இங்கிலாந்தின் மிகப்பெரிய வங்கிகள் சில, வறிய நிலையில் உள்ள மற்றும் வீடற்ற வாடிக்கையாளர்களுக்கு உரிய சேவைகளை வழங்கத் தவறிவிட்டதாக அந்நாட்டின் நிதி நடத்தை ஆணையம் (FCA) குற்றம் சாட்டியுள்ளது.
வீடற்றவர்கள் அல்லது கடும் நிதி நெருக்கடியில் இருப்பவர்களுக்குத் தேவையான ‘அடிப்படை வங்கிக் கணக்குகளை’ (Basic Bank Accounts) வழங்குவதற்குப் பதிலாக, அவர்களுக்குப் பொருந்தாத ஆன்லைன் விண்ணப்பங்களை நோக்கி, வங்கிகள் அவர்களைத் தள்ளுவதாகக் கூறப்படுகிறது.
இத்தகைய அடிப்படை வங்கிக் கணக்குகள் கட்டணமில்லாதவை மற்றும் ‘ஓவர் டிராப்ட்’ (Overdraft) வசதி இல்லாதவை. வழக்கமான வங்கிக் கணக்குகளைத் தொடங்க முடியாதவர்களுக்கு இவை மிகவும் அவசியமானவை,.
FCA நடத்திய இரகசியச் சோதனையில், அடிப்படை வங்கிக் கணக்குகள் தொடர்பான மூன்றில் ஒரு பங்கு அனுபவங்கள் ‘மோசமானவை’ அல்லது ‘மிகவும் மோசமானவை’ என மதிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக, நிலையான முகவரி இல்லாதவர்களுக்கு இக்கணக்குகளை வழங்க வங்கிகள் மறுப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
அடிப்படை வங்கிக் கணக்கின் சிறப்பம்சங்கள்:
சம்பளம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
கடன் அட்டைகள் (Debit cards) மற்றும் நேரடிப் பரிமாற்றங்களை மேற்கொள்ளலாம்.
மோசமான கடன் பின்னணி (Bad credit history) கொண்டவர்கள் அல்லது திவாலானவர்களும் இக்கணக்கைத் தொடங்கலாம்.
வீடற்றவர்களுக்குச் சில தொண்டு நிறுவனங்கள் மூலம் அடையாளத்தை உறுதிப்படுத்தி கணக்கு தொடங்க வழிவகை உண்டு.
பார்க்லேஸ் (Barclays), எச்எஸ்பிசி (HSBC), சாண்டாண்டர் (Santander), லாயிட்ஸ் (Lloyds) மற்றும் நாட்வெஸ்ட் (NatWest) உள்ளிட்ட 9 முக்கிய வங்கிகள், இனி வரும் காலங்களில் இச்சேவைகளை எளிதாக்க ஒப்புக்கொண்டுள்ளன. முறையான அடையாளச் சான்று அல்லது நிரந்தர முகவரி இல்லாதவர்களுக்கும் வங்கிச் சேவைகளைத் தடையின்றி வழங்கவும், ஆன்லைன் விண்ணப்பங்களுக்கு மாற்றாக நேரடிச் சேவைகளை வழங்கவும் வங்கிகள் உறுதியளித்துள்ளன.
“நிதி உள்ளடக்கம் (Financial Inclusion) என்பது அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும். தகுதியுள்ள மக்கள் வங்கிச் சேவைகளைப் பெறுவதை உறுதி செய்வதே எங்களின் நோக்கம்” என்று FCAஇன் இயக்குனர் இமாத் அலதஹல் தெரிவித்துள்ளார்.
தற்போது இங்கிலாந்தில் சுமார் 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இத்தகைய அடிப்படை வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post விளிம்புநிலை மக்களைப் புறக்கணிப்பதாக இங்கிலாந்து வங்கிகள் மீது கடும் குற்றச்சாட்டு: நிதி ஆணையம் எச்சரிக்கை! appeared first on Vanakkam London.