தேர்தலில் வெற்றி பெற்ற ஒரு வேட்பாளர், தனது சொத்துகளில் ஒன்றை தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடாமல் விட்டிருந்தால், அதுவே அவரது வெற்றியை செல்லாததாக அறிவிக்க போதுமானதாக அமையுமா?
தமிழ்நாட்டில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள தேர்தல் வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தின் முன் தற்போது இந்தக் கேள்வி விவாதிக்கப்பட்டு வருகிறது.
வழக்கில், பண்ருட்டியில் உள்ளதாகக் கூறப்படும் சுமார் ரூ.30 கோடி மதிப்பிலான ஒரு சொத்து தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் இடம்பெறவில்லை என்றும், மேலும் சில சொத்துகள் குறித்த விவரங்களில் முரண்பாடுகள் உள்ளன என்றும் மனுதாரர் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.
மறுபுறம், விஜய் தரப்பு, இந்த விவரங்கள் விடுபட்டது திட்டமிட்டவை அல்ல என்றும், பிரமாணப் பத்திரத்தில் உள்ள ஒவ்வொரு பிழையும் தேர்தலை ரத்து செய்யும் அளவுக்கு சட்ட ரீதியாகப் போதுமானதல்ல என்றும் வாதிட்டுள்ளது. குறிப்பாக, ஏற்கெனவே நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விடுபட்டுள்ள விவரங்கள் தேர்தலை செல்லுபடியாகாது என்று கூற போதுமானதல்ல என்று விஜய் தரப்பு வாதிட்டுள்ளது.
இந்த வழக்கில் நீதிமன்றம் இதுவரை எந்தத் தீர்ப்பையும் வழங்கவில்லை.
சட்டப்படி வேட்பாளர்கள் என்ன தகவல்களை வெளியிட வேண்டும்?
பட மூலாதாரம், Getty Images
சட்டமன்ற மற்றும் மக்களவைத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் வேட்புமனுவுடன் படிவம் 26 என்ற பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும்.
1961-ஆம் ஆண்டின் தேர்தல் நடத்தை விதிகளில், விதி- 4ஏ, இந்த பிரமாணப் பத்திரத்தை கட்டாயமாக்குகிறது.
அதில் வேட்பாளர் வெளியிட வேண்டிய தகவல்களில் முக்கியமானவை:
அசையும் மற்றும் அசையா சொத்துகள்
கணவர் அல்லது மனைவியின் சொத்துகள்
சார்ந்திருப்பவர்களின் சொத்துகள்
கடன்கள் மற்றும் நிதிப் பொறுப்புகள்
வருமான வரி விவரங்கள்
குற்றவியல் வழக்குகள் மற்றும் தண்டனை தொடர்பான தகவல்கள்
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 33ஏ, வேட்பாளரின் குற்றவியல் பின்னணியை வெளியிடுவது பற்றி நேரடியாக பேசுகிறது.
ஆனால், சொத்துகள், கடன்கள், கல்வித் தகுதி போன்ற விவரங்களை வெளியிட வேண்டிய கட்டாயப்படுத்தும் படிவம் 26, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகள் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் வழியாக உருவானது.
படிவம்-26 கட்டாயமானதன் பின்னணி
பட மூலாதாரம், ECI
இன்று தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் படிவம்- 26 என்ற பிரமாணப் பத்திரத்தில் தங்கள் சொத்துகள், கடன்கள், குற்றவியல் வழக்குகள் மற்றும் கல்வித் தகுதி விவரங்களை வெளியிட வேண்டியதற்கு, இரண்டு முக்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் காரணமாக உள்ளன.
1999-ல் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கில், வேட்பாளர்களைப் பற்றிய முக்கிய தகவல்களை அறியும் உரிமை வாக்காளர்களுக்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் 2002-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. தேர்தலில் வாக்களிப்பது ஒரு தகவலறிந்த தேர்வாக இருக்க வேண்டும் என்பதால், வேட்பாளர்கள் தங்கள் குற்றவியல் பின்னணி, சொத்துகள், கடன்கள் மற்றும் கல்வித் தகுதி விவரங்களை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, தேர்தல் ஆணையம் 2002-ல் அறிவுறுத்தல்களை வெளியிட்டது. பின்னர் மத்திய அரசு சில தகவல் வெளியீடுகளை கட்டுப்படுத்தும் வகையில் சட்டத் திருத்தம் செய்தது. ஆனால் 2003-ல் குடிமை உரிமைகளுக்கான மக்கள் கூட்டமைப்பு vs மத்திய அரசு வழக்கில், வாக்காளர்களின் “தகவல் அறியும் உரிமை” என்பது அரசியல் சாசனப் பிரிவு19(1)(a)-ன் கீழ் அடிப்படை உரிமை என உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதி செய்து, மத்திய அரசு கொண்டு வந்த கட்டுப்பாடுகளை ரத்து செய்தது.
