படக்குறிப்பு, ஹர்திக் பாண்ட்யா (கோப்புப்படம்) கட்டுரை தகவல்
உலகக்கோப்பையை வென்ற முன்னாள் கேப்டன், இந்நாள் கேப்டன், ஐ.பி.எல்லில் புதிய அணியை முதல் வருடத்திலேயே கோப்பை வெல்ல வைத்த கேப்டன், இந்த தலைமுறையின் அதிசிறந்த டி20 பவுலர் என பல திறன்கள் இருந்தாலும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றி மட்டும் கடினமாக இருக்கிறது.
அதிக காலமெல்லாம் இல்லை. சரியாக 40 நாட்களுக்கு முன்பு உலகக்கோப்பை வென்ற இந்திய அணியிலிருந்து நான்கு வீரர்கள் இப்போது மும்பை அணியில் இருக்கிறார்கள். ஆனாலும் தொடர்ந்து தோற்று புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது மும்பை இந்தியன்ஸ்.
மறுபக்கம் ஃபார்ம், வேகம், கடந்த காலத்தில் ஐ.பி.எல் கோப்பை வென்ற அனுபவம், கேப்டன்சி திறமை என எல்லாம் இருந்தும் ஷ்ரேயாஸ் ஐயரால் இந்திய டி 20 அணியில் நிலையாக ஒரு இடத்தைப் பிடிக்கவே முடியவில்லை. அதற்கும் சேர்த்து ஐ.பி.எல்லில் தீர்மானமாய் ஆடிக்கொண்டிருக்கிறார். இந்த சீசனில் இதுவரை தோல்வியையே சந்தித்திடாத ஒரே அணி அவர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிதான்.
இந்த இரண்டு முரண்களின் மோதல் தான் நேற்றைய (ஏப்ரல் 16) ஆட்டம். மும்பை வான்கடே மைதானத்தில் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிகளே 55% வெற்றி பெற்றிருக்கின்றன. எனவே, டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். கடந்த ஆட்டத்தில் காயமடைந்த ரோஹித் சர்மா ஓய்வில் இருப்பதால் அவருக்கு பதில் டி காக். கூடவே, டெல்லி பிரீமியர் லீக்கில் கவனம் ஈர்த்து மும்பை அணியில் இணைந்த ஆல்ரவுண்டர் மயங்க் ராவத். பஞ்சாப் அணியில் எந்த மாற்றமுமில்லை.
திரும்பி வந்த டி காக்கும் ஃ பார்முக்கு வந்த அர்ஷ்தீப்பும்
மும்பை என்றாலே நினைவுக்கு வரும் வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் பொல்லார்டும் டி காக்கும். இதுவரை மும்பைக்காக 43 போட்டிகளில் ஆடியிருக்கும் டி காக் எடுத்திருக்கும் ரன்கள் 1,329. சராசரி 36.94, இடைப்பட்ட காலத்தில் கொல்கத்தா, லக்னௌ அணிகளுக்காக ஆடியிருந்தாலும் மும்பைக்கு அவர் அளித்த பங்களிப்பு அளவுக்கு மற்ற அணிகளுக்கு அவர் கொடுத்ததில்லை. நான்கு சீசன்கள் கழித்து மீண்டும் மும்பைக்காக களமிறங்குறார்.
அப்படியான டி காக் ஓப்பனிங் இறங்க அவருக்கு எதிர்முனையில் பந்து வீசத் தயாரானது அர்ஷ்தீப். சர்வதேச டி20 இந்தியாவுக்காக அதிக விக்கெட்கள் வீழ்த்திய பட்டியலில் பும்ராவையே பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் இருப்பவர். ஆனால், ஏனோ இந்த ஐ.பி.எல்லில் முதல் போட்டியிலிருந்தே ரன்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்.
