெற்று வந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு உரிமையை, அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிறகு பெற முடியாது” என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அக்டோபர் 15 அன்று உறுதி செய்துள்ளது.

இந்தத் தீர்ப்பால் மதம் மாறிய முஸ்லிம்களின் குழந்தைகள் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டின் பலன்களைப் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்றும், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படும் என்றும் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், மதம் மாறிய முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாகவும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுத் தாக்கல் செய்வது உள்ளிட்ட சட்டபூர்வ நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருவதாகவும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?

லைவ் லா செய்தியின்படி, நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, ஸ்ரீ சந்திரசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

தமிழ்நாடு அரசு 2024ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதுகுறித்த லைவ் லா செய்தியின்படி, “ஒருவர் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதால் மட்டுமே, மாநிலத்தில் உள்ள ஏழு முஸ்லிம் பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் ஒன்றைச் சேர்ந்தவராகிவிட முடியாது. அவர் முன்பு கொண்டிருந்த சாதி அந்தஸ்தை முஸ்லிம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் அந்தஸ்தாக மாற்றிக்கொள்ள முடியாது. அதேபோல, அவரது மத அமைப்பு மட்டுமே வைத்து அவர் அத்தகைய இட ஒதுக்கீட்டைப் பெறத் தகுதியானவர் என்று இறுதியாகத் தீர்மானிக்கவும் முடியாது” என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

By admin