• Fri. Sep 18th, 2026

24×7 Live News

Apdin News

மோடியை பாராட்டிய டிரம்ப் போதைப்பொருள் கடத்தல் நாடுகளின் பட்டியலில் இந்தியாவையும் இணைத்தார்!

Byadmin

Sep 18, 2026


இந்தியாவில் சட்டவிரோத கசகசா (அபின்) பயிர்ச்செய்கையைக் கட்டுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முன்னெடுத்து வரும் காத்திரமான நடவடிக்கைகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வரவேற்றுப் பாராட்டியுள்ளார்.

அதேவேளை, சர்வதேச ரீதியில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் உற்பத்தி இடம்பெறும் முக்கிய 23 நாடுகளின் பட்டியலில் இந்தியா உட்பட சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளையும் அமெரிக்கா உள்ளடக்கியுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ஜனாதிபதி டிரம்ப் சமர்ப்பித்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில், அமெரிக்க-இந்திய போதைப்பொருள் கொள்கைக் கூட்டமைப்பின் (United States-India Drug Policy Framework) ஊடாகத் தொடர்ச்சியான இருதரப்பு ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். சட்டவிரோதக் கசகசா பயிர்ச்செய்கையைக் கட்டுப்படுத்தவும், விநியோகச் சங்கிலியின் பாதுகாப்பை பலப்படுத்தவும் பிரதமர் மோடியும் இந்திய அரசும் எடுத்து வரும் முயற்சிகளை தாம் வரவேற்பதாக டிரம்ப் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் ஒரு நாடு உள்ளடக்கப்படுவது, அந்த நாடு தற்போது முன்னெடுக்கும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளையோ அல்லது அமெரிக்காவுடனான ஒருங்கிணைப்பையோ குறைத்து மதிப்பிடுவதாக அமையாது என்பதை ஜனாதிபதி டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார்.

அமெரிக்கச் சட்டத்திற்கு அமைவாக, புவியியல், வர்த்தகம் மற்றும் பொருளாதாரக் காரணிகளால் போதைப்பொருட்கள் அல்லது அவற்றுக்குப் பயன்படும் இரசாயனப் பொருட்கள் கடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாலேயே நாடுகள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள 23 நாடுகளின் பட்டியலில் இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகியவற்றுடன் ஆப்கானிஸ்தான், பஹாமாஸ், பெலிஸ், பொலிவியா, பர்மா (மியான்மர்), கொலம்பியா, கோஸ்டாரிக்கா, டொமினிகன் குடியரசு, ஈக்வடார், எல் சால்வடார், குவாத்தமாலா, ஹைட்டி, ஹொண்டுராஸ், ஜமைக்கா, லாவோஸ், மெக்சிகோ, நிகரகுவா, பனாமா, பெரு மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

By admin