16
வெள்ளை மாளிகை ஊடகவியலாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த வருடாந்திர விருந்தில் திடீரெனத் துப்பாக்கிச் சத்தம் கேட்டதை அடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடனடியாக இரகசியப் பாதுகாப்புப் பணியினரால் வெளியேற்றப்பட்டார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாஷிங்டன், ஹில்டன் விடுதியில் நேற்றிரவு நடைபெற்ற இந்த நிகழ்வில், அதிபர் டிரம்ப் உரையாற்றிக் கொண்டிருந்த போது, சுமார் 7 முதல் 8 துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டன. உடனே இரகசிய சேவை அதிகாரிகள் மேடையைச் சுற்றி வளைத்து, அதிபரையும் அவரது மனைவி மெலனியா டிரம்ப்பையும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ் மற்றும் மூத்த ஆலோசகர் ஸ்டீபன் மில்லர் ஆகியோரும் வெளியேற்றப்பட்டனர்.
சம்பவத்தைத் தொடர்ந்து டிரம்ப் தனது ‘ட்ரூத் சோசியல்’ பக்கத்தில், “இரகசிய சேவை மற்றும் சட்ட அமலாக்கப் படையினர் அற்புதமான பணியைச் செய்தனர். அவர்கள் மிகவும் விரைவாகவும், துணிச்சலாகவும் செயல்பட்டனர். சந்தேகநபர் கைது செய்யப்பட்டுவிட்டார்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் எந்தவிதக் காயமும் ஏற்படவில்லை என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். சந்தேகநபரின் அடையாளம் மற்றும் நோக்கம் குறித்து எஃப்பிஐ விசாரணை நடத்தி வருகிறது.
சம்பவத்தை அடுத்து, விருந்து சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர், பாதுகாப்பு சோதனைகளை முடித்துவிட்டு, மீதமிருந்த நிகழ்ச்சி தொடர்ந்ததாகப் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக, 1981ஆம் ஆண்டு இதே விடுதியில் அப்போதைய அதிபர் ரொனால்ட் ரேகன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
