தயாரிப்பு : ஒன் ஸ்டெப் என்டர்டெய்ன்மென்ட்
நடிகர்கள் : ஜெயபிரகாஷ், சுப்ரமணிய சிவா, பிரசன்னா பாலச்சந்திரன், துஷ்யந்த், ஜனனி, சரத் லோகிதாஸ்வா, செந்தி குமாரி, வினோதினி வைத்யநாதன், ஆர். மோகனா, அருவி மதன் மற்றும் பலர்.
இயக்கம் : மைதீன்
மதிப்பீடு : 2/5
வடசென்னையில் வாழும் எளிய மக்களின் வாழ்வியல் என படக் குழுவினர் வெளியீட்டிற்கு முன்னதாக விவரித்ததன் காரணமாக ரசிகர்களிடம் வன்முறை இருக்குமோ, என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால் கடந்த கால தசாப்தங்களில் குடும்ப கதையை இயக்கிய இயக்குநர் வி. சேகர் இயக்கும் படைப்புகளை போல் இருப்பதாக தகவல்கள் வெளியானதும் ரசிகர்கள் படமாளிகைக்கு திரண்டனர்.
அவர்களுக்கு எம் மாதிரியான அனுபவம் கிடைத்தது? என்பதை தொடர்ந்து காண்போம்.
வடசென்னை பகுதியில் அழகர் ( ஜெயபிரகாஷ்) – செல்வம் ( சுப்ரமணிய சிவா) -மாணிக்கம்( பிரசன்னா பாலச்சந்திரன்) – ஆகிய மூவரும் ஒரு தாயின் வயிற்றில் பிறக்கவில்லை என்றாலும்.. உடன் பிறந்த சகோதரர்களை போல் வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்களின் வாரிசுகள் ‘ஏ’ லெவல் கல்வியை நிறைவு செய்த பின் உயர் கல்விக்காக பிரபல தனியார் பொறியியல் கல்வி நிறுவனத்தில் பயில வேண்டும் என விரும்புகிறார்கள். இதற்காக தங்களது பெற்றோர்களிடம் அனுமதி கேட்க, அவர்களோ அரசாங்க அனுசரணையுடன் இயங்கும் கல்லூரியில் உயர்கல்வியை படிப்பது தான் எம்மை போன்ற பொருளாதார ரீதியாக வலிமை குன்றியவர்களின் கட்டாய சூழல். அதனால் தனியார் கல்வி சாலையில் பயில வேண்டும் எண்ணத்தை கைவிட்டு விடுங்கள் என அறிவுறுத்துகிறார்கள்.
இந்த தருணத்தில் அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான ஆவுடையப்பனின் ( சரத் லோகிதாஸ்வா ) கணக்கில் வராத இந்திய மதிப்பில் ஐந்து கோடி ரூபாயை பிரத்யேகமாக ஓரிடத்தில் பதுக்கி வைத்திருக்கிறார். அந்த ஐந்து கோடி ரூபாயை இந்த மூன்று உடன்பிறவா சகோதரர்களின் வாரிசுகள் ஓர் இரவில் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்து விடுகிறார்கள்.
அந்த பணத்தின் மூலம் தனியார் கல்லூரியில் தங்களுடைய விருப்பப்படி உயர் கல்வியை கற்கலாம் என திட்டமிடுகிறார்கள். ஆனால் குடும்பத்தின் மூத்த உறுப்பினராக கருதப்படும் அழகர்- இந்தப் பணம் நமக்கு சொந்தமானதல்ல. இதனை நாம் பயன்படுத்த வேண்டாம். இதனை எங்கிருந்து எடுத்து வந்தீர்களோ..! அங்கேயே வைத்து விடுங்கள்.. எனக் கூறுகிறார்.
