பட மூலாதாரம், ANI
-
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
“என்னை வைத்து தி.மு.க தலைவர் (2011 சட்டப்பேரவைத் தேர்தல்) வெற்றி பெற்றார். தற்போது நான் அவரை வெற்றி பெற்றுவிட்டேன். இதைப் பெரிய வெற்றியாகக் கருதவில்லை.” – கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினை எதிர்த்து வெற்றி பெற்றது குறித்து த.வெ.க சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ்.பாபு இவ்வாறு கூறினார்.
சுவாச பிரச்னை காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சுமார் 70 நாட்களுக்குப் பிறகு காலமாகிவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. அவருக்கு வயது 75.
நீண்டகால சுவாச பாதிப்பு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் வி.எஸ்.பாபு சிகிச்சை பெற்று வந்ததாக, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வடசென்னையில் தி.மு.கவின் முகமாக அறியப்பட்ட வி.எஸ்.பாபு, பெரம்பூரில் வசித்து வந்தார். தான் எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளதாக, கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
‘தன் மீது எந்தக் குற்ற வழக்குகளும் நிலுவையில் இல்லை’ எனவும் பிரமாணப் பத்திரத்தில் வி.எஸ்.பாபு கூறியுள்ளார்.
வி.எஸ்.பாபுவின் அரசியல் பயணம்
பட மூலாதாரம், VS Babu
தி.மு.கவில் ஒரு தொண்டராக அரசியல் வாழ்வைத் தொடங்கிய வி.எஸ்.பாபு, அக்கட்சியின் பகுதிச் செயலாளராக நியமிக்கப்பட்டார். சென்னையை கட்சியின் நிர்வாக வசதிக்காக இரு மாவட்டங்களாக தி.மு.க பிரித்தபோது, வடசென்னை மாவட்ட செயலாளராக வி.எஸ்.பாபு நியமிக்கப்பட்டார்.
2006-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் புரசைவாக்கம் தொகுதியில் இருந்து தி.மு.க எம்.எல்.ஏவாக அவர் வெற்றி பெற்றார். 2008 ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பில் புரசைவாக்கம் தொகுதி நீக்கப்பட்டது.
இத்தொகுதியின்கீழ் இருந்து பல பகுதிகள் புதிதாக சேர்க்கப்பட்டு கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியுடன் இணைக்கப்பட்டன. அதுவரை ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிட்டு வந்த மு.க.ஸ்டாலின், 2011-ஆம் ஆண்டு கொளத்தூர் தொகுதியில் களமிறங்கினார்.
அவரது வெற்றிக்கு தான் பங்களிப்பு செலுத்தியதாக, பின் நாட்களில் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளிக்கும்போது வி.எஸ்.பாபு தெரிவித்தார்.
அ.தி.மு.கவில் அங்கம் வகித்த சேகர்பாபு தி.மு.கவில் இணைந்த பிறகு வி.எஸ்.பாபுவின் முக்கியத்துவம் குறையத் தொடங்கியது.
ஒருகட்டத்தில் தனது மாவட்ட செயலாளர் பதவியை அவர் ராஜினாமா செய்துவிட்டார்.
“தி.மு.கவில் இருந்து நான் வெளியேற்றப்படவில்லை. நானாக வெளியேறினேன்” எனக் கடந்த மே மாதம் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.
தி.மு.கவில் இருந்து விலகிய பிறகு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்த அவர், 2016-ஆம் ஆண்டு அ.தி.மு.கவில் இணைந்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு டி.டி.வி.தினகரனின் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார்.
அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்ட டி.டி.வி.தினகரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார். அங்கும் சிலகாலம் வி.எஸ்.பாபு செயல்பட்டார். இதன்பிறகு மீண்டும் அ.தி.மு.கவில் இணைந்தார்.
பட மூலாதாரம், DIPR
ஸ்டாலினை தோற்கடித்தபோது வி.எஸ்.பாபு கூறியது என்ன?
இந்தநிலையில் கடந்த பிப்ரவரி மாதம் த.வெ.கவில் வி.எஸ்.பாபு இணைந்தார். சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை வி.எஸ்.பாபுவுக்கு த.வெ.க தலைவர் விஜய் வழங்கினார்.
வி.எஸ்.பாபுவின் வேண்டுகோளுக்காகவே பெரம்பூரில் வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு கொளத்தூர் தொகுதியில் த.வெ.க தலைவர் ஜோசப் விஜய் தேர்தல் பிரசாரம் செய்ததாக, நவம்பர் 19 அன்று செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றார். முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தோற்கடித்ததால் ஊடகங்களில் வி.எஸ்.பாபு கவனம் பெற்றார்.
தேர்தல் முடிவுக்குப் பிறகு பனையூரில் த.வெ.க தலைவர் ஜோசப் விஜய் நடத்திய கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எல்லா புகழும் த.வெ.க தலைவருக்கே’ எனக் கூறினார்.
“ஸ்டாலின் தோல்வி அடைந்ததற்கு விஜய் தான் காரணம்” எனக் கூறிய வி.எஸ்.பாபு, “தி.மு.க தலைவருடன் நெருக்கமாக இருந்துள்ளேன். என்னை வைத்து தி.மு.க தலைவர் (2011 சட்டப்பேரவைத் தேர்தல்) வெற்றி பெற்றார். தற்போது நான் அவரை வெற்றி பெற்றுவிட்டேன். இதைப் பெரிய வெற்றியாக கருதவில்லை” எனத் தெரிவித்தார்.
வி.எஸ்.பாபுவின் தேர்தல் வெற்றியை எதிர்த்து கடந்த ஆகஸ்ட் மாதம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவில், ‘வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் சரிபார்ப்பில் குளறுபடிகள் உள்ளன’ என அவர் கூறியிருந்தார்.
ஆனால், ‘இந்த வழக்கு நிலைக்கத்தக்கது அல்ல’ எனக் கூறி கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி தலைமையிலான அமர்வு மனுவைத் தள்ளுபடி செய்தது.
சர்ச்சையை ஏற்படுத்திய சைகை
பட மூலாதாரம், @mkstalin/X
தேர்தல் வெற்றிக்குப் பிறகு, இரண்டு கைகளையும் மடக்கி வி.எஸ்.பாபு தொடர்ந்து சைகை காட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனை பொதுவெளியில் அவர் செய்து காட்டியபடியே இருந்தார்.
அதே சைகையை சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் செய்து காட்டினார்.
தொடர்ந்து, மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் த.வெ.க வெற்றி பெற்றது.
இதனைக் கொண்டாடும் வகையில் அமைச்சர்கள் ஆனந்த், அருண்ராஜ், ஆதவ் அர்ஜூனா ஆகியோருடன் இணைந்து அதே சைகையை முதலமைச்சர் ஜோசப் விஜய் செய்து காட்டிய புகைப்படம் இணையதளத்தில் பரவியது.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்று வந்த வி.எஸ்.பாபுவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மூச்சுத் திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நலம் குறித்து தொடக்கத்தில் மருத்துவ அறிக்கைகள் வெளியாகி வந்தன. ஆனால், அதன்பிறகு அவரது உடல்நலம் குறித்த எந்தத் தகவலும் வெளிவரவில்லை. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண் ராஜிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “தீவிர சிகிச்சைப் பிரிவில் வி.எஸ்.பாபு உள்ளார். விரைவில் அவரது உடல்நிலை குறித்த தகவல் வரும்” எனக் கூறினார்.
கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி அமைச்சர் அருண்ராஜ் அளித்த பேட்டியில், ” வி.எஸ்.பாபு சிகிச்சையில் இருக்கிறார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
உடல்நிலையை வெளியிடக் கோரி வழக்கு
இந்தநிலையில், நவம்பர் 18-ஆம் தேதி கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட செம்பியம் பகுதியைச் சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ‘கொளத்தூர் தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதியன்று அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து அலுவல்ரீதியாக எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை’ எனக் கூறியிருந்தார்.
‘அவரது தனிப்பட்ட அந்தரங்க உரிமை, கண்ணியம், தனிநபர் ரகசியம் தொடர்பான மருத்துவ விவரங்களை வெளியிடும்படி கோரவில்லை. ஆனால், தொகுதி எம்.எல்.ஏ என்ற முறையில் அவரது உடல்நிலை குறித்து தகவல்களைத் தெரிந்து கொள்ள அனைவருக்கும் உரிமை உள்ளது’ எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
‘மருத்துவ சிகிச்சையில் உள்ள வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து சட்டப்படி அனுமதிக்கப்பட்ட தகவல்களை வெளியிடுமாறு நவம்பர் 5 மற்றும் நவம்பர் 13 ஆகிய தேதிகளில் அரசுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை’ என வழக்கின் மனுவில் தேவராஜன் தெரிவித்திருந்தார்.
இந்த மனு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், வி.எஸ்.பாபு உயிரிழந்துவிட்டதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பேரவையில் ஆறு தொகுதிகள் காலி
தமிழ்நாடு சட்டப்பேரவையில் காலியாக உள்ள ஏழு தொகுதிகளில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்குக் கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த இரண்டு தொகுதிகளிலும் த.வெ.க வெற்றி பெற்றது.
திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர், பெருந்துறை ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படவில்லை. இந்தத் தொகுதிகளில் தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்ததே, இடைத்தேர்தல் அறிவிக்கப்படாததற்குக் காரணமாக இருந்தன.
தேர்தல் வழக்குகளை முன்வைத்து இடைத்தேர்தலுக்கு தடை விதிக்குமாறு பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாஜலபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரின் மனுவை விசாரித்த நீதிபதிகள், ஐந்து தொகுதிகளிலும் இடைத்தேர்லை நடத்த தடை விதித்தனர்.
கொளத்தூர் தொகுதியில் வி.எஸ்.பாபு காலமானதைத் தொடர்ந்து காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு