பட மூலாதாரம், Getty Images
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பாகிஸ்தானின் ஃபீல்டு மார்ஷல் ஜெனரல் ஆசிம் முனீரை பல சந்தர்ப்பங்களில் பாராட்டியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பிறகு, டிரம்ப் பல தருணங்களில் பாகிஸ்தான் ஃபீல்டு மார்ஷலை சிறந்த போராளி, முக்கியமான ஆளுமை மற்றும் அசாதாரண மனிதர் என அழைத்திருந்தார்.
2025 ஜூன் மாதத்தில் வெள்ளை மாளிகையில் பாகிஸ்தான் ஃபீல்டு மார்ஷலுடனான தனது முதல் சந்திப்பிற்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தான் ராணுவத் தளபதியைச் சந்தித்தது தனக்கு பெருமை அளிப்பதாகக் கூறியிருந்தார்.
மிகவும் குறிப்பிடத்தக்க சம்பவம் கடந்த அக்டோபர் மாதம் நிகழ்ந்தது. அப்போது, காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, எகிப்தின் ஷார்ம் எல்-ஷேக்கில் நடைபெற்ற அமைதி மாநாட்டில் டிரம்ப் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
பட மூலாதாரம், Getty Images
போர்நிறுத்த முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு அளித்த உலகத் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த டிரம்ப், தனக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்பைக் குறிப்பிட்டார். ஆனால், அதற்கு அடுத்த கணமே ஆசிம் முனீரை நோக்கிச் சைகை காட்டி, அவரை ‘எனக்கு மிகவும் பிடித்த ஃபீல்டு மார்ஷல் இவர்’ என்று அழைத்தார்.
இந்த விஷயம் வெறும் பாராட்டுகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை. டிரம்ப் முக்கியமான நிகழ்வுகளில் ஜெனரல் ஆசிம் முனீருக்கு அதிக முக்கியத்துவமும் அளித்து வருகிறார்.
திங்கட்கிழமையன்று பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ‘ஆபிரகாம் உடன்படிக்கையில்’ இணைய வேண்டும் எனப் பல இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகளுக்குக் கோரிக்கை விடுத்தார். இந்த ஒப்பந்தத்தில் இணையாத நாடுகள், இந்த அமைதிச் செயல்முறையின் அங்கமாக இருக்க முடியாது என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
கடந்த சனிக்கிழமையன்று செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், பஹ்ரைன், துருக்கி, ஜோர்டான் பாகிஸ்தான் எனப் பல நாடுகளின் தலைவர்களுடன் டிரம்ப் ஒரே நேரத்தில் தொலைபேசி உரையாடல்களை நடத்தினார்.
இருப்பினும், தான் பேசிய தலைவர்களின் பெயரைக் குறிப்பிடும்போது, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபின் பெயருக்கு பதிலாக, ஃபீல்ட் மார்ஷல் சையத் ஆசிம் முனீரின் பெயரையே டிரம்ப் குறிப்பிட்டார்.
ஆசிம் முனீர், டிரம்பின் நம்பிக்கைக்கு உரியவராக மாறியது எப்படி?
பட மூலாதாரம், Getty Images
செளதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான், துருக்கி அதிபர் ரசீப் தய்யீப் எர்துவான் ஆகியோரை அவர்களின் அதிகாரப்பூர்வ பதவிகளுடன் குறிப்பிட்ட டிரம்ப், பாகிஸ்தான் தரப்பில் ஃபீல்டு மார்ஷல் சையத் ஆசிம் முனீரின் பெயரை மட்டுமே குறிப்பிட்டார்.
பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபின் பெயர் விடுபட்டிருப்பதும், ஃபீல்ட் மார்ஷலின் பெயர் குறிப்பிடப்பட்டதும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஏனெனில், ஆசிம் முனீர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவியில் இல்லாதபோதிலும், அவரே பாகிஸ்தானின் மிகவும் செல்வாக்குமிக்க மனிதராகக் கருதப்படுகிறார்.