ஆனால் வீட்டில் உள்ள பெண்மணிகள் வீட்டிற்கு வந்த மகாலட்சுமி. இதனை இழந்திடக் கூடாது என சொல்லி, அதனை தங்களுடைய சுய நலத்திற்காகவும், குடும்ப முன்னேற்றத்திற்காகவும் பயன்படுத்த திட்டமிடுகிறார்கள். இதே தருணத்தில் பணத்தை பறிகொடுத்த ஆவுடையப்பன் தன்னுடைய ஆட்கள் மூலம் பணத்தை தீவிரமாக தேடுகிறான். இந்த பணம் ஆவுடையப்பனுக்கு கிடைத்ததா? இல்லையா? இந்த பணத்தை வைத்துக் கொண்டிருக்கும் அழகர் -செல்வம் – மாணிக்கம்- ஆகிய உடன் பிறவாத சகோதரர்கள் பயன்படுத்திக் கொண்டார்களா? இல்லையா? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.
பணம் பத்தும் செய்யும் என்ற பழமொழியை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். பொருளாதார ரீதியாக நலிவுற்றவர்களிடம் ஒரே தருணத்தில் ஐந்து கோடி ரூபாய் கிடைத்தால் அவர்களின் எண்ணங்களில் எம்மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்பதையும்.. இதன் காரணமாக அவர்கள் தங்களுடைய தற்போதைய உறவு மேலாண்மையை எப்படி எதிர்கொள்வார்கள் என்பதை பற்றியும் இயக்குநர் விவரித்திருப்பதை பாராட்டலாம்.
முதல் பாதியில் இயல்பான வடசென்னை மக்களின் கதையாக தொடங்கி ரசிகர்களை சோதித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் ஐந்து கோடி ரூபாயை வீட்டிற்கு பிள்ளைகள் எடுத்து வந்ததும், திரைக்கதை திரில்லர் ஜேனருக்கு மாறுகிறது. அங்கிருந்து திரைக்கதை வேகம் எடுக்கிறது. இரண்டாம் பாதியில் அதீத பணம் குடும்ப உறவுகளை எப்படி சீர்குலைக்கும் என்பதை பெண் கதாபாத்திரங்கள் மூலம் விவரித்திருக்கும் உத்தி சிறப்பு.
உறவுகளின் உன்னதத்தை உரக்க பேசும் கார்த்திக் ( துஷ்யந்த்) கதாபாத்திரத்தின் வடிவமைப்பு நேர்த்தி. அதில் நடிகர் துஷ்யந்த் பொருந்தி இருக்கிறார். அவருக்கான காட்சிகள் குறைவு என்றாலும் வரும் காட்சியில் நிறைவாக பங்களிப்பு செய்துள்ளார்.
அழகர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெயப்பிரகாஷ் – செல்வம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுப்பிரமணிய சிவா – மாணிக்கம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரசன்ன பாலச்சந்திரன் – ஆகியோர் இயக்குநர் சொல்லிக் கொடுத்ததை கடந்து கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து, திரையில் தங்களுடைய பங்களிப்பை வழங்கி, ரசிகர்களை கவர்கிறார்கள்.
பிரியா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜனனி- ஆவுடையப்பன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரத் லோகிதாஸ்வா- ஆகியோரும் இயக்குநர் சொன்னதை செய்திருக்கிறார்கள்.
ஜேம்ஸ் வசந்தனின் பாடல்களும் , பின்னணி இசையும் படைப்பை ரசிக்க வைக்கிறது. தில் ராஜுவின் ஒளிப்பதிவில் வட சென்னை மக்களின் வாசம் அதிகம்.
திரில்லர் ஜேனரில் குடும்ப கதையை சாமர்த்தியமாக சொல்லி ரசிகர்களை வசப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் மைதீன்.
முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங் என்றாலும்.. குடும்ப உறவுகளுக்கான மேலாண்மையில் பணத்திற்கு இரண்டாம் இடம் தான் என்பதை எடுத்துரைத்ததால் ‘ஆல் பாஸ்’ படத்தை வரவேற்கலாம்.
ஆல் பாஸ் – பை பாஸ்
The post ஆல் பாஸ் | திரைவிமர்சனம் appeared first on Vanakkam London.