பட மூலாதாரம், Getty Images
“நெய் சாப்பிட்டால் உடல் எடை கூடும்”,
“வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் கொழுப்பு குறையும்”,
“நெய் வயிற்று புண்ணை ஆற்றும்”,
“நெய் மாரடைப்பை ஏற்படுத்தும்” – இது போன்ற முரணான கருத்துகள் பலவற்றை நெய் குறித்து நாம் அடிக்கடி கேட்டிருப்போம். கேட்பது மட்டுமல்ல, சிலர் இவற்றை கடைப்பிடிப்பதும் உண்டு.
நெய்யில் 60% -65% saturated fat (நிறை கொழுப்பு), 20%-25% monounsaturated fat, 3%-4% polyunsaturated fat மற்றும் சில விட்டமின்கள் உள்ளன.
இதில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பும் உள்ளது. கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் கெட்ட கொழுப்பும் உள்ளது.
நெய் உட்கொள்வதன் எதிர்மறை தாக்கங்கள் குறித்து பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது நெய் உட்கொள்வதன் நன்மைகள் குறித்து அதிகம் பேசப்படுகின்றன. இவற்றில் எது உண்மை? எது பொய்?
நெய் குறித்த தவறான புரிதல்கள் எவை, சரியான தகவல்கள் என்னவென்று மருத்துவர்கள் விளக்குகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
நெய் சாப்பிட்டால் உடல் எடை கூடுமா?
நெய் சாப்பிடுவதாலேயே உடல் எடை கூடாது என்று மருத்துவர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.
பிபிசி தமிழிடம் பேசிய இருதயவியல் நிபுணர் மருத்துவர் ரெஃபாய் ரெஃபாய் ஷவுகத் அலி, “எந்த உணவும் அமிர்தமாவதும், நஞ்சாவதும் அதை உட்கொள்ளும் அளவில் தான் உள்ளது. நெய் எடுத்துக் கொண்டால் உடல் எடை கூடுமா என்று கேட்டால், நேரடி பதில் ‘கூடாது’ என்பதாகும். ஆனால், நெய் அதிக அளவில் எடுத்துக் கொள்வதால் உடலில் கொலஸ்ட்ரால் (உடல் கொழுப்பு) அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.” என்றார்
நெய் உட்கொள்வதால் ரத்த நாளங்கள் அடைபடுமா?
நெய் உட்கொள்வதால் அதிகரிக்கும் கொழுப்பு இருதய நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று மருத்துவர் ரெஃபாய் கூறுகிறார்.
“நெய் நேரடியாக சென்று இருதய ரத்த நாளங்களில் படிந்து, இருதய நோயை ஏற்படுத்தாது. நாம் சாப்பிடும் எந்த உணவும் அப்படி நேரடியாக ரத்த நாளங்களில் படியாது. ஆனால் அதிக அளவில் நெய் உட்கொண்டால், அது உடல் கொழுப்பை அதிகரிக்கும். உடல் கொழுப்பு அதிகரிப்பால் இருதய பாதிப்பு ஏற்படும் என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று” என்று அவர் விளக்குகிறார்.
பட மூலாதாரம், Getty Images
ஒருவர் எவ்வளவு நெய் ஒரு நாளுக்கு எடுத்துக் கொள்ளலாம்?
பிபிசி தமிழிடம் பேசிய ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ், தினசரி உட்கொள்ள வேண்டிய நெய்யின் அளவு மற்றும் அதற்குப் பின்னுள்ள அறிவியல் காரணங்களை விளக்கினார்.
“ஐசிஎம்ஆர் 2024 வழிகாட்டுதலின்படி, ஆரோக்கியமான பெரியவர்கள் ஒரு நாளைக்கு மொத்தமாக 27 முதல் 30 கிராம் வரை கொழுப்பு அல்லது எண்ணெயை உட்கொள்ளலாம்.
அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் பரிந்துரையின்படி, நிறை கொழுப்புகள் உடலுக்குத் தேவையான மொத்த கலோரிகளில் 6 சதவீதத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். நெய், வெண்ணெய், பாலாடைக்கட்டி, சிவப்பு இறைச்சி மற்றும் பிற விலங்கு சார்ந்த உணவுகளில் நிறை கொழுப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றன.
நிறை கொழுப்புகள் உடலில் ‘கெட்ட’ கொழுப்பாகக் கருதப்படும் எல்டிஎல் (LDL) கொழுப்பின் அளவை உயர்த்துவதுடன், இதய நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும் என்பதை பல தசாப்தங்களாக நடைபெற்ற அறிவியல் ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
உதாரணமாக, ஒருவருக்கு ஒரு நாளைக்கு 2,000 கலோரிகள் தேவைப்பட்டால், அதில் 120 கலோரிகளுக்கு மேல் நிறை கொழுப்பிலிருந்து வரக்கூடாது. நெய்யில் சுமார் 60 முதல் 65 சதவீதம் வரை நிறை கொழுப்பு இருப்பதால், அதை அதிக அளவில் உட்கொள்வது உடலில் ‘கெட்ட’ கொழுப்பின் அளவை அதிகரிக்கக்கூடும்,” என்று அவர் கூறினார்.
