• Mon. Jun 22nd, 2026

24×7 Live News

Apdin News

மேகதாது அணையின் தேவையை ஏற்காத தமிழ்நாடு நடுவர் மன்றத்தை எப்படி ஏற்கும்?: கர்நாடகத்தின் குரலாக ஒலிக்கக் கூடாது!- அன்புமணி

Byadmin

Jun 22, 2026


அதேபோல், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என்பது 1990-ஆம் ஆண்டில் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, அதில் 16 ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டு, 2007-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையிலும், அதில் சில மாற்றங்களைச் செய்து 2018-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல் அடிப்படையிலும் உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும். அதில் தமிழக அரசின் நீர்வளத்துறை செயலாளரும் உறுப்பினராக இருக்கிறார். அந்த அமைப்பின் அதிகாரங்கள் தொடர்பாக நிறைய குறைகள் உள்ளன என்பதில் ஐயமில்லை. ஆனாலும் கூட தமிழ்நாட்டை மீறி, மேகதாது அணை சிக்கலில் அந்த அமைப்பால் எதையும் செய்து விட முடியாது.

2007-ஆம் ஆண்டில் காவிரி நடுவர் மன்றம் அளித்தத் தீர்ப்பிலும், 2018-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பிலும், இதற்கு முன் காவிரி நீர்ப் பகிர்வு தொடர்பாக செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களிலும் கடைமடை பாசன மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகம் புதிய அணையை கட்ட முடியாது என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. மேகதாது அணை சிக்கல் தொடர்பாக கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பர் 13-ஆம் தேதி அளித்த தீர்ப்பிலும் கூட,‘‘ ஒரு மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட நீரை அந்த மாநில எந்த வகையில் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள முடியும்; அதில் இன்னொரு மாநிலம் தலையிட முடியாது. ஆனாலும் கூட ஒரு மாநிலத்தின் நடவடிக்கையால் இன்னொரு மாநிலத்திற்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அதை எதிர்த்து முறையிட முடியும்’’ என்று தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் தமிழ்நாட்டுக்கு சாதகமான சட்ட அம்சங்கள் ஆகும்.

அதுமட்டுமின்றி, மேகதாது அணை சிக்கல் தொடர்பாக மக்களவையிலும், கடிதங்களின் மூலமாகவும் தொடர்ந்து நான் எழுப்பிய வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் 09.06.2015-ஆம் நாள் எனக்கு கடிதம் எழுதிய அப்போதைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி அவர்கள், மேகதாது அணைக்கு அனுமதி கோரி எதிர்காலத்தில் விண்ணப்பிக்கப்பட்டாலும் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் அதை பரிசீலிக்க மாட்டோம் என்று உறுதியளித்திருந்தார்.

மேலும்,‘‘கர்நாடகத்தில் காவிரி ஆற்றில் அணை கட்டாமல் ஓடும் நீரில் மின்சாரம் தயாரிப்பதற்கான சிவசமுத்திரம் நீர்மின்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை மட்டுமே மத்திய நீர்வள ஆணையத்திற்கு கர்நாடக மின்கழகம் அனுப்பியுள்ளது. மாநிலங்களிடையே பாயும் நதியான காவிரியில் எந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதாக இருந்தாலும் அதுகுறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதால், அதன்படி அந்த மாநிலங்களின் கருத்துக்களைக் கேட்டு, அதையும் விரிவான திட்ட அறிக்கையுடன் இணைத்து அனுப்ப வேண்டும்; அப்போது தான் மாநிலங்களுக்கு இடையிலான கோணத்தில் ஆய்வு செய்ய முடியும் என்று கூறி விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டது’’ என்றும் அந்தக் கடிதத்தில் உமாபாரதி கூறியிருந்தார். மேகதாது விவகாரத்தில் தமிழகத்திற்கு சாதகமாக இவ்வளவு அம்சங்கள் இருக்கும் நிலையில், அவற்றை புறந்தள்ளி விட்டு, புதிய நடுவர் மன்றம் அமைக்கக் கோருவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது.

மேகதாது அணை விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தான் தீர்வு என்று த.வெ.க. அரசு கருதியிருந்தால், அதை ஏன் தனித் தீர்மானத்தில் முதலிலேயே தெரிவிக்கவில்லை? உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களும், திமுக வழக்கறிஞர்களும் தெரிவித்த ஆலோசனைகளின் அடிப்படையில் தான் இப்படி ஒரு நிலைப்பாட்டை அரசு எடுத்ததாகவும் பொதுப்பணித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். காவிரி சிக்கலில் அரசால் ஏற்றுக்கொள்ளப் பட்ட நிலைப்பாட்டுக்கு மாறாக புதிய நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்றால் அது குறித்து மற்ற அரசியல் கட்சிகளிடமும், விவசாயிகள் அமைப்புகளிடமும் விவாதித்து கருத்தொற்றுமை அடிப்படையில் தான் செய்ய முடியும். மாறாக சிலரது ஆலோசனையின் பேரில் அரசே தன்னிச்சையாக முடிவெடுத்து திணிக்க முடியாது.

மேகதாது அணை விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையில்லை என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு. தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளின் நிலைப்பாடும் இது தான். விவசாயிகளின் நலன் காப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி புதிய நடுவர் மன்றம் அமைக்கப்படுவதை ஒருபோதும் ஏற்காது. மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் தெளிவான நிலைப்பாட்டை வகுப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக அழைக்க வேண்டும்.

By admin