வரலாற்று ரீதியாகப் பார்க்கையில், பாகிஸ்தானின் உள்நாட்டு அரசியல் மற்றும் வெளியுறவுக் கொள்கையை வடிவமைப்பதில் அந்நாட்டின் ராணுவம் எப்போதுமே முக்கியப் பங்கை வகித்து வருகிறது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய பிறகு, பல ஆண்டுகளாகப் பதற்றமாக இருந்த உறவை பாகிஸ்தான் மீண்டும் சீரமைக்க முயன்று வரும் இந்தத் தருணத்தில், ஆசிம் முனீர் டிரம்ப் மற்றும் அவரது நெருங்கிய வட்டாரத்துடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இரான் தொடர்பான ராஜதந்திர விவகாரங்களிலும் முனீர் ஒரு முக்கியமான நபராக உருவெடுத்துள்ளார். கடந்த வாரம்கூட ஆசிம் முனீர் தெஹ்ரானுக்குச் சென்றிருந்தார். அங்குப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளில் அவர் ஒரு மத்தியஸ்தராக செயல்பட்டு வருகிறார்.
தெஹ்ரான் பயணத்திற்குப் பிறகு, ஜெனரல் முனீர் சீனா சென்றார். அங்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் ஏற்கெனவே முகாமிட்டிருந்தார். பொதுவாக, ஏதேனும் முக்கியமான வெளிநாட்டுப் பயணங்களின் போது ஷெபாஸ் ஷெரீஃப்புடன் ஃபீல்டு மார்ஷல் ஆசிம் முனீரும் உடனிருக்கிறார்.
இரானில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் பாகிஸ்தான் வெளிப்படையான மத்தியஸ்தராகத் தெரிந்தாலும், திரைக்குப் பின்னால் சீனாவும் அந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் ராணுவத் தளபதி சக்திவாய்ந்தவராக இருப்பது ஒன்றும் புதிய விஷயமல்ல. ஆனால், 2025 மே மாதத்தில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த நான்கு நாள் ராணுவ மோதல் தான் முனீரின் ராணுவ வாழ்க்கையில் மிக முக்கியமான காலகட்டமாக அமைந்தது.
அந்த மோதலுக்குப் பிறகுதான் ஆசிம் முனீர் ஃபீல்டு மார்ஷலாகப் பதவி உயர்த்தப்பட்டார். அந்த மோதலில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளுமே வெற்றியடைந்ததாக உரிமை கோரின.
பாகிஸ்தானின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை முன்னாள் அமைச்சரான குர்ரம் தஸ்தகிர் கான், கடந்த ஆண்டு டிசம்பரில் கத்தாரைச் சேர்ந்த ‘அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “இந்தியாவுடனான மோதலே, ராணுவத் தளபதியின் சர்வதேச அந்தஸ்தை உயர்த்திய மிகத் தீர்க்கமான காரணியாக அமைந்தது” என்று கூறியிருந்தார்.
இரு நாடுகளின் நம்பிக்கையையும் பெற முயற்சிக்கும் பாகிஸ்தான்
பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான் ராணுவத்தின் ஓய்வு பெற்ற ஜெனரல் அகமது சயீத், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ‘ஃபாக்ஸ் நியூஸ் டிஜிட்டல்’ ஊடகத்திடம் பேசுகையில், ஆசிம் முனீர் கடந்த பல மாதங்களாக அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையே ஓர் அதிகாரப்பூர்வமற்ற ரகசியப் பேச்சுவார்த்தைக்கான முகமாகச் செயல்பட்டு வருகிறார் என்று தெரிவித்திருந்தார்.
