2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் நேற்று (மே 10) பொறுப்பேற்றார்.
இதையடுத்து, தமிழக சட்டசபை இன்று (மே 11) கூடியது. சட்டசபை கூட்டம் நிறைவடைந்த உடன் முதல்-அமைச்சர் விஜய் அரசியல் நாகரீகத்தின் வெளிப்பாடாக எதிர்க்கட்சி தலைவர்களை அவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார்.
அந்த வகையில் இன்று தி.மு.க. தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களை நேரில் சந்தித்தார்.
அந்த வகையில், தமிழக முதல்வர் விஜய், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒரங்கிணைப்பாளர் சீமான் சந்திப்பு குறித்து இயக்குநர் சேரன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், தேர்தல் களத்தில், தம்பி விஜய் அவர்கள் புறந்தள்ளியபோது ஏற்பட்ட வேதனைக்கு ஏது மருந்து அண்ணனே என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்த எக்ஸ் தள பதிவில் இயக்குநர் சேரன், “அவர் வந்ததும், நீங்கள் அரவணைத்ததும் இன்று பண்பாகவும், மாண்பாகவும் ஆகலாம்.. ஆனால், தேர்தல் களத்தில் “மற்றும் பலர்” என உச்சரித்த போது ரத்தம் கொதித்ததும் நாதக தம்பிகளின் 15 வருட உழைப்பை அதில் உள்ள நேர்மையை துளிகூட நினைக்காமல் தம்பி விஜய் அவர்கள் புறந்தள்ளியபோது ஏற்பட்ட வேதனைக்கு ஏது மருந்து அண்ணனே..
எது என்னவாக இருந்தாலும் நீங்கள் பதினைந்து வருடம் மக்களிடம் கத்தி கத்தி விதைத்த மாற்றம் இனி நடந்தால் சந்தோசம்.. உனது எண்ணங்களுக்கும் திட்டங்களுக்கும் இந்த முதல்வர் செவிசாய்த்து நடத்திக்காட்டட்டும்.. நீ தான சொல்வ நான் விதை போடுவேன்.. தம்பி அறுவடை செய்வான்னு… அது இந்த தம்பியாக இருந்துவிட்டு போகட்டும் மகிழ்ச்சியே..!,” என்று குறிப்பிட்டுள்ளார்.