படக்குறிப்பு, ஆசிய விளையாட்டில் 400 மீ தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கலம் வென்ற வித்யா ராம்ராஜ்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் மீண்டும் ஒரு பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார். தடை தாண்டும் ஓட்டத்தில் பி.டி.உஷாவின் தேசிய சாதனையை முறியடித்த அவர், வெண்கலம் வென்றுள்ளார்.
புதிய தேசிய சாதனையுடன் இரண்டாவது பதக்கம் வென்றுள்ள வித்யா ராமராஜை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தமிழக முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்தியுள்ளனர். பி.டி.உஷாவும் தனது நாற்பது ஆண்டுக்கும் மேலான தேசிய சாதனையை முறியடித்தமைக்காக வித்யாவை பாராட்டியுள்ளார்.
புதிய தேசிய சாதனையுடன் வெண்கலம் வென்ற வித்யா ராம்ராஜ்
ஜப்பானின் நகோயா நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதன் 9-வது நாளான இன்று இந்தியாவுக்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ் மீண்டும் ஒரு பதக்கம் வென்றார்.
பெண்கள் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் 55.41 விநாடிகளில் கடந்து அவர் வெண்கலப் பதக்கத்தை வென்றார். இந்த போட்டியில் முதலிடம் பிடித்த ஐக்கிய அரபு அமீரக வீராங்கனை மரியம் கரீம் தங்கத்தையும், இரண்டாவது இடம் பிடித்த கஜகஸ்தானைச் சேர்ந்த அடெலினா ஜெம்ஸ் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.
400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தை 55.41 விநாடிகளில் முடித்ததன் மூலம் 4 தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த பி.டி.உஷாவின் சாதனையை வித்யா ராம்ராஜ் முறியடித்துள்ளார்.
பட மூலாதாரம், Toru HanaiGetty Images
படக்குறிப்பு, ஐக்கிய அரபு அமீரக வீராங்கனை மரியம் கரீம் (நடுவில்), கஜகஸ்தானைச் சேர்ந்த அடெலினா ஜெம்ஸ் (இடது) மற்றும் வித்யா ராம்ராஜ் (வலது)
1984-இல் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தை 55.42 விநாடிகளில் பி.டி.உஷா முடித்ததே இந்திய அளவில் தேசிய சாதனையாக 40 ஆண்டுக்கும் மேலாக நீடித்து வந்தது.
நடப்பு ஆசிய விளையாட்டில், ஏற்கனவே கலப்பு 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளி வென்ற இந்திய அணியிலும் வித்யா இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பி.டி.உஷா கூறியது என்ன?
பட மூலாதாரம், X/PT Usha
படக்குறிப்பு, கோப்புப் படம்
“400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வித்யா ராம்ராஜ் எனது தேசிய சாதனையை முறியடிப்பது மிகவும் சிறப்பான தருணம்,” என பி.டி.உஷா தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பதிவில், “சாதனைகள் முறியடிக்கப்படுவதற்கே உள்ளன. ஒரு வீரருக்கு தான் உருவாக்கிய எல்லையைக் கடந்து அடுத்த தலைமுறை செல்வதைப் பார்ப்பதைவிட வேறு எந்த வெகுமதியும் இருக்க முடியாது. விளையாட்டு வீரர்களாகிய நாம், நம்மை நாமே சவால் விடுத்துக்கொள்ளவும், எல்லைகளை விரிவுபடுத்தவும், இறுதியாக, நாம் இந்த விளையாட்டில் நுழைந்தபோது இருந்த நிலையை விட அதை மேம்பட்ட நிலையில் விட்டுச் செல்லவும் போட்டியிடுகிறோம். ஒரு இளம் விளையாட்டு வீரர் பல தசாப்தங்களாக நீடித்திருந்த ஒரு மைல்கல்லைக் கடக்கும்போது, அது அந்த வீரருக்கு மட்டுமல்ல, அந்த விளையாட்டுக்கே பெருமை சேர்க்கும் தருணமாக அமைகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
“ஒரு சாதனையின் மிகச்சிறந்த மரபு என்பது அது எவ்வளவு காலம் நிலைத்திருக்கிறது என்பதில் இல்லை. மாறாக, அதைவிடச் சிறந்து விளங்க வேண்டும் என்று அடுத்த தலைமுறை விளையாட்டு வீரரை அது எவ்வாறு ஊக்கப்படுத்துகிறது என்பதில்தான் உள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பி.டி.உஷா சாதனையை முன்பு ஒருமுறை சமன் செய்த வித்யா ராம்ராஜ்
பட மூலாதாரம், NITHYA RAMRAJ
முன்னதாக 2023-ஆம் அக்டோபரில் சீனாவில் நடைபெற்ற ஆசியப் போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வித்யா வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.
அப்போது பந்தய தூரத்தை அவர் 55.42 விநாடிகளில் கடந்து பி.டி.உஷாவின் தேசிய சாதனையை சமன் செய்திருந்தார்.