நேற்றைய பவர்ப்ளே இந்த இரண்டு வீரர்களுக்கானது. தான் சந்தித்த முதல் பந்தையே கவர் திசையில் சிக்ஸுக்கு அனுப்பி தன் வரவை அறிவித்தார் டி காக். மறுபக்கம் தான் வீசிய இரண்டாவது ஓவரின் முதல் பந்திலேயே ரிக்கெல்ட்டெனை அவுட்டாக்கி பெவிலியன் அனுப்பினார் அர்ஷ்தீப். அவர் இந்த சீசனில் பவர்ப்ளேயில் வீழ்த்தும் முதல் விக்கெட் அது. ஐ.பி.எல்லில் நூறாவது விக்கெட். நகைமுரண் என்னவென்றால் அவர் இந்தியாவுக்காக ஆடத் தொடங்கி நான்கு ஆண்டுகளே ஆகின்றன. ஆனால், சர்வதேச டி20 போட்டிகளில் 127 விக்கெட்கள். ஐ.பி.எல்லில் எட்டு ஆண்டுகளாக ஆடிவந்தாலும் இப்போதுதான் நூறு விக்கெட்களைத் தொடுகிறார்.
அடுத்து வந்த சூர்யகுமார் யாதவும் சந்தித்த முதல் பந்திலேயே சஹலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். நான்காவதாக எப்போதும் களமிறங்குவது திலக் வர்மா. ஆனால், அவர் இந்த சீசனில் இதுவரை வெறும் 35 ரன்கள் மட்டுமே எடுத்திருப்பதால் இளம் வீரரான நமன் தீர் களமிறக்கப்பட்டார். அதற்கு கை மேல் பலன். வைஷாக் விஜயகுமார் வீசிய ஆறாவது ஓவரில் மட்டும் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸ். அவர் அதிரடியில் பவர்ப்ளே முடிவில் மும்பை 48/2.
பின் அவரோடு டி காக்கும் இணைந்துகொள்ள இருவரும் ஓவருக்கு பத்து ரன்களுக்கு குறையாமல் பார்த்துக்கொண்டார்கள். பவர்ப்ளே முடிவில் எட்டாக இருந்த ரன்ரேட் 13வது ஓவரின் முடிவில் 10.15 ஆக இருந்தது. ஸ்கோர் 132/2. வான்கடே மைதானத்தில் 200 ரன்களை தாண்டிவிட்டால் அது ஓரளவுக்கு சவாலான இலக்கு. ஒருகட்டத்தில் அதற்கு சாத்தியம் இருப்பது போலத்தான் தோன்றியது. ஆனால், 14வது ஓவரில் பார்ட் டைம் பவுலரான சஷாங் சிங் நமன் தீரை வெளியேற்ற அடுத்தவந்த பாண்ட்யாவும் ஷ்ரேயாஸ் ஐயரின் அபாரமான “சூப்பர்மேன்” பீல்டிங்கால் அவுட்டாகி வெளியேறினார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பிரப்சிம்ரன் (கோப்புப்படம்)
இன்னொருமுனையில் நடப்பதை பற்றி எல்லாம் அலட்டிக்கொள்ளாமல் அதிரடியாக ஆடியபடி இருந்த டி காக் 17வது ஓவரில் சதமடித்தார். ஐ.பி.எல்லில் இது அவருக்கு மூன்றாவது சதம். மும்பைக்காக முதலாவது. ஐ.பி.எல்லில் மூன்று வெவ்வேறு அணிகளுக்காக சதம் அடிக்கும் முதல் வெளிநாட்டு வீரர் இவர். மீதி இருவரும் இந்தியர்கள். ராகுல், சஞ்சு சாம்சன். ஸ்கோர் 20 ஓவர்கள் முடிவில் 195/6.
பஞ்சாப் ஓப்பனிங் இணையில் ப்ரியான்ஷ் ஆர்யா முதல் பந்திலிருந்தே அடித்து ஆடும் வழக்கம்கொண்டவர். இன்னொருமுனையில் விக்கெட் போகாமலும் ரன்ரேட் குறையாமலும் பார்த்துக்கொள்வது ப்ரப்சிம்ரன் சிங்கின் வேலை. இம்முறையும் ப்ரியான்ஷ் அதிரடியாக தொடங்கினாலும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. 15 ரன்களில் கஸன்ஃபர் பந்தில் வெளியேறினார். அதன்பின் இறங்கிய கூப்பர் கொனல்லியும் கஸன்ஃபர் வீசிய அடுத்த ஓவரில் அவுட்.
இப்போது இறுதிவரை நின்று சேஸ் செய்ய வேண்டிய பொறுப்பு ஷ்ரேயாஸுக்கு. அவரும் வந்த வேகத்தில் பவுண்டரி அடித்து தன் கணக்கைத் தொடங்கினார். ப்ரப்சிம்ரன் – ஷ்ரேயாஸ் இணை அதன்பின் ஆட்டத்தின் எந்தப் புள்ளியிலும் ரன்ரேட்டை குறையவிடவில்லை. பத்து ஓவர்கள் முடிவில் ஸ்கோர் சரியாக 100/2.
பாண்ட்யாவும் இந்த இணையை பிரிக்க எவ்வளவோ முயன்றார். ஆனால், அவரின் பவுலிங் சேஞ்ச் எந்த வகையிலும் பலனளிக்கவில்லை. பும்ரா வீசிய 13வது ஓவரிலேயே 16 ரன்கள் என்றால் மற்ற பவுலர்கள் நிலை பற்றி சொல்லியா தெரிய வேண்டும்? 23 பந்துகளில் ப்ரப்சிம்ரன் அரைசதம். 31 பந்துகளில் ஸ்ரேயாஸ் அரைசதம். இவர்களின் பார்ட்னர்ஷிப் 66 பந்துகளில் 139 ரன்கள். மிடில் ஓவர்களில் 200-க்கும் குறையாத ஸ்ட்ரைக் ரேட் என்பதே சொல்லும் மும்பையின் பவுலிங் எவ்வளவு பலவீனமாக இருந்தது என. 16.3 ஓவர்களில் இலக்கை அடைந்து ரன்ரேட்டையும் நன்றாக பலப்படுத்திக்கொண்டது பஞ்சாப் அணி. மூன்று விக்கெட்களை வீழ்த்திய அர்ஷ்தீப் ஆட்ட நாயகன்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அர்ஷ்தீப் சிங் (கோப்புப்படம்)
தொடர் தோல்விகள்… என்ன சிக்கல்?
‘சொல்வதற்கு எதுவுமில்லை. தொடர்ந்து தோற்றுக்கொண்டே இருக்கிறோம். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றிலும் பலவீனமாக இருக்கிறோம். வெற்றி பெறுவதற்காக இனி சில கடினமான முடிவுகளையும் எடுக்கவேண்டியது இருக்கலாம்’ என போட்டி முடிந்தபின் சொன்னார் ஹர்திக். ஆனால் அவர் சொல்வதுபோல பிரச்னைகள் களத்தில் மட்டும்தானா?
ஹர்திக் குஜராத் அணியை முதல் ஆண்டிலேயே கோப்பை வெல்ல சிறப்பாக வழிநடத்தினார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதை வழிநடத்துவதற்கான மொத்த அதிகாரமும் அவரிடம் இருந்தது. ஆனால், அவர் மும்பைக்கு மீண்டும் வந்து வழிநடத்த தொடங்கிய அணியில், அவருக்கு முன்பிருந்தே ஆடும் சீனியர்கள் அணியில் இருந்தார்கள்.
‘இந்திய டி20 அணியின் கேப்டனாக இருந்த ரோஹித்தை மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கி ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக்கினார்கள். மீண்டும், இந்த ஆண்டு உலகக்கோப்பை வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவை பாண்ட்யாவிற்கு கீழ் ஆடச் சொல்கிறார்கள். இந்திய அணிக்கே கேப்டனாக இருப்பவர்களை மும்பை அணி நிர்வாகம் நம்ப மறுத்து பாண்ட்யாவுக்கு பொறுப்பு கொடுப்பது விந்தையாக இருக்கிறது. இது அணியில் ஆரோக்கியமான சூழலை உருவாகவிடாது’ என இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பு சொன்னார் முன்னாள் இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த். இதில் உண்மையும் இருக்கிறதுதான்.
அதேசமயம், அணியில் பாண்ட்யாவின் கேப்டன்சி மட்டுமே பிரச்னை இல்லை. ரோஹித், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா என அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் களத்தில் கொஞ்சம் நேரமெடுத்து சூழலை அவதானித்து அதன்பின் அதிரடியாக ஆடும் இயல்புடையவர்கள்.
