3
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மது விடுதிகள் (பப்கள்) மற்றும் ஹோட்டல்களுக்கான வணிக வரி கணக்கிடப்படும் முறையை மறுஆய்வு செய்வதற்கான புதிய திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
தற்போதைய வரி அமைப்பில் பெரியளவிலான சீர்திருத்தங்களை உருவாக்குவதற்கு இந்த மறு ஆய்வு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மதிப்பீட்டு மறு ஆய்வுக்கு, வணிக வரி கொள்கை நிபுணரான ஜெர்ரி ஷூர்டர் (Jerry Schurder) தலைமை தாங்குவார்.
இவர் தனது விரிவான அறிக்கையை 2027 மார்ச் மாதத்தில் சமர்ப்பிப்பார். இந்த மறுஆய்வு, 2029ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டுள்ள அடுத்த வரி மறு மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய இரு நாடுகளிலும் ஒரே மாதிரியான வரி கணக்கீட்டு முறை பின்பற்றப்படுவதால், இந்தச் செயல்பாட்டில் காணி உரிமையாளர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் வணிக உரிமையாளர்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு திரைசேரி கேட்டுக்கொண்டுள்ளது. (வடக்கு அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய நாடுகள் தங்களது சொந்த மதிப்பீட்டு முறைகளைக் கொண்டுள்ளன).
பப்கள் எதிர்கொள்ளும் தீவிர சவால்கள்
இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில் 161 பப்கள் மூடப்பட்டுள்ளன என பிரிட்டிஷ் பீர் மற்றும் பப் சங்கத்தின் (BBPA) தரவுகளில் சுட்டிக்காட்டப்படுகிறது. இதனால் சுமார் 2,400 வேலைவாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளன.
அதிகரித்து வரும் வணிக வரியே இத்துறை எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சனையாகக் கூறப்படும் வேளையில், தேசிய காப்பீடு மற்றும் குறைந்தபட்ச ஊதிய உயர்வு காரணமாகப் பணியாளர்களுக்கான செலவினங்கள் அதிகரித்துள்ளமையும் பப்களைப் பாதித்துள்ளது.
பப்கள் ஏனைய சில்லறை வணிகங்களை விட முற்றிலும் மாறுபட்ட முறையில் வரி மதிப்பீடு செய்யப்படுகின்றன. வெறும் தரைப்பகுதியின் பரப்பளவை அடிப்படையாகக் கொள்ளாமல், ‘நியாயமான முறையில் பராமரிக்கக்கூடிய வர்த்தகம்’ என்ற அளவுகோலின் மூலமே பப்களின் வரி மதிப்பிடப்படுகிறது. இதன் பொருள், ஒரு பப்பின் வருவாய் அதிகரிக்கும் போது, அதற்கான வணிக வரியும் தானாகவே உயர்கிறது.
இந்நிலையில், எந்தெந்த வணிகங்கள் இந்த கூடுதல் வரி தள்ளுபடிக்குத் தகுதியானவை என்பது பற்றிய முழுமையான விவரங்கள், இலையுதிர் கால பட்ஜெட்டில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.