“ஒரே நேரத்தில் டிரம்ப் மற்றும் இரானின் ராணுவக் கட்டமைப்பு ஆகிய இரு தரப்புடனும் மிக நெருங்கிய உறவைக் கொண்டிருக்கக்கூடிய இது போன்ற வெளிநாட்டு ஆளுமைகள் மிக அரிதாகவே காணப்படுகிறார்கள்,” என சயீத் கூறுகிறார்.
இப்போது, “இரானின் மிகவும் சக்திவாய்ந்த ராணுவத் தளபதிகளுடன் ஆழமான தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டுள்ள அதே நேரத்தில் ஒரு தனி நபரால் டிரம்புடன் இவ்வளவு நெருக்கமாக எப்படி இருக்க முடிந்தது?” என்ற கேள்விதான் தற்போதைய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இது குறித்து ஃபாக்ஸ் நியூஸிடம் பேசும்போது சயீத் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “முனீர் 2016-17 காலகட்டத்தில் பாகிஸ்தான் ராணுவ உளவு அமைப்பின் இயக்குநராக இருந்தபோதே இரானுடன் தனது உறவை வளர்த்துக்கொள்ளத் தொடங்கினார். அப்போதில் இருந்து அவர் அங்கிருந்த தலைவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார்.”
“உளவு அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றிய அவர், இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடனும் தொடர்ந்து இணைப்பில் இருந்தார். முனீர், ஐ.ஆர்.ஜி.சி-யுடன் மட்டுமல்லாமல், இரானின் ராணுவம் மற்றும் உளவுத்துறையுடனும் நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டார். அதோடு, ஐ.ஆர்.ஜி.சி-யின் குத்ஸ் படையின் முன்னாள் தளபதியான காசெம் சுலைமானியுடனும் முனீர் நீண்ட காலமாகத் தொடர்பில் இருந்தார்.”
பாகிஸ்தானிய பகுப்பாய்வாளர் ரஸா ரூமி ‘ஃபாக்ஸ் நியூஸிடம் பேசுகையில், ஆசிம் முனீர் மீதான டிரம்பிற்கு நாட்டம் ஏற்பட்டதில் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
ரூமி மேலும் கூறுகையில், “டிரம்ப் நீண்ட காலமாகவே வலுவான மற்றும் தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் தலைவர்களை விரும்புபவராக இருந்து வருகிறார். முனீர் அந்த பிம்பத்திற்குச் சரியாகப் பொருந்துகிறார். அவர் நினைத்த முடிவுகளைக் கொண்டுவரக்கூடிய ஒரு சக்திவாய்ந்த மனிதர்.
பொதுவெளியில் ஈர்க்கக்கூடிய ஆளுமை கொண்ட பிற ராணுவத் தலைவர்களைப் போலல்லாமல், இவரது அணுகுமுறை ஒப்பீட்டளவில் அமைதியானதாகவும் நிதானமானதாகவும் இருக்கிறது. இவரது பாணி வெளிப்படையான அரசியல் பேச்சுகளை விட, உளவு வேலைகள் மற்றும் கள செயல்பாட்டு அனுபவங்களின் மூலமே வடிவமைக்கப்பட்டுள்ளது. முனீரின் இந்தப் பின்னணியே அவரது செயல்பாட்டு முறையையும், அதிகரித்து வரும் அவரது செல்வாக்கையும் விளக்குகிறது” என்றார்.
பிரிட்டிஷ் நாளிதழான ‘தி கார்டியன்’ தனது செய்தி ஒன்றில் இவ்வாறு எழுதியுள்ளது.
“அமெரிக்க மற்றும் இரானிய தலைமைகளைத் தொலைபேசி வாயிலாக நேரடியாகப் பேச வைக்கும் திறன் கொண்ட ஒரு சில நபர்களில் பாகிஸ்தான் ராணுவத் தளபதியும் ஒருவர். இரு தரப்பிற்கும் இடையே நம்பகமான ஒரு மத்தியஸ்தராக செயல்பட்டு அவர் செய்திகளைப் பரிமாறினார். தற்போது, இந்தப் பேச்சுவார்த்தைகளின் உண்மையான ஒருங்கிணைப்பு இஸ்லாமாபாத்திலிருந்து அதாவது, பாராளுமன்றத்திலிருந்து அல்ல, ராவல்பிண்டி ராணுவத் தலைமையகத்திலிருந்து திட்டமிடப்பட்டது என்று இப்போது பரவலாக நம்பப்படுகிறது.”
பாகிஸ்தான் அதிகாரத்தின் மையம்
பட மூலாதாரம், Getty Images
ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கான பாகிஸ்தான் தூதராகப் பணியாற்றியுள்ள மலீஹா லோதி கடந்த மாதம் ‘தி கார்டியன்’ நாளிதழிடம் கூறுகையில், “ஃபீல்டு மார்ஷல் முனீர் தான் இந்த ஒட்டுமொத்த செயல்முறையின் முக்கிய உந்துசக்தியாக இருக்கிறார். அவர் இல்லாமல் இது சாத்தியமாகியிருக்காது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இதில் ஒரு துணைப் பங்குதாரர் மட்டுமே. இரான், அமெரிக்கா போன்ற நாடுகள் ஆசிம் முனீரை நம்புகின்றன. நமது அரசாங்க அமைச்சர்கள் உண்மையில் ஒரு துணைப் பாத்திரத்தை மட்டுமே வகிக்கின்றனர்” என்று தெரிவித்திருந்தார்.
இருப்பினும், முனீர் ஆரம்பத்திலிருந்தே சர்வதேச அளவிலான ஒரு ராஜதந்திர முகமாக இருந்ததில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
2022-இல் ராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்ற பிறகு, அவரது முழுக் கவனமும் உள்நாட்டு அரசியலின் மீதே இருந்தது. பாகிஸ்தானில் அரசியல் நிலைத்தன்மையற்ற சூழல் நிலவிய அந்த சமயத்தில் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் புதிய அரசாங்கத்திற்கு சவால் விடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆசிம் முனீர் இம்ரான் கானின் ஆதரவாளர்களை மிகவும் இரும்புக்கரம் கொண்டு கையாண்டார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கையிலும் ஆசிம் முனீரின் தலையீடு அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத் தளபதிகள், செளதி அரேபிய அரசாங்கத்தின் நம்பிக்கையை எப்போதும் பெற்றிருந்தனர் என்றாலும், பிற ராணுவத் தளபதிகளை விட ஆசிம் முனீர் செளதி அரச குடும்பத்தினருடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
ஏற்கெனவே அமெரிக்கா-பாகிஸ்தான் இடையேயான கிரிப்டோ கரன்சி மற்றும் சுரங்க ஒப்பந்தங்களைக் மேற்பார்வையிட்டிருந்த ஆசிம் முனீர், அதோடு செளதி அரேபியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தையும் முடித்துள்ளார்.
இது குறித்து ‘தி கார்டியன்’ நாளிதழிடம் மேலும் கூறிய மலீஹா லோதி, “தொடர்ச்சியான பயணங்கள் மற்றும் நேரடி ஈடுபாடு மூலம் தலைவர்கள் மற்றும் நாடுகளுடன் உறவுகளை உருவாக்குவதில் அவர் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அவர் மெதுவாக கையாளும் நபர் அல்ல, யாராவது தம்மை அழைப்பார்கள் என்று காத்திருப்பவரும் அல்ல. அவரது ராஜதந்திர செயல்பாடுகளில் நாம் பார்த்தது போல, அவரே நேரடியாகத் தொலைபேசியை எடுத்துப் பேசிவிடுகிறார்” என்றார்.
பகுப்பாய்வாளர்களின் கூற்றுப்படி, டிரம்பின் இரண்டாவது பதவிக் காலத்தின் போது அமெரிக்கா-பாகிஸ்தான் உறவுகளை மீண்டும் வலுப்படுத்துவதில் முனீர் ஆற்றிய பங்கு, அவரை ஒரு நம்பகமான மத்தியஸ்தராக சர்வதேச அளவில் நிலைநிறுத்தியுள்ளது.