2023-இல் பிபிசி தமிழிடம் பேசிய வித்யாவின் சகோதரியும் தடகள வீராங்கனையுமான நித்யா, ”என் சகோதரி, பி.டி.உஷாவின் சாதனையை சமன் செய்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. விரைவில் வித்யா பி.டி.உஷாவின் சாதனையை முறியடிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.” எனத் தெரிவித்திருந்தார். இரு சகோதரிகளுக்கும் பயிற்சியளிக்கும் நேபாள் சிங் ரத்தோரும் பி.டி.உஷாவின் சாதனையை வித்யா முறியடிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
அவர்களது நம்பிக்கை இன்றைய தினம் நனவாகியிருக்கிறது.
வித்யாவுக்கு குவியும் பாராட்டுகள்
பட மூலாதாரம், Yong Teck LimGetty Images
புதிய தேசிய சாதனை படைத்துள்ள வித்யா ராம்ராஜூக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, வித்யாவை வாழ்த்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தனிப்பட்ட சிறந்த சாதனை மற்றும் புதிய தேசிய சாதனையுடன் கூடிய உங்கள் சிறப்பான செயல்பாடு, இந்தியாவின் தடகளப் பயணத்தில் மேலும் ஒரு பெருமைமிக்க சாதனையைச் சேர்த்துள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
வெண்கலப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜூக்கு தனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “இந்தியாவின் புகழ்பெற்ற தடகள வீராங்கனை திருமதி பி.டி. உஷா அவர்கள் 1984-ஆம் ஆண்டு படைத்த தேசிய சாதனையை 42 ஆண்டுகளுக்குப் பின்னர் வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்கள் முறியடித்து, தற்போது புதிய தேசிய சாதனையைப் படைத்திருப்பது மேலும் சிறப்புக்குரியதாகும். அவரது வெற்றி, தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கும், மகளிருக்கும் புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும். தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்கள் தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்திட வாழ்த்துகிறேன்!” என்று விஜய் தெரிவித்துள்ளார்.
இரட்டைச் சகோதரிகள், இரட்டைக் கனவுகள்
பட மூலாதாரம், Handout
படக்குறிப்பு, சகோதரிகள் வித்யா மற்றும் நித்யா
கோவையைச் சேர்ந்த ராம்ராஜ் – மீனா தம்பதியினருக்கு, இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தவர்கள் வித்யா மற்றும் நித்யா. இவர்களுக்கு சத்யா என்கிற மூத்த சகோதரியும் உள்ளார். இவர்களது தந்தை ராம்ராஜ் ஓட்டுநராகப் பணியாற்றினார். தாய் மீனா மகள்களின் விளையாட்டுக் கனவுக்கு உறுதுணையாக இருந்ததாக இருவரும் பல்வேறு தருணங்களில் பதிவு செய்துள்ளனர்.
வித்யா, நித்யா ஆகிய இருவரும் பள்ளிப் பருவத்திலேயே விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி மேற்கொண்டுள்ளனர். “எங்களின் இந்தப் பயணத்துக்கு என் அம்மா தான் காரணம்,” என 2023-இல் நித்யா பிபிசி தமிழிடம் தெரிவித்திருந்தார்.
தேசிய போட்டிகளில் பதக்கம் வென்ற இருவரும் தற்போது மத்திய அரசுப் பணிகளில் உள்ளனர்.
பட மூலாதாரம், NITHYA RAMRAJ
பி.டி.உஷாவின் சாதனையை வித்யா முறியடித்திருப்பது பற்றி பிபிசி தமிழிடம் பேசிய அவரின் தந்தை ராம்ராஜ் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
“நான் இப்போது தான் தொலைக்காட்சியில் என் மகள் பதக்கம் வென்றதைப் பார்த்தேன். அவர் நிச்சயமாக இந்தப் போட்டியில் தங்கம் வெல்வார் என நான் நம்பியிருந்தேன். தங்கம் வெல்லாவிட்டாலும் பி.டி.உஷாவின் சாதனையை முறியடித்திருக்கிறார். அவர் நிச்சயமாக ஒலிம்பிக்கில் சாதனை படைப்பார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. வித்யாவைப் போலவே எனது மகள் நித்யாவும் ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற்று பதக்கம் வெல்வார் என்று நான் நம்புகிறேன்.
இந்தச் சாதனையால் நானும் குடும்பத்தாரும் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறோம். அவரின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது. கடந்த மூன்று ஆண்டுகளாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஜெயிப்பதைத் தவிர வேறு எதன் மீதும் கவனம் செலுத்தாமல் அதற்கான பயிற்சியில் இருந்தார். அந்த விடாமுயற்சிக்கும் உழைப்புக்கும் இப்போது வெற்றி கிடைத்திருக்கிறது.” என்று அவர் கூறினார்.