• Thu. May 28th, 2026

24×7 Live News

Apdin News

மே 31இல் நிகழும் நீல நிலவு என்றால் என்ன? அப்போது என்ன நடக்கும்?

Byadmin

May 28, 2026


மே 31இல் நிகழும் நீல நிலவு என்றால் என்ன? அப்போது என்ன நடக்கும்?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

மே 31, 2026 அன்று தலையை உயர்த்தி வானத்தைப் பாருங்கள். கருநீல வானில் ஒரு வெள்ளித் தட்டு போல முழு நிலா தென்படுகிறதா? அதுதான் மே மாதத்தின் இரண்டாவது பௌர்ணமி. இதற்கு ஒரு வித்தியாசமான பெயர் உண்டு. ‘புளூ மூன் (நீல நிலவு)’.

நீல நிலவுதான், ஆனால் நீலமாகத் தெரியாது. ஐரோப்பாவில் நீல நிறம் அரிது. எனவே அரிதான, இயல்புக்கு மாறானதைக் குறிக்க நீல நிறத்தைப் பயன்படுத்துவார்கள். கோபத்திற்கு சிவப்பு, உண்மைக்கு வெள்ளை என்று கூறுவது போலத்தான் இதுவும். ஒரே மாதத்தில் இருமுறை பௌர்ணமி வருவது அரிதான நிகழ்வு. இதைச் சுட்டும் வகையில் மாதத்தில் இரண்டாவதாக வரும் பௌர்ணமியை ‘நீல நிலவு’ என்பார்கள்.

அரிது என்றாலும், ‘வாராது வந்த மாமணி’யைப் போல எப்போதாவது ஒரு மாதத்தில் இரு பௌர்ணமி நிகழ்வது எப்படி?

நிலவு பூமியைச் சுற்றி வரும்போது எப்போதும் சீரான வேகத்தில் நகர்வதில்லை என்பதில் இருந்து இது தொடங்குகிறது.

சூரியன் ஒரு பக்கத்திலும், பூமி நடுவிலும், நிலவு எதிர்ப் பக்கத்திலும் என்ற அமைவு வரும்போது முழுநிலவு ஏற்படுகிறது. இந்தக் கணத்தில் இந்த மூன்று வான்பொருட்களின் மையங்களும் ஒரு தளத்தில் (plane) இருக்கும். அதுதான் முழுநிலவு.

By admin