• Fri. Oct 9th, 2026

24×7 Live News

Apdin News

ஆண்ட்ரூவின் இல்லங்களில் முன்னெடுக்கப்பட்ட சோதனை சட்டவிரோதமானது: நீதிமன்றத்தில் பொலிஸ்!

Byadmin

Oct 9, 2026


ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ஸர் கடந்த பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்ட போது, அவரது இல்லங்களில் சோதனைகளை முன்னெடுப்பதற்காகப் பெறப்பட்ட நீதிமன்ற உத்தரவுகள் சட்டவிரோதமானவை என்பதை இங்கிலாந்தின் தேம்ஸ் வேலி பொலிஸார், உயர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இங்கிலாந்தின் வர்த்தகத் தூதராக 2010ஆம் ஆண்டில் ஆண்ட்ரூ பணியாற்றிய காலத்தில், பாலியல் குற்றங்களுக்காக தண்டனை பெற்ற ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு அரச இரகசியத் தகவல்களை வழங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டார்.
எனினும், தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் அவர் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றார்.

1984ஆம் ஆண்டின் பொலிஸ் மற்றும் குற்றவியல் சான்றுச் சட்டத்தின் பிரிவு 8 மற்றும் 9 ஆகியவற்றின் கீழ் சோதனைக்கான அனுமதியை பொலிஸார் கோரியிருந்த போதிலும், நீதிமன்றம் பிரிவு 8இன் கீழ் மாத்திரமே உத்தரவை வழங்கியிருந்தது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகளின் போது, குறித்த உத்தரவு பிரிவு 9இன் கீழ் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பது தெளிவாகியதால், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட சோதனை உத்தரவு நீதிமன்றத்தால் சட்டபூர்வமாக இரத்துச் செய்யப்பட்டது.

இதேவேளை, குறித்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள் மற்றும் இலத்திரனியல் சாதனங்களை பொலிஸார் தற்போதும் தமது கட்டுப்பாட்டிலேயே வைத்துள்ளனர். இந்த ஆதாரங்களை வழக்கு விசாரணை நடவடிக்கைகளுக்காக பொலிஸார் தொடர்ந்தும் தம்வசம் வைத்திருக்க முடியுமா என்பதைத் தீர்மானிப்பதற்கான அடுத்த கட்ட விசாரணை 2027ஆம் ஆண்டில் நடைபெறவுள்ளது.

சோதனைக்கான நீதிமன்ற உத்தரவு இரத்துச் செய்யப்பட்ட போதிலும், ஆண்ட்ரூ மீதான குற்றவியல் விசாரணைகள் கைவிடப்படவில்லை எனவும், அந்த விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் தரப்பும் நீதிமன்றமும் தெளிவுபடுத்தியுள்ளன.

By admin