பட மூலாதாரம், Liam Asman
தனது பணியிடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 23 வயதான சாஸ்கியா ரீவ்ஸ்-பிரீஸ்ட்லி திடீரென மயங்கி விழுந்தார்.
அந்தச் சம்பவத்தை நினைவுகூரும் அவர், “எனக்கு தலைசுற்றியது; குமட்டல் உணர்வு ஏற்பட்டது. இதயம் மிக வேகமாகத் துடித்தது; திடீரென உடல் முழுவதும் வெப்பம் அதிகமாக பரவியதைப் போல உணர்ந்தேன்” என்று சொல்கிறார்.
ஆனால், அதற்கு முன்பு அவருக்கு எந்தவிதமான அறிகுறிகளும் தென்படவில்லை. சிறப்புத் தேவைகள் கொண்ட குழந்தைகளுக்கான ஆசிரியராகப் பணியாற்றும் சாஸ்கியா ரீவ்ஸ்-பிரீஸ்ட்லி, கால்பந்து விளையாட்டில் சிறந்த கோல்கீப்பராகவும் இருந்தார். வாரத்திற்கு நான்கு முறை கால்பந்து விளையாடி வந்த அவர், தன்னை நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் தகுதியுடனும் வைத்திருந்தார்.
ஆனால், தலைசுற்றிய அந்த சம்பவத்திற்குப் பிறகு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ரத்த பரிசோதனையில் அவருக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. அதிலும் வைட்டமின் டி அளவு மிகவும் குறைவாக, கிட்டத்தட்ட இல்லாத அளவில் இருந்தது தெரியவந்தது.
தற்போது பிரிட்டனில் குறிப்பிட்ட சில வயதுப் பிரிவினரிடையே, குறிப்பாகப் பெண்கள் மற்றும் இளம் பெண்களிடையே, வைட்டமின் டி குறைபாடு அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
பட மூலாதாரம், Getty Images
‘தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆய்வு’ தரவுகளின்படி, கடந்த ஆண்டு 11 முதல் 18 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் சுமார் நான்கில் ஒருவருக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.
கொழுப்பு நிறைந்த மீன், இறைச்சி போன்ற உணவுகள் மூலமாகவும், வைட்டமின் டி மாத்திரைகள் மூலமாகவும் இந்தச் சத்தைப் பெறலாம்.
ஆனால், நமது உடலுக்குத் தேவையான வைட்டமின் டியின் பெரும்பகுதி சூரிய ஒளியின் உதவியுடன் தோலிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. நாம் வாழும் இடம், ஆண்டின் பருவம் ஆகியவற்றைப் பொறுத்து சூரிய ஒளி கிடைக்கும் அளவு மாறுபடும். சூரிய ஒளி போதுமான அளவு கிடைக்காவிட்டால், உடலில் வைட்டமின் டி உற்பத்தியும் குறையலாம்.
உடலை முழுமையாக மூடிய ஆடைகளை அணிவதும், சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதும் வைட்டமின் டி உற்பத்தியைக் குறைக்கலாம். இருப்பினும், இவை சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகின்றன.
வெளிர் நிறத் தோலைக் கொண்டவர்களைவிட, அடர் நிறத் தோலைக் கொண்டவர்களுக்கு உடலில் போதுமான வைட்டமின் டி உற்பத்தியாக அதிக தீவிரமான சூரிய ஒளி தேவைப்படுகிறது.
வைட்டமின் டி குறைபாட்டைக் கண்டறிய மருத்துவர்கள் வழக்கமாக ரத்தப் பரிசோதனை செய்வதில்லை. ஆனால், ஒருவருக்குக் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கருதினால், வைட்டமின் டி மாத்திரைகளை எடுத்துக்கொள்ளுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம்.
வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகள் என்ன? அது அன்றாட வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது?
பட மூலாதாரம், Getty Images
குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டால், அது ‘ரிக்கெட்ஸ்’ எனப்படும் நோயை ஏற்படுத்தும். பெரியவர்களுக்கு இந்தக் குறைபாடு எலும்புகளை வலுவிழக்கச் செய்யும். இந்தப் பாதிப்பு ‘ஆஸ்டியோமலேசியா’ என்று அழைக்கப்படுகிறது.
குழந்தைகளுக்கான நாளமிலாச் சுரப்பி நிபுணர் மருத்துவர் சுமா உதய், இந்தப் பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இதை அவர் ஒரு “அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரியாமல் உடலைப் பாதிக்கும் குறைபாடு” அல்லது “கவனிக்கப்படாமல் போகும் பாதிப்பு” என்று குறிப்பிடுகிறார்.
இளம் வயதினருக்கும் பெரியவர்களுக்கும் வைட்டமின் டி குறைபாட்டைக் கண்டறிவது கடினம் என்று எச்சரிக்கும் அவர், இதனால் இந்தப் பாதிப்பு பெரும்பாலும் கவனிக்கப்படாமலோ அல்லது வேறு நோயாகத் தவறாகக் கருதப்படவோ வாய்ப்புள்ளதாகக் கூறுகிறார். தொடர்ந்து ஏற்படும் சோர்வு, மூட்டுகள் மற்றும் எலும்புகளில் வலி ஆகியவை இதன் அறிகுறிகளாக இருக்கலாம்.
“எளிமையாகச் சொல்வதானால், இந்தக் குறைபாடு எலும்புகளை உள்ளிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழக்கச் செய்து, அவற்றை மென்மையாக்குகிறது. இதனால் எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது” என்று மருத்துவர் சுமா உதய் விளக்குகிறார்.