‘கலப்பின ஜனநாயகம்’
பட மூலாதாரம், Getty Images
2024 ஜனவரியில் பாகிஸ்தானும் இரானும் ஒன்றின் எல்லைக்குள் மற்றொன்று வான்வழித் தாக்குதல்களை நடத்தின. ஆனால், இந்தத் தாக்குதல்களால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் அவநம்பிக்கை ஏற்படவில்லை.
காஸாவில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை மற்றும் அதற்குப் பிறகு 10 நாட்கள் நடந்த போரின் போது இரான் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சுகளை பாகிஸ்தான் பகிரங்கமாகக் கண்டித்திருந்தது.
பாகிஸ்தான் ஒரு சுன்னி முஸ்லிம் பெரும்பான்மை நாடாக இருந்தாலும், அங்குள்ள மக்களின் அனுதாபம் இரானின் பக்கமே இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
லண்டன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகளுக்கான பேராசிரியர் அவினாஷ் பாலிவால் ‘தி கார்டியன்’ நாளிதழிடம் கூறுகையில், “முனீரிடம் மிகவும் கடினமான சூழ்நிலையே கொடுக்கப்பட்டிருந்தாலும், அவர் அதை மிகவும் திறமையாகக் கையாண்டார். குறிப்பாக, டிரம்ப் நிர்வாகத்துடனான அவரது நெகிழ்வான அணுகுமுறை மற்றும் ஆளுமை சார்ந்த ராஜதந்திரம் பற்றிய அவரது புரிதல் காரணமாக இது சாத்தியமானது” என்று தெரிவித்தார்.
இருப்பினும், பாகிஸ்தானின் இந்த விரிவான ராஜதந்திர நடவடிக்கைகளுக்கான முழுப் பெருமையையும் ஒரே ஒரு நபருக்கு மட்டுமே வழங்குவதை எதிர்க்கும் நிபுணர்களில் பாலிவாலும் ஒருவர்.
அனைத்து தரப்பினருடனும் ஒப்பந்தங்களுக்கான சாத்தியக்கூறுகளை முன்னெடுத்துச் செல்வதற்காக பாகிஸ்தானின் பல மூத்த அமைச்சர்கள் சீனா, செளதி அரேபியா மற்றும் துருக்கி போன்ற நாடுகளுக்குத் தொடர்ந்து பயணம் மேற்கொண்டனர் என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
பாகிஸ்தானில் ராணுவத் தளபதியே மிகவும் சக்திவாய்ந்த மனிதராகக் கருதப்பட்டு வருகிறார்.
ஜனநாயகம் என்பது சில நேரங்களில் நேரடி ராணுவ ஆட்சியின் கீழும், சில நேரங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களுக்கு இடையிலும் ஊசலாடிக்கொண்டிருக்கும் ஒரு நாட்டில், அங்குள்ள அரசாங்கங்கள் பெரும்பாலும் ராணுவத்தின் ஆதரவையே சார்ந்து இருந்துள்ளன.
அமெரிக்க நாளிதழான ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ இடம் பேசிய அமெரிக்காவிற்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதர் ஹுசைன் ஹக்கானி, “ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் ஒரு யதார்த்தத்திற்கு அரசியலமைப்புச் சட்டபூர்வ அங்கீகாரம் வழங்குவதுதான் இது. தற்போதைய ராணுவத் தளபதி, சட்டம் மற்றும் அரசமைப்பால் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களை விட மிக அதிக அளவிலான அதிகாரத்தை செலுத்தி வருகிறார்,” என்று தெரிவித்தார்.
பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் இடைக்காலப் பொறுப்பில் இருந்த காலகட்டமான 2022-ஆம் ஆண்டில், ஆசிம் முனீர் ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு