பட மூலாதாரம், Getty Images
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
தமிழ்நாட்டில் விஜய் தலைமையில் புதிய அரசு அமைவதில் உள்ள சிக்கல் இன்று தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விசிக மற்றும் இடது சாரிகளிடம் தவெக ஆதரவு கேட்டிருந்த நிலையில், அக்கட்சிகள் விஜய்க்கு ஆதரவு அளிக்கக் கூடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பேபி சூசகமாக தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய பேபி, “புதிய கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அக்கட்சிக்கு பெரும்பான்மைக்கு சில தொகுதிகளே தேவைப்படுகின்றன. அக்கட்சியை ஆளுநர் அழைத்திருக்க வேண்டும். மர்மமான காரணங்களால், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக தலைவரை ஆட்சியமைக்க தமிழக ஆளுநர் அழைக்கவில்லை. அக்கட்சியை ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்திருக்க வேண்டும். தனிப்பெரும் கட்சியின் தலைவரை ஆளுநர் சந்தித்திருக்கிறார். ஆனால்,ட யார் உங்களுக்கு ஆதரவு தருவார்? பெரும்பான்மையை எவ்வாறு காட்டுவீர்கள்? என்று ஆளுநர் கேட்டிருக்கிறார். அது ஆளுநரின் பொறுப்பு அல்ல.
13 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வாஜ்பேயி அரசு அமைந்த போது, அவையில் பெரும்பான்மையை நிரூபிக்க போதுமான பலம் உள்ளதா என்று குடியரசுத் தலைவர் கேட்கவில்லை. பிறகு வாஜ்பேயிக்கு ஒரு மாத அவகாசம் அளிக்கப்பட்டது. இங்கே, தவெக தலைவர் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க 2 வாரங்கள் மட்டுமே அவகாசம் கேட்டிருக்கிறார். மத்தியிலும் பல மாநிலங்களிலும் பின்பற்றப்பட்ட மரபை ஆளுநர் கடைபிடிக்காதது துரதிர்ஷ்டவசமானது.” என்று அவர் கூறினார்.
மேலும் தொடர்ந்த அவர், “விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா மற்றும் நான் ஆகிய மூவரும் கலந்தாலோசித்தோம். இதுதொடர்பாக ஆலோசித்து அடுத்தக்கட்ட பொருத்தமான முடிவை எடுக்குமாறு மாநில கட்சி நிர்வாகங்களிடம் அறிவுறுத்தியிருந்தோம். ஆகவே, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் தவெகவால் ஆளுநர் முன்னிலையிலும் கூட அறுதிப்பெரும்பான்மையை நிரூபிக்க முடியும். அப்போது தனிப்பெரும் கட்சியை ஆட்சியமைக்க அழைப்பதைத் தவிர ஆளுநருக்கு வேறு தெரிவுகள் இருக்காது.
மூன்று கட்சிகளும் இன்று மாலை மீண்டும் இதுகுறித்து கலந்தாலோசிக்கும். இன்று மாலைக்குள் இந்த செயல்முறை நிறைவடையும் என்று எண்ணுகிறோம். எல்லாமே தெளிவாகிவிடும். ஆகவே, தனிப்பெரும் கட்சியின் தலைவரை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்கும் நிலை உருவாகும்.” என்று தெரிவித்தார்.