• Fri. Aug 21st, 2026

24×7 Live News

Apdin News

2 கப்பல்கள் கடத்தல்.. 22 இந்தியர்கள் நிலை என்ன?.. – ஏமன், சோமாலியாவில் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

Byadmin

Aug 21, 2026


ஏமன் மற்றும் சோமாலியா கடற்பகுதியில் 2 வணிக கப்பல்கள் கடத்தப்பட்டுள்ளன. இரண்டு கப்பல்களிலும் மொத்தம் 22 இந்தியர்கள் இருந்துள்ளனர்.

ஏமனில் கடத்தல்

எரித்திரியா நாட்டுக்கு கொடியுடன் எண்ணெய் பொருட்களை ஏற்றிச் சென்ற எம்டி ஷிபு 1 என்ற வணிக கப்பல் 20 பணியாளர்களுடன் ஏமன் கடற்கரைக்கு 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் ஏடன் வளைகுடாவில் சென்றுகொண்டிருந்தபோது ஆயுதமேந்திய 6 கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளது. அதிலிருந்த 20 பணியாளர்களில் 16 பேர் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது.

நேற்று இந்த சம்பவம் நடந்த நிலையில் கப்பல் தற்போதுள்ள இடம் குறித்த தகவல் இல்லாதபோதும் 16 இந்தியர்களுடன் சேர்த்து மொத்தம் உள்ள 20 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக இந்தியாவின் கடல்சார் நிர்வாக தலைமை இயக்குநரகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சோமாலியாவில் கடத்தல்

எம்வி லுடிப் என்ற கேமரூன் கொடியுடன் கூடிய வணிக கப்பல் சோமாலியாவின் பன்ட்லேண்ட் கடற்கரைக்கு அருகே கடந்த திங்களன்று கடத்தப்பட்டுள்ளது.

அதில் இருந்த மொத்தம் 10 பணியாளர்களில் 6 பேர் இந்தியர்கள் ஆவர். சோமாலிய அதிகாரி ஒருவரின் கூற்றை மேற்கோள் காட்டி அசோசியேட் பிரஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த கப்பலானது பண்ட்லேண்ட்டில் உள்ள Eyl மாவட்டத்தில் உள்ள மராரையாவுக்கு 3.5 நாட்டிக்கல் மைல் தொலைவில் வைத்து கடத்தப்பட்டு பின்னர் அங்கிருந்து வடக்கு சோமாலியாவில் உள்ள Nugaal கடற்கரையை நோக்கி கொண்டு செல்லப்பட்டதாக அந்த சோமாலிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த கப்பல் போலார் மூவ்மென்ட் ஷிப்பிங் என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும் சோமாலியாவில் உள்ள துருக்கி ராணுவ பயிற்சி மையத்திற்கு ஆயுதங்கள், பயிற்சி உபகரணங்கள், சேட்டிலைட் மற்றும் தொலைத்தொடர்பு கருவிகளை கொண்டு சென்று கொண்டிருந்தது என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

கப்பலை 8 கடற்கொள்ளையர்கள் சேர்ந்து கடத்தியதாக நம்பப்படுகிறது. இவர்கள் முன்னதாக கடந்த ஏப்ரலில் எம்வி ஸ்வார்ட் என்ற கப்பலை கடத்தியர்வர்கள் என்று அந்த சோமாலிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த கப்பல் மற்றும் அதில் உள்ள பணியாளர்களின் நிலை என்ன என்பது குறித்த தகவல் இன்னும் தெளிவாக தெரியவில்லை. துருக்கி அதிகாரிகளும் இதுகுறித்து இன்னும் கருத்து தெரிவிக்கப்பவில்லை.

இரு கப்பல்களையும் சேர்த்து மொத்தம் 22 இந்தியர்களின் நிலை குறித்த இந்தியாவில் உள்ள அவர்களின் குடும்பங்கள் பதற்றத்தில் உள்ளனர்

By admin