பட மூலாதாரம், Nasa/JPL-Caltech
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
2600 கோடி கிலோமீட்டர். பூமியைச் சுற்றி சுமார் 6.49 லட்சம் முறை நீங்கள் பயணித்தால் அடையக்கூடிய தூரம் இது. ஆனால் இந்த தூரத்தை மனிதர்கள் யாரும் பயணிக்கவில்லை.
பூமியில் இருந்து சென்ற விண்கலம் ஒன்று சரியாக நவம்பர் 18-ஆம் தேதி இந்திய நேரப்படி சரியாக மாலை 03:46 மணிக்கு இந்த தூரத்தைக் கடக்கிறது.
ஒரு குழந்தையின் அழுகை, தாயின் கொஞ்சல், டிராக்டர் சத்தம், மோர்ஸ் கோடின் ஒலித் துணுக்குகள், காற்று மற்றும் மழையின் சத்தம், சிம்பான்ஸி குரங்கு எழுப்பும் ஒலி, இதயத் துடிப்பு மற்றும் மனிதனின் சிரிக்கும் சத்தம் உள்ளிட்ட பல ஒளித் துணுக்குகள் அடங்கிய ‘கோல்டன் ரெகார்டை’ வாயேஜர் 1 விண்கலம் சுமந்து செல்கிறது.
கோல்டன் ரெகார்டில் வேறு என்ன உள்ளது?
பட மூலாதாரம், Nasa/JPL-Caltech
அதில் 55 மொழிகளில் வாழ்த்துகள், பூமியில் நிலவும் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் 35 ஒலிகள் மற்றும் மொஸார்ட், பாக் முதல் சக் பெர்ரி, பிளைண்ட் வில்லி ஜான்சன் வரையிலான கலைஞர்களின் இசை என மொத்தம் 90 நிமிட இசைத் தொகுப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இதில் ‘ஜாட் கஹான் ஹோ’ என்கிற இந்தியப் பாடலும் இடம்பெற்றுள்ளது.
மேலும், பூமியின் வாழ்வியலைக் காட்டும் 115 படங்கள், அப்போதைய அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் மற்றும் ஐநா பொதுச்செயலாளர் கர்ட் வால்ட்ஹெய்ம் ஆகியோரின் வாழ்த்துச் செய்திகளும் இதில் அடங்கியுள்ளன.
வாயேஜர் 1 விண்கலம் கடந்த 1977-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. மனிதர்களால் உருவாக்கப்பட்டு மிக நீண்ட தூரம் பயணித்த பொருளாக வாயேஜர் 1 விண்கலம் உள்ளது. வாயேஜர் 2 விண்கலமும் அதே ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது.
ஐந்து ஆண்டுகள் நிலைத்திருப்பதற்காக உருவாக்கப்பட்ட வாயேஜர் 1 மற்றும் 2 விண்கலங்கள் விண்வெளியில் 50 ஆண்டுகள் கழித்தும் செயல்பாட்டில் உள்ளன. இரு வெவ்வேறு பாதைகளில் அந்த விண்கலங்கள் சென்றன
வானியல் கணக்குகளில் வாயேஜர் 1 பயணித்த தூரம் ஓர் ‘ஒளி நாள்’ என்று கணக்கிடப்படுகிறது. ஆனால் இது காலத்தைக் குறிப்பதல்ல. தூரத்தைக் குறிக்கும் அளவீடு.
ஒளி நாள், ஒளி ஆண்டு என்றால் என்ன?
பட மூலாதாரம், Getty Images
பிரபஞ்சத்தில் மிகவும் வேகமாக பயணிக்கும் பொருளாக ஒளி உள்ளது. ஒரு விநாடிக்கு சுமார் 3 லட்சம் கிமீ தூரத்தைக் கடக்கிறது. ஒளியின் வேகத்தில் பயணித்தால் 1.3 விநாடியில் நிலவையும் 8 நிமிடம் 20 விநாடிகளில் சூரியனையும் அடைந்துவிடலாம்.
ஒரு நாளில் ஒளி எவ்வளவு தூரத்தைக் கடக்குமோ அந்த தூரத்தைத் தான் வாயேஜர் 1 கடக்கிறது. ஆனால் அதற்கு எடுத்துக் கொண்டது 49 வருடம், 2 மாதம், 11 நாட்கள்.
மணிக்கு சுமார் 61,000 கிமீ வேகத்தில் பயணிக்கும் வாயேஜர் 1 விண்கலம் ஓர் ‘ஒளி ஆண்டு’ தூரத்தைக் கடப்பதற்கு சுமார் 18,000 ஆண்டுகள் ஆகும்.
இந்த விண்கலம் வேற்றுகிரகவாசிகளை சென்றடையுமா?
வேற்றுகிரக வாசிகள் பற்றிய ஆய்வுகளும் தேடலும் தொடர்ந்து இருந்தாலும் அவர்களின் இருப்பு தற்போது வரை அறிவியல்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
வாயேஜர் 1 விண்கலம், பூமியிலிருந்து 17 ஒளி ஆண்டுகளுக்கும் அதிகமான தொலைவில் உள்ள, ‘ஏசி +79 3888’ (இது ‘கிளீஸ் 445’ என்றும் அழைக்கப்படுகிறது) என்ற நட்சத்திரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
நமது சூரியக் குடும்பத்திற்கு வெளியே அமைந்துள்ள மிகவும் நெருக்கமான முக்கியமான நட்சத்திரமாக பிராக்ஸிமா சென்டாரி உள்ளது. இது சுமார் 4.2 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.