நெய் வயிற்றுப் புண்ணை ஆற்றும் என்று கூறுவது உண்மையா?
பட மூலாதாரம், Getty Images
நெய்யில் உள்ள monounsaturated, polyunsaturated கொழுப்புச் சத்து உடலுக்கு தேவையானவை என்று அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பொது மருத்துவர், பேராசிரியர் சந்திரசேகர் கூறுகிறார்.
“உடலுக்கு தேவையான லினோலிக் அமிலம் , புட்ரிக் அமிலம் உள்ளிட்ட சில நல்ல அமிலங்கள் நெய்யில் உள்ளன. இவை செரிமானத்துக்கு உதவும்” என்கிறார்.
அதே நேரம் இதனை மருந்து போல உட்கொள்ளக் கூடாது என்று மருத்துவர் ரெஃபாய் எச்சரிக்கிறார்.
“நெய்யில் நிறை கொழுப்பு அதிகம் உள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. எனவே நல்ல அமிலங்கள் இருந்தாலும், வயிற்றுப் புண்ணை ஆற்றவோ, செரிமானத்துக்காகவோ நெய்யை அரை ஸ்பூனுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.” என்கிறார்.
வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் உடல் கொழுப்பு குறையுமா?
இது முற்றிலும் தவறு என்கிறார் மருத்துவர் ரெஃபாய்.
“நெய் சாப்பிடுவதால் உடல் கொழுப்பு குறையவே குறையாது. உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கக் கூடிய நிறை கொழுப்பு நெய்யில் 60%-65% இருக்கும் போது, உடல் கொழுப்பு குறைய வாய்ப்பே இல்லை” என்கிறார்.
குழந்தைகளுக்கு நெய் கொடுப்பது நல்லதா?
குழந்தைகளுக்கு நெய் உட்கொள்வது அவர்களின் வளர்ச்சிக்கு உதவக்கூடும் என்று மருத்துவர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.
“குழந்தைகளின் நரம்பு மண்டல வளர்ச்சி, தோல் ஆரோக்கியம், செரிமானம் ஆகியவற்றுக்கு நெய் உதவும்” என்கிறார் மருத்துவர் சந்திரசேகர்.
மருத்துவர் ரெஃபாய் கூறுகையில், “குழந்தைகளின் வளர்சிதை மாற்றம் பெரியவர்களிடமிருந்து வேறுபடுகிறது. நெய்யில் உள்ள நல்ல அமிலங்கள் குழந்தைகளின் வயிற்று நலனுக்கு உதவக்கூடும். நெய்யில் கொழுப்பில் கரையும் வைட்டமின்களான வைட்டமின் ஈ மற்றும் கே ஆகியவை உள்ளன. அவையும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும்” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
எண்ணெய்களை விட நெய் சிறந்ததா?
கண்டிப்பாக கிடையாது என்கிறார் மருத்துவர் ரெஃபாய்.
“எண்ணெய்க்கு பதிலாக நெய்யில் சமைத்து உண்பது மிகவும் ஆபத்தானது. நெய் தோசை, நெய்யில் இட்லி போன்ற உணவுகளை ஆசைக்கு எப்போதாவது ஒரு முறை சாப்பிடலாம். அடிக்கடி சாப்பிடுவது உடல் நலத்துக்கு கண்டிப்பாக தீங்கு விளைவிக்கும். எண்ணெயை விட நெய் சிறந்தது என்று கூற எந்த ஆதாரமும் இல்லை. எண்ணெய் பயன்பாட்டையும் நாம் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்” என்கிறார்.
நீரிழிவு நோயாளிகள் நெய் எடுத்துக் கொள்ளலாமா?
நீரிழிவு நோயாளிகள், உடல் கொழுப்பு அதிகமாக கொண்டவர்கள், ரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் கண்டிப்பாக நெய் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று மருத்துவர் ரெஃபாய் கூறுகிறார்.
“இவர்கள் நெய்யை முழுமையாக தவிர்ப்பதே நல்லது. நெய்யில் சில நல்ல அமிலங்கள் இருந்தாலும், ஒரு உணவை உட்கொள்வதால் பலன் அதிகமா, ஆபத்து அதிகமா என்றுதான் பார்க்க வேண்டும். அப்படி பார்க்கையில் நீரிழிவு நோயாளிகள், ரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் நெய்யை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்” என்கிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு