பட மூலாதாரம், @bageshwardham
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
பாகேஷ்வர் பாபா என அழைக்கப்படும் இந்து மத குரு தீரேந்திர சாஸ்திரிக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யக் கோரி கொல்கத்தாவின் பவானிபூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தீரேந்திர கிருஷ்ண கர்க் (தீரேந்திர சாஸ்திரி என்றும் அழைக்கப்படுகிறார்) கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹௌரா மாவட்டத்தின் லிலுவாவில் நடைபெற்ற ஒரு நிகழ்வில், துர்கா பூஜை காலத்தில் இந்துக்கள் சைவ உணவைப் பின்பற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த வேண்டுகோள் மேற்கு வங்க அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வங்க கலாசாரம் அவமதிக்கப்படுவதாகவும், அதற்கு மாநிலத்தில் ஆட்சி நடத்தும் பாஜக அரசு ஆதரவு தருவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
மற்றொரு புறம், மேற்கு வங்க பாஜக மாநிலத் தலைவர் சாமிக் பட்டாச்சார்யா, தீரேந்திர சாஸ்திரியின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், அந்தக் கருத்தை நிராகரித்துள்ளார்.
காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில் என்ன கூறப்பட்டுள்ளது?
தீரேந்திர சாஸ்திரிக்கு எதிராக தெற்கு கொல்கத்தா மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பிரதீப் பிரசாத், பவானிபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவர் கொல்கத்தா காவல்துறையிடம் தீரேந்திர சாஸ்திரிக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.
“அவர் (தீரேந்திர சாஸ்திரி), துர்கா பூஜை காலத்தில் இறைச்சி உண்பதற்காக வங்காள மக்களை ‘பாசாங்குக்காரர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். அரைகுறைத் தகவல்களைக் கொண்ட இந்த கருத்தை நாங்கள் கண்டிக்கிறோம். அவர் மேற்கு வங்க மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.
“முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் முன்னிலையில், ஒரே சிந்தனையுடையவர்களின் ஆதரவுடன் லிலுவாவில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், அவர் ஆபத்தான தன்மை கொண்ட கருத்துகளை கூறியுள்ளார். அவை வங்காள மக்களின் உணர்வுகளை ஆழமாக புண்படுத்துகின்றன. அவரின் கருத்து ஊடகங்களில் பரவலாக கவனம் பெற்றுள்ளன, எனவே இந்த விவகாரத்தில் உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டும்,” என காவல்துறையிடம் அளிக்கப்பட்ட புகாரில் கூறப்பட்டுள்ளது.
“அவர் மிகவும் ஆட்சேபனைக்குரிய கருத்துகளைப் பேசியுள்ளார். எங்கள் மாநிலத்தில் போற்றப்படும் திருவிழாவான துர்கா பூஜை காலத்தில் மக்கள் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக் கூடாது என்று அவர் அறிவுரை கூறியுள்ளார். மேலும் ‘அழுக்கு சமையல்’ (dirty cooking), ‘பாசாங்குக்காரர்கள்’ போன்ற வார்த்தைகளையும் பயன்படுத்தியுள்ளார். துர்கா பூஜை காலத்தில் பல விஷயங்கள் அவருக்குப் பிடிக்கவில்லை என்று அவர் கூறியிருப்பது, வங்காள மக்கள் மற்றும் துர்கா பூஜையுடன் தொடர்புடைய உணர்வுகளுக்கு எதிரானதாகும்.”
“எனவே உடனடியாக நிர்வாக நடவடிக்கை எடுத்து, தேவையான கைது நடவடிக்கைகளுடன் எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். ஏனெனில், வங்காள மக்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர். இது சமூகத்தில் அமைதியின்மையையும் பிளவையும் உருவாக்குகிறது. இது ஜனநாயக மற்றும் அமைதியான மனப்பாங்குக்கு எதிரானது.”
பட மூலாதாரம், Congress
பாஜக என்ன விளக்கம் அளித்துள்ளது?
“வங்காள மக்கள் மீனும் இறைச்சியும் சாப்பிடாமல் எப்படி இருப்பார்கள்? சுவாமி விவேகானந்தரும் கூட காளி அம்மனுக்கு ஆட்டிறைச்சி படைக்கப்படும் என்று கூறியுள்ளார். யாராவது விவேகானந்தரை விட மேலானவராகத் தன்னை நிலைநாட்ட முயன்றால் அது ஆபத்தானது. இது அவருடைய தனிப்பட்ட கருத்து” என சாமிக் பட்டாச்சார்யா திங்கட்கிழமை கூறினார்.
பாகேஷ்வர் தாமின் தலைமை பூசாரியான 30 வயது தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரியின் பெயரை சாமிக் பட்டாச்சார்யா குறிப்பிடவில்லை.
அவர் ஹௌரா மாவட்டம் லிலுவாவில் நடைபெற்ற மூன்று நாள் ஹனுமந்த் கதா நிகழ்ச்சிக்காக மேற்கு வங்கத்துக்கு சென்றிருந்தார்.
சனிக்கிழமை, மேற்குவங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி மாநிலத்தின் கூட்ட அரங்கு ஒன்றில் ஒரு விருந்து நிகழ்ச்சியை நடத்தினார்.
இந்த இரவு விருந்தில் அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்கள் கலந்துகொண்டனர். முதலமைச்சர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை எக்ஸ் தளத்தில் அதன் புகைப்படங்களை பகிர்ந்து, அவரை “பாகேஷ்வர் மகாராஜ்” என்று குறிப்பிட்டது.
ஞாயிற்றுக்கிழமை லிலுவா நிகழ்ச்சியில் உரையாற்றிய தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி, “தயவுசெய்து தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஆனால் மேற்கு வங்கத்தில் எனக்கு பிடிக்காத ஒரு விஷயம் உண்டு. நவராத்திரி மற்றும் துர்கா பூஜை காலங்களில் பூஜை பந்தல்களுக்கு அருகில் அசைவ உணவுகள் சாப்பிடப்படுகின்றன. பலவிதமான அழுக்கான உணவுகள் சமைக்கப்படுகின்றன” என கூறியிருந்தார்.
“வரவிருக்கும் நவராத்திரியில் ஒவ்வொரு இந்துவும் விழிப்புணர்வு பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இப்படிப்பட்டவர்களை வெளியேற்ற வேண்டும். அவர்கள் புனிதமானவர்கள் அல்ல. அவர்கள் மதத்தை அவமதிக்கிறார்கள்” என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
பட மூலாதாரம், @bageshwardham
வங்காள இந்துக்களின் கடுமையான எதிர்வினை
இந்த வீடியோ வைரலான பிறகு, வங்காள இந்துக்களிடமிருந்து கடுமையான எதிர்வினை எழுந்தது.
இதற்கு சில நாட்களுக்கு முன்பு, விஷ்வ ஹிந்து பரிஷத், துர்கா பூஜை பந்தல்களிலிருந்து அசைவ உணவுகளைத் தூரத்தில் வைக்க வேண்டும் என்று கூறியிருந்தது.
மேற்கு வங்க பாஜக, மீண்டும் வங்காள மக்களின் உணவு பழக்கத்தைச் சுற்றிய சர்ச்சையில் சிக்கியுள்ளது.
இதற்கு முன்பு கடந்த மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தலின் போது, பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்காளிகள் சைவ உணவை பின்பற்றுமாறு மாற நிர்பந்திக்கப்படுவார்கள் என்ற அப்போதைய ஆளும்கட்சியான திரிணாமூல் காங்கிரஸின் பரப்புரையை எதிர்கொள்ள, பாஜக தலைவர்கள் மீனுடன் பரப்புரை செய்ய வேண்டியிருந்தது அல்லது பகிரங்கமாக மீன் சாப்பிட வேண்டியிருந்தது. தனது கட்சி ஒருபோதும் எந்தக் கட்டளையும் பிறப்பிக்காது என பட்டாச்சார்யா திங்கள்கிழமை கூறினார்.
“மேற்கு வங்கத்தில் மக்கள் என்ன சாப்பிட வேண்டும், என்ன அணிய வேண்டும் என்பதைப் பற்றி நாங்கள் ஒன்றும் சொல்லப் போவதில்லை. வங்காள மக்கள் தாங்கள் பழகியபடி வாழ்வார்கள். வேஷ்டி அணிய விரும்புவோர் வேஷ்டி அணிவார்கள். லுங்கி அணிய விரும்புவோர் லுங்கி அணிவார்கள். வங்காள மக்கள் மீன் சாப்பிடாமல் எப்படி இருப்பார்கள்? வெளியிலிருந்து யாராவது வந்து ஏதாவது சொன்னால் அதைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்?” என பட்டாச்சார்யா கூறினார்.
“சைவ வாழ்க்கை முறையைப் பின்பற்றுமாறு யார் ஒருவரும் மக்களிடம் வேண்டுகோள் விடுப்பது தவறல்ல. சைவ உணவை ஆதரிக்கும் ஒரு இயக்கம் நடைபெற்று வருகிறது. மக்கள் பலரும் சில மருத்துவர்களும் கூட அதைப் பரிந்துரைக்கிறார்கள். ஆனால் ஒரு சாது அல்லது ஒரு அரசியல் கட்சி, மக்கள் தங்கள் வீட்டில் என்ன சாப்பிட வேண்டும் என்று எப்படிச் சொல்ல முடியும்? அவர் நாடு முழுவதும் மதிக்கப்படுபவர் மற்றும் பிரபலமானவர். அவர் வெறும் வேண்டுகோள் மட்டுமே விடுத்துள்ளார்,” என அவர் கூறினார்.
