• Tue. Sep 22nd, 2026

24×7 Live News

Apdin News

ஹவுதிகளின் தாக்குதல்களை எதிர்கொள்ள சவுதிக்கு இராணுவ உதவியை வழங்க இங்கிலாந்து தீர்மானம்

Byadmin

Sep 22, 2026


யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களை எதிர்கொள்வதற்காக சவுதி அரேபியாவுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ உதவியை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக இங்கிலாந்து பிரதமர் அண்டி பேர்ன்ஹாம் அறிவித்துள்ளார்.

நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக திங்கட்கிழமை விமானத்தில் பயணித்த வேளையில், ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சவுதி அரேபியாவின் போர் விமானங்களுக்கு, இங்கிலாந்து விமானப்படையானது வான்வழி எரிபொருள் நிரப்பும் தற்காப்பு உதவிகளை வழங்கும் என பிரதமர் தெரிவித்தார். சவுதி அரேபிய அரசிடமிருந்து இராணுவ உதவி கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் வெளிவிவகாரச் செயலாளர் ஆகியோரின் ஆலோசனைகளுக்கு அமைய, இந்த வான்வழி எரிபொருள் நிரப்பும் தற்காப்புக் கோரிக்கைக்குத் தாம் அனுமதி வழங்கியதாகவும் அவர் விளக்கமளித்தார்.

மேலும், இந்த உடன்படிக்கையானது குறுகிய காலத்துக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதுடன், நிலைமைகளுக்கு ஏற்ப தொடர்ச்சியாக மீளாய்வு செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.

யேமனின் சவுதி ஆதரவு அரசாங்கத்துக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக மோதல்கள் தீவிரமடைந்துள்ள சூழலிலேயே சவுதி அரேபியா இந்த உதவியைக் கோரியுள்ளது.

இங்கிலாந்தும் சவுதி அரேபியாவும் நீண்டகாலமாக நெருங்கிய இராணுவக் கூட்டாளிகளாகச் செயற்பட்டு வருவதுடன், சவுதி அரேபியாவுக்கு பிரதான ஆயுதங்களை விநியோகிக்கும் நாடாகவும் இங்கிலாந்து விளங்குகின்றது.

முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போரின் போது, சாத்தியமான ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து சவுதி அரேபியாவைப் பாதுகாக்கும் நோக்கில் இங்கிலாந்து தனது ஸ்கை சேபர் வான் பாதுகாப்பு அமைப்பை அங்கு நிலைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

By admin