அதன்பிறகு தேர்தல் நடத்தை விதிகளில் விதி- 4ஏ சேர்க்கப்பட்டு, படிவம் 26 தேர்தல் வேட்புமனுவுடன் கட்டாயமாக இணைக்க வேண்டிய ஆவணமாக மாற்றப்பட்டது.
பட மூலாதாரம், Getty Images
வாக்காளர்களின் “தகவல் அறியும் உரிமை”
ஒரு வேட்பாளரின் சொத்துகள், கடன்கள் உள்ளிட்ட விவரங்கள் வாக்காளர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பலமுறை வலியுறுத்தியுள்ளது.
லோக் ப்ரஹாரி எதிர் இந்திய ஒன்றியம் (Lok Prahari Vs Union of India) -2018 என்ற வழக்கில், வேட்பாளர்கள் தங்கள் சொத்துகளை மட்டும் அல்லாமல், அந்தச் சொத்துகள் எந்த வருமான ஆதாரங்களிலிருந்து வந்தன என்பதையும் வெளிப்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியது. வாக்காளர்கள் ஒரு வேட்பாளரின் செல்வத்தின் அளவை மட்டுமல்ல, அதன் மூலத்தையும் அறிந்திருக்க உரிமை பெற்றவர்கள் என்று நீதிமன்றம் கருதியது.
வேட்பாளர், அவரது துணைவர் அல்லது சார்ந்திருப்போரின் சொத்துகள் மற்றும் வருமான ஆதாரங்கள் மறைக்கப்படுவது, வாக்காளர்களின் தகவலறிந்து தேர்வு செய்யும் உரிமையை பாதிக்கக்கூடும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. அதனால், இத்தகைய தகவல் மறைப்பு, தேர்தல் சட்டத்தின் கீழ் முறையற்ற செல்வாக்கு செலுத்துதல் (“undue influence”) என்று கருதபடலாம் என்று தீர்ப்பில் கூறப்பட்டது.
பட மூலாதாரம், Getty Images
முறையற்ற செல்வாக்கு செலுத்துதல் என்றால் என்ன?
மக்கள் பிரதிநித்துவச் சட்டத்தின் பிரிவு 123(2)-இன்படி, வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை சுதந்திரமாகப் பயன்படுத்துவதில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தலையிடுவது அல்லது தலையிட முயல்வது முறையற்ற செல்வாக்கு செலுத்துதல் (Undue Influence) எனப்படும்.
இது வெறும் மிரட்டல் அல்லது உடல் ரீதியான வன்முறை மட்டுமல்ல.
வாக்காளர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டிய தகவல்களை மறைப்பதும், அவர்கள் தகவலறிந்து முடிவெடுக்கும் உரிமையில் தலையிடுவதாக கருதப்படலாம்.
கிருஷ்ணமூர்த்தி எதிர் சிவகுமார் (2015) வழக்கில், வாக்காளர்கள் அறிய வேண்டிய தகவல்களை மறைப்பது, அவர்களின் சுதந்திரமான மற்றும் தகவல் அடிப்படையிலான தேர்தல் முடிவெடுக்கும் திறனை பாதிக்கக்கூடும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
ஒவ்வொரு தவறும் தேர்தலை ரத்து செய்யுமா?
இந்த கேள்வியே தற்போதுள்ள வழக்கு எழுப்பும் கேள்வியாக உள்ளது.
பிரிவு 100(1)(b)-இன்படி, வெற்றி பெற்ற வேட்பாளர் அல்லது அவரது தேர்தல் முகவர் அல்லது அவரின் சம்மதத்துடன் செயல்பட்ட வேறு யாராவது ஒருவர் தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால், தேர்தலை செல்லாததாக அறிவிக்க முடியும்.
தேர்தல் சட்டம் அல்லது அதன் விதிமுறைகள் மீறப்பட்டதாகக் கூறி பிரிவு 100(1)(d)(iv)-இன் கீழ் தேர்தலை எதிர்க்கும்போது, அந்த மீறல் தேர்தல் முடிவை “கணிசமாகப் பாதித்தது” என்பதை மனுதாரர் நிரூபிக்க வேண்டும்.
கனிமொழி கருணாநிதி எதிர் ஏ.சந்தான குமார் வழக்கில், தேர்தலை ரத்து செய்யக் கோரும் ஒருவர், “சட்ட மீறல் நடந்தது என்று வெறுமனே கூறினால் மட்டும் போதாது. அந்த மீறல் என்ன, அது எவ்வாறு நடந்தது, அது எந்த சட்டப் பிரிவை மீறியது, தேர்தல் முடிவை அது எவ்வாறு பாதித்தது என்பன உள்ளிட்ட அடிப்படை உண்மைத் தகவல்களை மனுவில் தெளிவாகக் கூற வேண்டும்” என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.