அவுஸ்திரேலியாவின் நியூகாசல் பகுதியில் ரக்பி லீக் ரசிகர்கள் குழுமியிருந்த கூட்டத்துக்குள் கார் ஒன்று மோதியதில் மூன்று சிறுவர்கள் உட்பட 10 பேர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்தை அடுத்து, 18 வயதுடைய இலங்கை வம்சாவளி இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இண்டிக பாம்ப்ரிக் சமரசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ள குறித்த சந்தேகநபர் மீது, பாரதூரமான உடல் காயங்களை ஏற்படுத்திய ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தியமை மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
சந்தேகநபரின் சாரதி அனுமதிப்பத்திரம் கடந்த பெப்ரவரி மாதம் இடைநிறுத்தப்பட்டிருந்ததாகவும், அதற்கு எதிராக ஏப்ரலில் செய்யப்பட்ட மேன்முறையீடு தோல்வியடைந்திருந்ததாகவும் நீதிமன்றப் பதிவுகள் தெரிவிக்கின்றன.
ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர் சார்பில் பிணை கோரப்படாத நிலையில், பிணை உத்தியோகபூர்வமாக மறுக்கப்பட்டதுடன், அவரை சிறைச்சாலை சுகாதார அதிகாரிகளால் பரிசோதிக்குமாறு அவரது சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார்.
இவர் மீதான கடுமையான குற்றச்சாட்டுக்கு அதிகபட்சமாக 07 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. சந்தேகநபர் எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
நியூகாசல் நைட்ஸ் ரக்பி அணியை வழியனுப்புவதற்காக சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் நியூகாசல் லிங்க் வீதியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்த வேளையிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த கார் கூட்டத்துக்குள் புகுந்ததில், 2 வயது முதல் 67 வயது வரையிலான 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 05 வயதுச் சிறுமி ஒருவர் மாரடைப்புக்கு உள்ளாகி, தலைக்காயம் மற்றும் எலும்பு முறிவுகளுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார்.
67 வயதுடைய முதியவர் ஒருவரின் உடல்நிலை சீரடைந்து வருவதாகவும், காயமடைந்தவர்களில் மூவர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கடுகிறது.
சம்பவ இடத்திலேயே சாரதியான இளைஞன் கைது செய்யப்பட்டு, மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். இது திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவமாகத் தெரியவில்லை எனவும், விபத்துக்கு முன்னர் கார் தாறுமாறாகச் செலுத்தப்பட்டதாகவும் நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, ஆத்திரமடைந்த ரசிகர்கள் தாக்க முற்பட்டதையடுத்து சாரதியையும் அவருடன் இருந்த மேலும் இருவரையும் சம்பவ இடத்திலிருந்து பொலிஸார் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர்.
The post ரக்பி ரசிகர்கள் கூட்டத்துக்குள் காரைச் செலுத்திய இலங்கை வம்சாவளி இளைஞன் அவுஸ்திரேலியாவில் கைது! appeared first on Vanakkam London.