• Fri. Aug 7th, 2026

24×7 Live News

Apdin News

ஹிட்லரின் ‘அதிசய ஆயுதத்தை’ திருடிய ரகசிய பணி – ஜெர்மன் அதிகாரியின் வீட்டிலேயே மறைத்து வைத்தது எப்படி?

Byadmin

Aug 7, 2026


வெர்னர் வான் பிரான் என்ற ஜெர்மன் பொறியாளர் ஆபத்தான வி2 ராக்கெட்டை வடிவமைத்தார்

பட மூலாதாரம், Getty Images

கடந்த 1944ஆம் ஆண்டின் கோடைக் காலத்தை 1977ஆம் ஆண்டில் பிபிசி நினைவுகூர்ந்தது. அப்போது நேசநாட்டு உளவாளிகள், ஹிட்லரின் “அதிசய ஆயுதத்தின்” பாகங்களை ஜெர்மன் அதிகாரி ஒருவரின் குடியிருப்பில் மறைத்து வைத்து, ரகசியமாகக் கடத்திச் சென்றனர்.

போலந்தில் உள்ள ஜெஷோவ் பகுதிக்கு வடமேற்கே அமைந்த பிளிஸ்னா என்ற கிராமத்தை, 1944 ஆகஸ்ட் 6ஆம் தேதி, சோவியத் யூனியனின் செம்படை அடைந்து, அதை நாஜிக்களின் ஆக்கிரமிப்பில் இருந்து விடுவித்தது.

விவசாய நிலங்கள் மற்றும் அடர்ந்த பைன் மரக் காடுகளால் சூழப்பட்ட அந்தத் தொலைதூர கிராமப்புறப் பகுதி, ராணுவ ரீதியாக எந்த முக்கியத்துவமும் இல்லாதது போலத் தோன்றியிருக்கலாம். இருப்பினும், காட்டின் தரைப்பகுதியில் இருந்த பெரிய பள்ளங்கள், உலோகப் பாகங்கள், போலி பண்ணை வீடுகள் போன்றவை அதன் ரகசிய நோக்கத்தைச் சுட்டிக்காட்டின.

சில நாட்களுக்கு முன்பு நாஜிக்கள் பின்வாங்குவதற்கு முன்பு, பிளிஸ்னா பகுதி ஒரு புதிய ஆயுதத்தின் சோதனை ஏவுதளமாக இருந்தது. அந்த ஆயுதத்தைக் கொண்டு மேற்கத்திய நேச நாடுகளுக்கு எதிரான போர் செல்லும் போக்கையே மாற்றிவிடலாம் என்று அடால்ஃப் ஹிட்லர் நம்பினார்.

ஜெர்மானியர்களால் ‘வெர்கெல்டுங்ஸ்வாஃப் 2’ (Vergeltungswaffe 2 – பழிவாங்கும் ஆயுதம் 2) அல்லது வி2 (V2) ராக்கெட் என்று அழைக்கப்பட்ட அது, உலகின் முதல் நவீன பாலிஸ்டிக் ஆயுதமாகும். பொறியாளர் வெர்னர் வான் பிரான் என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்த ராக்கெட், தோராயமாக 280 கி.மீ தூரம் செல்லும் திறன் மற்றும் ஒரு டன் எடையுள்ள வெடிபொருளையும் கொண்டிருந்தது.

By admin