• Fri. Jul 31st, 2026

24×7 Live News

Apdin News

மொராக்கோவில் இருந்து ஸ்பெயினுக்குள் நுழைந்த 60 ஆயிரம் அகதிகள்… நெருக்கடியில் சிக்கி 41 பேர் பரிதாப பலி!

Byadmin

Jul 31, 2026


கடந்த 24 மணிநேரத்தில் மொராக்கோவில் இருந்து சுமார் 60 ஆயிரம் அகதிகள் ஸ்பெயினின் தன்னாட்சி நகரான சியூட்டாவுக்குள் நுழைந்ததாக அந்த பிராந்தியத்தின் அதிபர் ஜுவான் ஜெசஸ் விவாஸ் தெரிவித்துள்ளார். இது சியூட்டாவின் மக்கள்தொகையில் சுமார் 70 சதவீதத்திற்கு சமம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஒரே நேரத்தில் அதன் முக்கால்வாசி மக்கள் தொகைக்கு இணையான அகதிகள் சியூட்டாவில் குவிந்ததால் பெரும் நெருக்கடி மற்றும் குழப்பம் ஏற்பட்டதாகவும், இதை கருத்தில்கொண்டு அவர்களில் ஏறக்குறைய பாதி பேர் மீண்டும் மொராக்கோவிற்கே சென்றுவிட்டதாகவும் ஸ்பெயின் தெரிவித்துள்ளது.

இதனிடையே மக்கள் தொகையை கட்டுப்படுத்த ஸ்பெயின் தனது ஆயுதப் படைகளையும், கூடுதல் காவல்துறையினரையும் சியூட்டாவிற்கு அனுப்பியுள்ளது. இதில் பாதுகாப்புப் படையினருக்கும், அகதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட, எல்லைச் சோதனைச் சாவடிக்கு அருகில் உள்ள அலைத்தடுப்பைக் கடக்க ஒரேநேரத்தில் பலர் முயன்றுள்ளனர்.

இதில் கூட்ட நெரிசலிலும், நீரில் மூழ்கியும் குறைந்தது 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனிடையே ஸ்பெயினின் மற்றொரு பிராந்தியமான மெலிலாவிற்குள்ளும் மோதல் வெடித்தது.

இதனால் நிலைமையை ஆய்வுசெய்ய சியூட்டாவிற்கு சென்ற ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், அத்துமீறி எல்லையை கடந்து வந்த இந்த முறை, “ஸ்பெயினின் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறும் செயல்” என கண்டித்துள்ளார்.

இந்த நெருக்கடிக்கு மனிதக் கடத்தல் கும்பலே காரணம் எனக் குற்றம் சாட்டிய அவர், “பல இளைஞர்களை ஏமாற்றி, இறுதியில் அவர்களில் பலரைக் கடலிலோ அல்லது தன்னாட்சி நகரத்திலோ மரணத்திற்கு இட்டுச் செல்கிறார்கள்” என தெரிவித்தார்.

வியாழக்கிழமை முதல் மொராக்கோவிலிருந்து சுமார் 50,000 பேர் எல்லையைக் கடந்துள்ளதாக ஸ்பெயினின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 25,000 பேர் ஏற்கனவே மொராக்கோவிற்குத் திரும்பிவிட்டதாகவும், ஒவ்வொரு மணி நேரமும் நூற்றுக்கணக்கானோர் திரும்பிச் சென்று கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் ஸ்பெயினின் இந்த புள்ளிவிவரங்கள் தொடர்பாக மொராக்கோ உள்துறை அமைச்சகம் இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

By admin