பட மூலாதாரம், Amaka Osu
லிவர்பூலில் பல்கலைக்கழக விடுதியில் இரவு உணவு தயாரித்துக் கொண்டிருந்தபோது, அமகாவுக்கு திடீரென உடல் நடுங்கத் தொடங்கியது.
“என் கண் முன்னால் இருந்த எதையும் என்னால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை” என்று அந்த அனுபவத்தை அவர் நினைவுகூர்கிறார்.
அவருடன் தங்கியிருந்தவர்கள் அவரை மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பது தெரியவந்தது.
சோர்வைத் தவிர, வேறு எந்த அறிகுறியையும் தான் உணரவில்லை என்கிறார் அமகா. “எனக்கு 21 வயதுதான் ஆகிறது. நான் ஒரு மாணவி. படிப்பையும் வேலையையும் ஒருசேர கவனிக்க வேண்டியிருப்பதால், எப்போதும் சோர்வாகவே இருப்பேன்” என்று அவர் கூறுகிறார்.
தனது தாய்க்கும் முன்பு வைட்டமின் டி குறைபாடு இருந்ததை அவர் நினைவுகூர்கிறார். ஆனால், தனக்கும் அதே பாதிப்பு ஏற்படும் என்று அவர் ஒருபோதும் நினைத்ததில்லை.
வைட்டமின் டி சத்து மாத்திரைகளை எடுத்துக்கொண்ட பிறகு, அமகாவின் உடல்நிலை தற்போது மேம்பட்டு வருகிறது. இருப்பினும், மீண்டும் இதுபோன்ற பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் அவருக்கு உள்ளது.
“இது மிகவும் பயங்கரமான அனுபவம். மீண்டும் இதுபோன்று எதுவும் நடந்துவிடக் கூடாது என்றே விரும்புகிறேன்” என்று அவர் கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
பெண்களை வாழ்நாள் முழுவதும் பாதிக்கக்கூடிய குறைபாடு
டாக்டர் சுமா உதய், ‘ஆக்ட் நவ் வைட்டமின் டி’ (ACT NOW Vitamin D)என்ற அமைப்பை உருவாக்கியுள்ள மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் குழுவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். வைட்டமின் டி குறைபாட்டைக் கண்டறிவதற்கான தற்போதைய அளவுகோல்களை மேலும் கடுமையாக்க வேண்டும் என்று இந்தக் குழுவினர் வலியுறுத்துகின்றனர்.
இதன் மூலம், வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள இன்னும் பலரைக் கண்டறிய முடியும் என்றும், பரவலாகக் காணப்படும் இந்தப் பிரச்னையின் உண்மையான தீவிரத்தை வெளிக்கொணர முடியும் என்றும் அவர்கள் நம்புகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதற்கும் இது உதவும்.
பெண்களைப் பொறுத்தவரை, இளமைப் பருவத்தில் தொடங்கி கர்ப்ப காலம் வரை நீடிக்கக்கூடிய வைட்டமின் டி குறைபாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக உதய் எச்சரிக்கிறார். இந்தப் பாதிப்பு, பிறக்கும் குழந்தைகளையும் பாதிக்கக்கூடும் என்கிறார்.
“இந்தக் குறைபாட்டை ஆரம்பத்திலேயே சரிசெய்யாவிட்டால், அதன் பாதிப்புகள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் தொடரக்கூடும்” என்றும் அவர் எச்சரிக்கிறார்.
பட மூலாதாரம், Getty Images
பர்மிங்ஹாம் பல்கலைக்கழகப் பேராசிரியர் மார்ட்டின் ஹியூசன், “இது உண்மையிலேயே வியப்பளிக்கிறது” என்கிறார்.
வைட்டமின் டி கண்டறியப்பட்டு 100 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், எலும்புகளை மென்மையாக்கும் நோயான ரிக்கெட்ஸ் இன்னும் முற்றிலும் ஒழிக்கப்படவில்லை என்று அவர் கூறுகிறார்.
“நமது சமூகத்தில் ரிக்கெட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்றால், வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்று அர்த்தம்” என்கிறார் அவர்.
உணவுப் பொருட்களில் வைட்டமின்களைச் சேர்க்கும் முறைக்கு அரசாங்கம் கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைக்கிறார். கனடா, ஸ்வீடன் போன்ற நாடுகளில் சில உணவுப் பொருட்களில் வைட்டமின்களைச் சேர்ப்பது தொடர்பான கட்டாய விதிமுறைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன.
பிரிட்டனில் காலை உணவுத் தானியங்கள் மற்றும் ரொட்டியில் தடவும் வெண்ணெய் போன்ற உணவுப் பொருட்களில் வைட்டமின் டி சேர்க்கப்படுகிறது. ஆனால், இதைக் கட்டாயமாக்கும் விதிமுறை அங்கு இல்லை.
குளிர்காலத்தில் சூரிய ஒளி குறைவாகக் கிடைப்பதால், மக்களின் உடலில் வைட்டமின் டி அளவும் குறையக்கூடும். எனவே, “குறிப்பிட்ட சில பிரிவினர் வைட்டமின் டி மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வது இயல்பான ஒன்றாக இருக்க வேண்டும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்கிறார் ஹியூசன்.
தற்போது, சாஸ்கியா தொடர்ந்து வைட்டமின் டி மாத்திரைகளை எடுத்துக்கொண்டு வருகிறார்; அவர் மீண்டும் கோல் கீப்பராகவும் விளையாடத் தொடங்கியுள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு