படக்குறிப்பு, சுமார் 1,000 பேர் ‘ஹனிட்ராப்’ மோசடியில் சிக்கியுள்ளதாக ஹைதராபாத் காவல்துறை தெரிவித்துள்ளதுகட்டுரை தகவல்
எழுதியவர், அமரேந்திர யார்லகட்டா
பதவி, பிபிசி செய்தியாளர்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
மருத்துவர்கள், காவல்துறையினர், வணிகர்கள், அரசு அதிகாரிகள், மென்பொருள் பொறியாளர்கள், விரிவுரையாளர்கள்… இவர்களுக்குள் என்ன தொடர்பு என்று யோசிக்கிறீர்களா?
பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி போலியான சமூக ஊடகக் கணக்குகளைத் தொடங்கி, இத்தகைய தொழில்களில் இருப்பவர்கள் உள்ளிட்ட சுமார் 1,000 பேரை 23 வயதான பவன் குமார் என்ற இளைஞர் ‘ஹனிட்ராப்’ மோசடியில் சிக்கவைத்ததாக ஹைதராபாத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
“கடந்த நான்கு ஆண்டுகளாக கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு மாடல் உட்பட பல பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி, ஹனிட்ராப் மூலம் பணம் பறித்துள்ளார். இவரிடம் ஏமாந்தவர்களில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், வெளிநாடுகளில் வசிப்பவர்களும் உள்ளனர்” என்று சார்மினார் காவல் துணை ஆணையர் கிரண் காரே தெரிவித்தார்.
பவனிடமிருந்து மூன்று கைப்பேசிகள், ஒரு மடிக்கணினி, 16 ஜிபி பென் டிரைவ் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
கொண்டபத்துலா பவன் குமார் தெலங்கானாவின் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம், தேகுலபள்ளி மண்டலத்தைச் சேர்ந்தவர்.
ஹைதராபாத் பாலாநகரில் உள்ள சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டூல் டிசைன் (CITD) கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ படிப்பின் இரண்டாம் ஆண்டிலேயே அவர் படிப்பை நிறுத்தியதாகக் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
அதன்பிறகு, மல்லாரெட்டி கல்லூரியில் பி.டெக். படித்து வருவதாக வீட்டில் கூறிவிட்டு, ஹைதராபாத்தில் தங்கியபடி சிறுசிறு வேலைகளைச் செய்து வந்துள்ளார். தற்போது அவர் வேலையின்றி இருப்பதாகத் துணை காவல் ஆணையர் தெரிவித்தார்.
“பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகியவற்றில் போலிக் கணக்குகளைத் தொடங்குவார். அந்தக் கணக்குகள் மூலம் நட்பு அல்லது பின்தொடர்வதற்கான கோரிக்கைகளை அனுப்பி, பெண்களைப் போலப் பேசத் தொடங்குவார். படிப்படியாகப் பாலியல் உரையாடல்களுக்கு அவர்களை இட்டுச் சென்று, அவர்களிடமிருந்து நிர்வாணப் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பெற்று சேமித்து வைத்துக்கொள்வார்” என்று அவர் விளக்கினார்.
தன் மீது சந்தேகம் எழாமல் இருப்பதற்காக, சில மாடல்களின் அரை நிர்வாணப் புகைப்படங்களையும் பவன் பயன்படுத்தியதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பட மூலாதாரம், Hyderabad Police
படக்குறிப்பு, பாதிக்கப்பட்டவர்களில் தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், பிற நாடுகளைச் சேர்ந்தவர்களும் உள்ளதாக அவர் கூறினார்
பாதிக்கப்பட்டவர்களில் 22 முதல் 70 வயதினர் வரை
நிர்வாணப் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சேகரித்த பிறகு, பவன் பணம் பறிக்கும் வேலையில் இறங்குவார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
“இதுவரை அந்தப் பெண்ணாகப் பேசிய பவன், பின்னர் அந்தப் பெண்ணின் அண்ணன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்வார். நிர்வாணப் புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்பியவர்களுடன் மொபைல் அழைப்புகள், வாட்ஸ்அப், சமூக ஊடகக் கணக்குகள் மூலம் தொடர்புகொண்டு, தனது தங்கை தற்கொலை செய்துகொண்டதாகவோ அல்லது காவல்துறையில் புகார் அளிக்கப் போவதாகவோ மிரட்டி பணம் பறிப்பார்” என்று காவல் துணை ஆணையர் விளக்கினார்.
இந்த மோசடிக்காகக் கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு மாடலின் புகைப்படங்களைப் பவன் அதிகமாகப் பயன்படுத்தியதாகவும், அவரைத் தொடர்புகொண்டு இது குறித்து எச்சரித்ததாகவும் கிரண் காரே தெரிவித்தார்.
காவல்துறையினர், விரிவுரையாளர்கள், அரசு ஊழியர்கள், அதிகாரிகள், மென்பொருள் பொறியாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் இருப்பவர்கள் என சுமார் 1,000 பேருடன் பவன் பாலியல் உரையாடல்களை மேற்கொண்டு அவர்களை மோசடியில் சிக்கவைத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் கூறினர்.
“இவர்களில் 22 முதல் 70 வயது வரையிலானவர்கள் உள்ளனர். 82 பேரின் நிர்வாணப் புகைப்படங்களும் வீடியோக்களும் எங்களுக்குக் கிடைத்துள்ளன” என்று கிரண் காரே தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களில் தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், சௌதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான், கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் உள்ளதாக அவர் கூறினார்.
இதுவரை அவர்களிடமிருந்து பவன் ரூ.25.16 லட்சத்தைப் பறித்துள்ளதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பவன் 13 போலி இன்ஸ்டாகிராம் கணக்குகளையும் 14 போலி ஃபேஸ்புக் பக்கங்களையும் உருவாக்கியிருந்தார்
27 போலிக் கணக்குகள், பக்கங்கள்
பவன் 13 போலி இன்ஸ்டாகிராம் கணக்குகளையும் 14 போலி ஃபேஸ்புக் பக்கங்களையும் உருவாக்கியிருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தக் கணக்குகளிலிருந்து யாருக்கேனும் செய்திகள் வந்திருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், பணத்தை இழந்தவர்கள் காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும் என்றும் கிரண் காரே கேட்டுக்கொண்டார்.
போலியான இன்ஸ்டாகிராம் கணக்குகளின் பெயர்களையும் காவல்துறையினர் வெளியிட்டனர்.
அதேபோன்று, போலியான ஃபேஸ்புக் கணக்குகளின் பெயர்களும் வெளியிடப்பட்டது.
போலி கணக்குகளிலிருந்து யாருக்கேனும் செய்திகள் வந்திருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், பணத்தை இழந்தவர்கள் காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும் என்றும் துணை காவல் ஆணையர் கிரண் காரே கேட்டுக்கொண்டார்.
இந்த விவகாரம் குறித்து பவன் குமாரிடம் பேசுவதற்கு பிபிசி முயன்றது. ஆனால், அவர் நீதிமன்றக் காவலுக்கு மாற்றப்பட்டதால் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. காவல்துறையினர் அவரை ஊடகங்கள் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதும் அவர் பேச மறுத்துவிட்டார்.
பவனின் குடும்பத்தினரைத் தொடர்புகொண்டபோதும் அவர்கள் பேச மறுத்துவிட்டனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சைதாபாத் காவல்துறையினர் அக்டோபர் 17ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியபோதுதான், இந்த விவகாரத்தில் ஹனிட்ராப் மோசடி நடந்தது தெரியவந்தது.
இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது எப்படி?
பவன் குமார் தனது நண்பரிடமே மோசடி செய்து ரூ.4 லட்சம் பறித்ததால் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
தனக்கு நேர்ந்த மோசடி குறித்து அந்த நண்பர் ரமேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) காவல்துறையில் புகார் அளித்தார்.
சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டூல் டிசைன் கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ படித்தபோது பவன் குமாருடன் தனக்குப் பழக்கம் ஏற்பட்டதாக ரமேஷ் தெரிவித்தார்.
2021ஆம் ஆண்டு செப்டம்பரில் ‘Moon Baby 5973’ என்ற இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து தனக்கு நட்புக்கான கோரிக்கை வந்ததாக ரமேஷ் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
“அந்தக் கணக்கு மீது எனக்குச் சந்தேகம் ஏற்பட்டது. பார்த்தபோது, அதை பவன் குமார் உருவாக்கியிருக்கலாம் என்று தோன்றியது. உடனடியாக அவரைச் சந்தேகித்துக் கேட்டபோது, போலிக் கணக்கைத் தானே உருவாக்கியதாக அவர் ஒப்புக்கொண்டார். அதன்பிறகு அவருடனான நட்பைத் தொடர வேண்டாம் என்று முடிவெடுத்தேன்” என்று ரமேஷ் கூறினார்.
பின்னர் வேறொரு விடுதியில் தங்கியிருந்தபோதும், அங்கு வந்து தன்னுடன் தங்கிக்கொள்ளப் பவன் விரும்பியதாக ரமேஷ் தெரிவித்தார்.
இந்தச் சூழலில் இருவருக்கும் இடையே பாலியல் உறவு ஏற்பட்டதாகப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. தன்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ளுமாறு பவன் கடுமையாக வற்புறுத்தியதாகவும், மிரட்டியதாகவும் ரமேஷ் கூறியுள்ளார்.
தன்னுடன் இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டி, பாலியல் உறவுக்கு வற்புறுத்தியதுடன், இணையவழியில் ரூ.1.50 லட்சமும் நேரடியாக ரூ.2.50 லட்சமும் பவன் பெற்றதாக ரமேஷ் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சைதாபாத் காவல்துறையினர் அக்டோபர் 17ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியபோதுதான், இந்த விவகாரத்தில் ஹனிட்ராப் மோசடி நடந்தது தெரியவந்தது.
“சமூக ஊடகக் கணக்குகளிலிருந்து நட்புக்கான கோரிக்கைகள் வந்தால், அந்தக் கணக்கின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க வேண்டும். குறிப்பாக, தெரியாத கணக்குகளிலிருந்து செய்திகள் வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முதலில் நட்பாகப் பேசி, பின்னர் நிர்வாணப் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சேகரித்து மோசடியில் ஈடுபடுவார்கள். பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாகக் காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும்” என்று துணை காவல் ஆணையர் கிரண் காரே அறிவுறுத்தினார்.
தற்கொலை எண்ணங்கள் ஏற்பட்டால் உதவி பெறலாம்
தற்கொலை செய்துகொள்ளும் எண்ணங்கள் ஏற்பட்டால், அதிலிருந்து மீள்வதற்கு இந்திய அரசின் ‘ஜீவன் சாதி’ உதவி எண்ணான 18002333330-ஐத் தொடர்புகொள்ளலாம்.
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகமும் 13 மொழிகளில் 18005990019 என்ற உதவி எண்ணைச் செயல்படுத்தி வருகிறது.
தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் (NIMHANS) உதவி எண்: 08026995000.