ஆனால், இன்று டி 20 ட்ரெண்ட் அப்படியில்லை. அபிஷேக் சர்மா, ஆயுஷ் மாத்ரே, சூர்யவன்ஷி என முதல் பந்திலிருந்தே அதிரடியாக ஆடும் பேட்ஸ்மேன்கள் ஏராளம் பேர் டாப் ஆர்டரில் ஆட வந்துவிட்டார்கள். ஆனால், ஸ்கெளட்டிங்குக்கு பெயர் பெற்ற மும்பை அணியில் அப்படியான வீரர் ஒருவர்கூட இல்லை. இருக்கும் ஒரே இளம் வீரரான நமன் தீரையும் விருப்பம்போல ஐந்தாவது இடம், ஆறாவது இடம் என களமிறக்குவதால் அவருக்கும் போதுமான பேட்டிங் வாய்ப்புகள் கிடைப்பதில்லை.
அடுத்தாக பவுலிங். பவர்ப்ளேயில் போல்ட் பந்துவீசுகிறார் என்றாலே எதிரணி ரசிகர்கள் பதற்றமாய் இருப்பார்கள். ஆனால் முன்புபோல இப்போது போல்ட்டால் பந்தை ஸ்விங் செய்யவோ மின்னல் வேகத்தில் யார்க்கர்கள் போடவோ முடிவதில்லை. சுழற்பந்து வீச்சிலும் மற்ற அணிகளைவிட பலவீனமாகவே இருக்கிறது மும்பை இந்தியன்ஸ். சான்ட்னர் எக்கச்சக்க விக்கெட்கள் எடுக்கும் பவுலர் இல்லை. ஆனால், நேராக ஸ்டம்ப்பை குறிவைத்து சீரான லென்த்தில் போட்டுக்கொண்டே இருப்பார். பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க முடியாமல் தடுமாறி அடுத்த ஓவர் போடும் ஸ்பின்னரை அதிரடியாக ஆடமுயன்று அவுட்டாவார்கள். சென்னையில் அகீல் ஹுசேன் அப்படி பேட்ஸ்மேன்களை ரன் எடுக்கவிடாமல் அழுத்தம் தருவதால்தான் அடுத்த ஓவர் போடும் நூர் அகமதால் விக்கெட்கள் எடுக்க முடிகிறது. இங்கே சான்ட்னரை அப்படி ஆதரிக்க அனுபவம் வாய்ந்த பவுலர்கள் இல்லை.
அணியின் நம்பிக்கை நட்சத்திரமான பும்ராவும் ஆடிய ஐந்து போட்டிகளில் இன்னும் ஒருவிக்கெட் கூட எடுக்கவில்லை. இதுபோன்ற காரணங்களால்தான் இந்த சீசனில் மும்பை அணியின் மொத்த பவுலிங் எகானமி (11.3) மற்ற அணிகளைவிட மோசமாய் இருக்கிறது. அதுவும் மிடில் ஓவர்களில் மும்பை அணியின் எகானமி (11.08) மற்ற அணிகளைவிட மிகவும் அதிகம். ஐந்து போட்டிகளிலும் சேர்த்து மொத்தமே 18 விக்கெட்கள் வீழ்த்தி அந்தப் பட்டியலிலும் கடைசி இடத்தில் இருக்கிறது மும்பை அணி.
தொடர் ஆரம்பிப்பதற்கு முன் கோப்பை வெல்ல வாய்ப்பிருக்கும் அணியாக கருதப்பட்ட மும்பை பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்று பிரிவுகளிலும் மிக மோசமாக ஆடிவருகிறது. தனித்தனி மேட்ச் வின்னர்கள் ஏராளம் பேர் இருந்தாலும் அணியாக அவர்களால் ஒருங்கிணைந்து ஆட முடியவில்லை. அந்த ஒருங்கிணைப்பு நிகழ்ந்தால் மட்டுமே மும்பை அணியின் கோப்பைக் கனவு நனவாகும்.
படக்குறிப்பு, உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்