• Sun. Sep 13th, 2026

24×7 Live News

Apdin News

ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும் என்றால்?.. ஈரான் அதிபர் விதித்த நிபந்தனைகள்

Byadmin

Sep 13, 2026


ஈரான் போரினால் மூடப்பட்டுள்ள ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்து ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் பேசியுள்ளார்.

மத்திய கிழக்கில் இருந்து உலக நாடுகளுக்கு எண்ணெய், எரிவாயு ஏற்றுமதிக்கு முக்கிய கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் தன் கட்டுப்பாட்டில் வைத்து, அதன் வழியே கப்பல்கள் செல்ல கெடுபிடி காட்டி வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வருகை தந்துள்ள ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தேசிய ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அதில் அவர் பேசுகையில், அமெரிக்கா மேற்கொண்டு வரும் ராணுவ மற்றும் பொருளாதாரத் தாக்குதல்களுக்கு பதிலாகவே ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியுள்ளோம்.

அமெரிக்கா இந்தப் பிராந்தியத்திற்கு ஆயுதங்களைக் கொண்டு வரலாம், கடல் வழிகளை அடைக்கலாம் என்றால், அதற்குப் பதிலடி கொடுக்காமல் ஈரான் அமைதியாக இருக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

அமெரிக்காவின் எந்தவொரு அழுத்தத்திற்கும் ஈரான் பணிந்து போகாது” என தெரிவித்துள்ளார்.

நிபந்தனை

தொடர்ந்து பேசிய அவர், “சர்வதேச விதிகள் மற்றும் சட்டங்களுக்கு உட்பட்டு ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க ஈரான் தயாராக உள்ளது.

ஆனால் அதற்கு முன்பாக, அமெரிக்கா தன் மீதான பொருளாதாரப் தடைகள், கடல்சார் முற்றுகை மற்றும் தொடர் அழுத்தங்களை உடனடியாகக் கைவிட வேண்டும்” என நிபந்தனை விதித்துள்ளார்.

மேலும் “போரின் மூலம் ஈரானை அடக்க அமெரிக்கா நினைத்த இலக்குகள் தோற்றுவிட்டன. அதனாலேயே தற்போது அமெரிக்கா பொருளாதார மற்றும் கடல்சார் முற்றுகை என்ற மாற்று வழியைக் கையில் எடுத்துள்ளது” என்று அவர் சாடினார்.

மோடி வலியுறுத்தல்

பாரசீக வளைகுடாவிலிருந்து இந்தியாவிற்கு வரும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் பெரும்பகுதி ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே பயணிக்கிறது.

வளைகுடாவில் நிலவும் பதற்றம் மற்றும் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் இந்திய வர்த்தகத்தையும், அப்பகுதியில் பயணிக்கும் பல்லாயிரக்கணக்கான இந்திய மாலுமிகளின் பாதுகாப்பையும் நேரடியாகப் பாதிக்கின்றன.

இதன் காரணமாகவே, டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு இடையே ஈரான் அதிபருடன் பேசிய பிரதமர் மோடி, ஹார்முஸ் பகுதியில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்தையும் மாலுமிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

ஈரான் மீதான போருக்கு எதிராவும் பிரிக்ஸ் மாநாட்டில் நிலைப்பாடு எட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

By admin