எக்ஸ் மற்றும் ஃபேஸ்புக்கில் வங்காள இந்துக்களுக்கு அறிவுரை வழங்க முயற்சித்ததற்காக தீரேந்திர கிருஷ்ண கர்கை விமர்சிக்கும் பதிவுகள் வெளியாகின.
பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் அபிஜித் மஜும்தார் எக்ஸ் பக்கத்தில், “மேற்கு வங்கத்தில் இந்துத்துவத்துக்கு தனித்துவமான, வலுவான அமைப்பு உள்ளது. இது இந்து தேசியவாதத்தின் பிறப்பிடமாகவும், சக்தி வழிபாட்டின் மையமாகவும் உள்ளது. ஆகையால், துர்கா பூஜை பந்தல்களுக்கு அருகில் அசைவ உணவு சாப்பிடுவதற்கு எதிரான பாகேஷ்வர் தாமின் வேண்டுகோள் போதிய புரிதலின்றி கூறப்பட்டதாகும். அது தேவையற்றது; எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.” என குறிப்பிட்டுள்ளார்.
2017 முதல் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த சஞ்சீவ் சன்யாலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
“இறைச்சி, சாக்தம் மரபை (Shakta Hinduism) பின்பற்றும் இந்து மதத்தின் முக்கிய அங்கமாகும். பாரம்பரிய நடைமுறைகளின்படி, துர்கா மற்றும் காளி தேவிகளுக்கு அது படைக்கப்படுகிறது. துர்கா பூஜையின் நவமி, தசமி நாட்களில் பக்தர்கள் பெறும் பிரசாதத்திலும் இறைச்சி இடம்பெறும். இந்த புனித மரபில் எந்தவித தலையீடும் ஏற்றுக்கொள்ளப்படாது.” என அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
பட மூலாதாரம், @bageshwardham
‘பிரிஞ்சி பாபா’வை நினைவூட்டிய தீரேந்திர கிருஷ்ண கர்கின் வேண்டுகோள்
தீரேந்திரரின் வேண்டுகோள், சத்யஜித் ரேயின் ‘மஹாபுருஷ்’ திரைப்படத்தில் வரும் தன்னம்பிக்கை மிக்க மதகுருவான ‘பிரிஞ்சி பாபா’வை வங்காள மக்களுக்கு நினைவூட்டியது.
ஒரு சமூக ஊடக பயனர், “பிரிஞ்சி பாபா திரும்பி வந்துவிட்டார்” என்று குறிப்பிட்டார்.
மற்றொருவர், “சத்யஜித் ரேயின் ‘கபுருஷ் ஓ மஹாபுருஷ்’ படம் நினைவுக்கு வருகிறது. பிரிஞ்சி பாபா ஞாபகம் இருக்கிறாரா?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
சிலர், “புதிய காலத்தின் பிரிஞ்சி பாபா!” மற்றும் “பிரிஞ்சி பாபா உண்மையிலேயே இருக்கிறார்!” என்றும் குறிப்பிட்டனர்.
அந்தத் திரைப்படத்தில், பிரிஞ்சி பாபா என்ற போலி மதகுருவின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரியுடன் மேடையைப் பகிர்ந்துகொண்டு, மாநிலத்தில் ஒரு மையத்தைத் தொடங்குமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
“துர்கா பூஜை காலத்தில் மேற்கு வங்கம் மற்றும் இந்தியாவின் கலாசாரத்தைப் பாதுகாக்க அரசு செயல்படும். பாபா மகாராஜ், தயவுசெய்து இங்கே ஒரு மையத்தைத் தொடங்குங்கள். இங்கே பாகேஷ்வர் தாமின் ஒரு மையம் இருக்க வேண்டும். இது சாதுக்களின் நிலம். இது ஆன்மீக விழிப்புணர்வின் நிலம்” என சுவேந்து அதிகாரி தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து,”பிரிஞ்சி பாபா கதாபாத்திரம் 1920களில் ராஜசேகர் பாசுவால் எழுதப்பட்டது. சத்யஜித் ரே 1965ஆம் ஆண்டு ‘மஹாபுருஷ்’ திரைப்படத்தை உருவாக்கினார். 2026ஆம் ஆண்டு வங்க அரசு பாகேஷ்வர் பாபாவை வரவேற்றது” என ஒரு சமூக ஊடகப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், @bageshwardham
மேற்கு வங்கத்தில் துர்கா பூஜைக்கான புதிய வழிகாட்டுதல்கள்
திங்கட்கிழமை மாலை துர்கா பூஜை அமைப்பாளர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில், சுவேந்து அதிகாரி இந்த ஆண்டுக்கான வழிமுறைகளை அறிவித்தார்.
வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, அக்டோபர் 16 முதல் 21ஆம் தேதி வரை நடைபெறும். இருப்பினும் இந்த ஆண்டு ரெட் ரோடில் நடைபெறும் பாரம்பரிய கார்னிவல் நடைபெறாது. அதற்குப் பதிலாக கொல்கத்தாவிலும், மாநிலத்தின் மேலும் ஆறு இடங்களிலும் சாலை ஊர்வலங்கள் நடைபெறும். அனைத்து சிலை கரைப்புகளும் அக்டோபர் 24ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும்.
குறைந்த பட்ஜெட் கொண்ட துர்கா பூஜை அமைப்பாளர்கள் மாற்றுத் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவிக்கு தகுதியானவர்கள். அதற்கான விண்ணப்பங்கள் முதலில் உள்ளூர் காவல் நிலையங்களில் சரிபார்ப்புக்காக சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதன் பின்னர் அவை தலைமைச் செயலாளர் அலுவலகத்துக்கு அனுப்பப்படும்.
“முதலமைச்சர் என்ற பதவியின் அதிகாரத்தை நான் தவறாக பயன்படுத்த விரும்பவில்லை. சிறிய அளவிலான பூஜை ஏற்பாட்டாளர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் என்று ஏற்கெனவே கூறியுள்ளேன். பெரிய பட்ஜெட் கொண்ட அமைப்பாளர்கள் அரசு நிதியைப் பெற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அரசு உதவி இல்லாமல் பூஜை நடத்த முடியாதவர்களுக்கு அரசு உதவும்” என சுவேந்து அதிகாரி கூறினார்.
முதலமைச்சரின் முக்கிய அறிவிப்புகள்:
- துர்கா பூஜை ஏற்பாட்டாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்.
- பந்தல்களிலும், சிலை கரைப்பு ஊர்வலங்களிலும் டிஜே இசைக்கு அனுமதி இல்லை.
- அனைத்து சிலை கரைப்புகளும் அக்டோபர் 24ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும்.
- மகாஷ்டமி நாளில் மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும்.
- பூஜை கருப்பொருட்களும், சிலைகளும் மத உணர்வுகளை புண்படுத்தக் கூடாது.
- திருவிழா கால உணவுக்கு எந்தத் தடை குறித்தும் அதிகாரி அறிவிக்கவில்லை.
மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை மற்றும் நவராத்திரி காலங்களிலும் பல இந்துக்கள் அசைவ உணவு உண்கின்றனர். ஆனால், வட இந்தியாவின் பல பகுதிகளில் இந்துக்கள் நோன்பு கடைப்பிடிக்கின்றனர்.
மேற்கு வங்கத்தில் பாஜக முதன்முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது. ஹிந்தி பேசும் மாநிலங்களின் அரசியல் கட்சி என்ற அடையாளத்தைக் கொண்ட பாஜகவின் வங்காள அரசியல் அணுகுமுறை குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன.
மேற்கு வங்கத்தில் அசைவ உணவு மிகவும் பிரபலமானது. 2018ஆம் ஆண்டு தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் படி, கொல்கத்தாவில் 96 சதவிகிதம் மக்கள் அசைவ உணவு உண்பவர்கள்.
“வங்கத்தின் இந்துத்துவம் அசைவ உணவுடன் இணைந்தது. அது வட இந்தியாவின் இந்துத்துவத்துடன் பொருந்தாது. வங்கத்தில் நவராத்திரி காலத்திலும் மக்கள் இறைச்சி உண்கிறார்கள். ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தை நாங்கள் எதிர்ப்பின் முழக்கமாக மாற்றிவிட்டோம். இங்கு அது ஒரு மதவாத முழக்கம் அல்ல. மம்தா பானர்ஜிக்கு அந்த முழக்கம் பிடிக்காததால், அதை ஒரு அரசியல் ஆயுதமாக பயன்படுத்தினோம். உத்தரப் பிரதேசத்தில் ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தின் அர்த்தம் வேறு. அங்கு அது இந்து பெருமையுடன் தொடர்புடையதாக இருக்கலாம். ஆனால் வங்கத்தில் அது எதிர்ப்பின் முழக்கமாக உள்ளது” என பாஜக தலைவர் மற்றும் தற்போது மேற்கு வங்கத்தின் நிதி அமைச்சராக உள்ள சபன் தாஸ்குப்தா, 2021ஆம் ஆண்டு பிபிசி ஹிந்தியிடம் கூறியிருந்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு