தமிழகத்தில் அக்டோபர் 6-ஆம் தேதி மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இரு தொகுதிகளிலும் 3 முக்கிய கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்று, பின்னர் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்த இருவருமே அக்கட்சி சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
3 கட்சிகள் சார்பிலும் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள 6 வேட்பாளர்களில் 5 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜினாமா செய்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
பட மூலாதாரம், TVK
படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டமன்ற இடைதேர்தலுக்கு தவெக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள்.
தமிழகத்தில் 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில், 5 தொகுதிகளில் தேர்தல் வழக்குகள் இருந்த காரணத்தால், மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மட்டும் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்குமென்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இவற்றில் மதுராந்தகம், செங்கல்பட்டு மாவட்டத்திலும் தாராபுரம், திருப்பூர் மாவட்டத்திலும் அமைந்துள்ளன.
இவ்விரு தொகுதிகளில் கடந்த 9 ஆம் தேதி துவங்கிய இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 16 ஆம் தேதி முடிவடைகிறது. அடுத்த நாள் வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படும். செப்டெம்பர் 19 அன்று வேட்புமனுக்களைத் திரும்பப்பெற கடைசி நாள். அக்டோபர் 6 அன்று வாக்குப்பதிவு நடக்கிறது; அக்டோபர் 9 ஆம் தேதி வாக்கு எணணிக்கை நடக்கவுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இவ்விரு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றிருந்தது. தாராபுரம் (தனி) தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சத்தியபாமா, 81,100 வாக்குகள் பெற்று, தனக்கு அடுத்ததாக வந்த திமுக வேட்பாளர் இந்திராணியை (பெற்ற வாக்குகள்: 64373) விட 16,727 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் தவெக மூன்றாமிடம் பிடித்தது. அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட கெளரி சித்ரா 46,438 வாக்குகள் பெற்றிருந்தார்.
மதுராந்தகம் (தனி) தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல், 69,284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் தவெக இரண்டாமிடம் பிடித்திருந்தது. அக்கட்சிக்கு 62,090 வாக்குகள் கிடைத்திருந்தன. திமுக 59,838 வாக்குகள் பெற்றிருந்தது. இதனால் தவெக வேட்பாளரை அதிமுக வேட்பாளர் 7191 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார். ஆனால் அதிமுக சார்பில் வென்ற இருவரும், தங்களது பதவிகளை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்தனர்.
மரகதம் குமரவேல், சத்தியபாமாவின் பின்னணி
சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, இவர்கள் தவெகவில் இணைந்தபோது, தங்களுக்கு மீண்டும் தேர்தலில் களம் காண வாய்ப்பு வழங்குவதாக தவெக தலைமை எந்த உறுதியும் தரவில்லை என்று கூறினர். எந்தவித எதிர்பார்ப்புமின்றியே ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததாக பிபிசியிடம் கூறியிருந்தார் தாராபுரம் சட்டப்பேரவை உறுப்பினராக வென்ற சத்தியபாமா.
அப்போது பிபிசியிடம் பேசிய அவர், ”எங்களில் யாருக்கும் மீண்டும் சீட் கொடுப்பதாக தவெக தரப்பில் எந்த உறுதியும் தரப்படவில்லை. ஆனால் முதல்வர் விஜய் எங்கள் முடிவை ஏற்று, மீண்டும் வாய்ப்பு வழங்குவாரென்று நம்புகிறோம்.” என்றார். இதே நம்பிக்கையை மதுராந்தகம் தொகுதியில் வென்ற மரகதம் குமரவேலுவும் தெரிவித்திருந்தார். தற்போது இருவருக்குமே தவெக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மரகதம் குமரவேல் (வயது 44) , இதே தொகுதியில் 2021 மற்றும் 2026 ஆகிய 2 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர். எம்.ஏ.பட்டதாரியான இவர், இதற்கு முன்பு காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவர் அதிமுகவில் மகளிர் அணி இணைச்செயலாளராக இருந்தவர்.
தாராபுரம் சட்டப்பேரவை உறுப்பினராக வென்ற சத்தியபாமா (வயது 51), பத்தாம் வகுப்பு படித்துள்ளார். இதற்கு முன்பு, திருப்பூர் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவராக பதவி வகித்துள்ளார். கட்சியில் மாவட்ட இணைச்செயலாளராக இருந்த இவர், முதல் முறையாக களம் கண்ட 2026 சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் 16,724 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் இந்திராணியை தோற்கடித்தார்.
இடைத்தேர்தல் அறிவிப்பு வந்த பின்பு பிபிசியிடம் பேசிய அவர், ”தேர்தல் அறிவிப்பு இப்போதுதான் வந்துள்ளது. இனிமேல்தான் விருப்ப மனு அளிக்க வேண்டும்.” என்று கூறினார். ஆனால் அடுத்த நாளிலேயே அவரது பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக சார்பில் மீண்டும் பெண் வேட்பாளர்கள்
பட மூலாதாரம், AIADMK
படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டமன்ற இடைதேர்தலுக்கு அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள்.
மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத், தாராபுரம் தொகுதியில் பானுமதி ஆகியோர் அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கணிதா சம்பத், தற்போது கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினராகவும், மகளிர் அணி இணைச்செயலாளராகவும் உள்ளார். இவர் கடந்த 2001 ஆம் ஆண்டில் திருப்போரூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார். அதன்பின் 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் இதே மதுராந்தகம் தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார். கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் செய்யூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார்.
தாராபுரம் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பானுமதி, திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளராக இருக்கிறார். திருப்பூர் மாவட்ட ஊராட்சிக்குழுவின் உறுப்பினராகவும், தாராபுரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இவர் முதல் முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புப் பெற்றுள்ளார்.
வேட்பாளர் அறிவிப்பில் முந்திய திமுக
பட மூலாதாரம், DMK
படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டமன்ற இடைதேர்தலுக்கு திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள்.
இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதுமே, மற்ற கட்சிகளை முந்தி கொண்டு திமுக வேட்பாளர்களை அறிவித்தது. மதுராந்தகம் (தனி) தொகுதியில் எழும்பூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக சட்டத்துறை இணைச் செயலாளருமான வழக்கறிஞர் ஐ. பரந்தாமன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தாராபுரம் (தனி) பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் வழக்கறிஞர் எஸ். சுகன்யா போட்டியிடுவார் என்று திமுக அறிவித்துள்ளது.
இவ்விரு தொகுதிகளிலும் வழக்கறிஞருக்கே திமுக வாய்ப்பு வழங்கியுள்ளது. இவர்களில் மதுராந்தகத்தில் போட்டியிடவுள்ள பரந்தாமன் (வயது 49), திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியைச் சேர்ந்தவர். பிஏ, பிஎல் படித்துள்ள இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் எழும்பூர் தொகுதியில் திமுக சார்பில் நின்று வென்றார்.
கடந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், தவெக ஆட்சிக்கு வந்தபின்பு, ஊடகங்களில் திமுக சார்பில் வாதங்களை முன் வைப்பதில் பரந்தாமன் முக்கிய முகமாக அறியப்படுகிறார்.
தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு குறித்துப் பேசிய பரந்தாமன், ”தேர்தலின்போது சொன்ன எந்த வாக்குறுதியையும் தவெக அரசு நிறைவேற்றவில்லை. மக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். அதனால் இந்த ஆட்சியின் அவலங்களை எடுத்து சொல்லியே வெற்றி பெறுவேன். அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடையவில்லை. மின் கட்டணம் பல மடங்கு அதிகமாகியுள்ளது. முதியோர் உதவித்தொகை, விதவையர் உதவித்தொகை பலருக்கு கிடைக்கவில்லை. இதுபோல ஏராளமான பிரச்னைகள் இருக்கின்றன. இவற்றை வீடு வீடாகச் சென்று எடுத்துச் சொல்லியே இந்தத் தேர்தலில் வெற்றிபெறுவோம்.” என்று கூறியுள்ளார்.
தாராபுரம் (தனி) தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சுகன்யா (வயது 34), எம்.ஏ.பி.எல். படித்து வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். திமுகவின் திருப்பூர் கிழக்கு மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளராக இருக்கிறார். இவருடைய கணவர் மணிவாசகம், திருப்பூர் மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளராகவுள்ளார்.
முக்கியமான 3 கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி இன்னும் இந்தத் தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி 4950 வாக்குகளும், தாராபுரம் தொகுதியில் 6026 வாக்குகளும் பெற்றிருந்தது. இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள 6 வேட்பாளர்களில் 5 பேர் பெண்கள் என்பது ஊடகங்களில் பேசுபொருளாகவுள்ளது.