வாயேஜர் 1 விண்கலம் இந்த நட்சத்திரத்தை அடைய சுமார் 1 லட்சம் ஆண்டுகள் ஆகிவிடும்.
நமது சூரியக் குடும்பம் பால்வழி விண்மீன் மண்டலத்தில் அமைந்துள்ளது. அதற்கு அருகாமையில் உள்ள ஆண்ட்ரோமெடா விண்மீன் மண்டலம் 25 லட்சம் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.
ஒருவேளை, பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு மூலையில் வேற்றுகிரகவாசிகள் வாழும் கிரகங்கள் இருந்தாலும் இந்த விண்கலம் அவர்களை அடைய பல லட்சம் ஆண்டுகள் ஆகிவிடும்.
2012-இல் ஹீலியோஸ்பியர் என்று அழைக்கப்படும் சூரிய மண்டல வெளியின் வெளிப்புறத்தை விட்டுவிலகி இன்டர்ஸ்டெல்லார் வெளிக்குள் நுழைந்த மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் பொருளாக வாயேஜர் 1 மாறியது.
வாயேஜர் 1-இன் முக்கிய கண்டுபிடிப்புகள்
பட மூலாதாரம், Nasa/JPL
வாயேஜர் 1 முதல்முறையாக பூமிக்கு வெளியே செயல்பாட்டில் இருக்கும் முதல் எரிமலையை வியாழன் கிரகத்தின் நிலவான லோவில் (Moon lo) கண்டறிந்தது. அது வியாழன் கிரகத்தில் மின்னலையும் பதிவு செய்தது. நமது கிரகத்துக்கு வெளியே இது பதிவு செய்யப்படுவது முதல்முறை.
வாயேஜர் 1, வியாழன் கிரகத்தைச் சுற்றி ஒரு மெல்லிய வளையத்தையும், தீபி (Thebe) மற்றும் மெட்டிஸ் (Metis) ஆகிய இரண்டு புதிய நிலவுகளையும் கண்டறிந்தது.
சனி கிரகத்தில், வாயேஜர் 1 ஐந்து புதிய நிலவுகளையும், ‘ஜி-வளையம்’ (G-ring) என்று அழைக்கப்படும் ஒரு புதிய வளையத்தையும் கண்டறிந்தது.
வாயேஜர் விண்கலம் இந்த 49 ஆண்டுகளில் பல்வேறு புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது.
1990-ஆம் ஆண்டு நெப்டியூனைக் கடந்து பயணித்த வாயேஜரின் கேமராக்கள் இறுதியாக ஒருமுறை பூமி மற்றும் சூரிய குடும்பத்தைப் புகைப்படம் எடுத்தன. இந்தப் புகைப்படம் 30 ஆண்டுகள் கழித்து 2020-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
‘வெளிர் நீலப் புள்ளி’ என்று அறியப்பட்ட அந்தப் புகைப்படத்தில் பூமி ஒரு சிறிய புள்ளியாகத் தெரிந்தது.
இந்தப் புகைப்படத்தைப் பற்றி விஞ்ஞானி கார்ல் சாகன் அவரது புத்தகத்தில், “இதுதான் நம் இல்லம். இதுதான் நாம். நீங்கள் நேசிக்கும் அனைவரும், உங்களுக்குத் தெரிந்த அனைவரும், நீங்கள் கேள்விப்பட்ட அனைவரும், இதுவரை வாழ்ந்த ஒவ்வொரு மனிதரும், அனைவருமே சூரியக் கதிரொளியில் மிதக்கும் ஒரு சிறு தூசுத் துகளின் மீதுதான் தங்கள் வாழ்நாளைக் கழித்தனர்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
பட மூலாதாரம், Nasa/JPL-Caltech
வாயேஜர் 1-இன் தற்போதைய நிலை என்ன?
வாயேஜர் 1, சிதைந்து கொண்டிருக்கும் புளூட்டோனியத்திலிருந்து வரும் வெப்பத்தை மின்சாரமாக மாற்றும் ஒரு கருவியான, ரேடியோஐசோடோப் வெப்பமின்சார ஜெனரேட்டரைச் சார்ந்துள்ளது. அது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4 வாட் ஆற்றலை இழக்கிறது.
இந்த ஆண்டு ஏப்ரல் 17 அன்று, தெற்கு கலிபோர்னியாவில் உள்ள நாசாவின் ஜெட் உந்துவிசை ஆய்வகத்தின் (JPL) பொறியாளர்கள், வாயேஜர் 1 விண்கலத்தில் உள்ள குறைந்த ஆற்றல் மின்னூட்டத் துகள்கள் பரிசோதனை (LECP) எனப்படும் கருவியை நிறுத்துமாறு கட்டளைகளை அனுப்பினர்.
அணுசக்தியால் இயங்கும் அந்த விண்கலத்தில் ஆற்றல் குறைந்து வருவதால், மனிதகுலத்தின் முதல் விண்மீன் பயண ஆய்வுக் கலத்தைத் தொடர்ந்து இயங்க வைப்பதற்கு LECP-ஐ அணைப்பதே சிறந்த வழியாகக் கருதப்பட்டதாக நாசா தெரிவிக்கிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு