• Thu. Nov 19th, 2026

24×7 Live News

Apdin News

அக்வான் புயல் எங்கு உள்ளது? எங்கே கரையைக் கடக்கும்? – சமீபத்திய தகவல்கள்

Byadmin

Nov 19, 2026


புயல் இருப்பை காட்டும் செயற்கைக்கோள் படம்

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள தீவிரப் புயலான அக்வான், வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தப் புயல் நாளை நவம்பர் 20ஆம் தேதி நண்பகலில் வடக்கு ஆந்திரப் பிரதேசம், ஏனாம் மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு இடையே, கோபால்பூருக்கு கிழக்கே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அப்போது மணிக்கு 90 முதல் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்; காற்றின் வேகம் மணிக்கு 110 கி.மீ. வரை அதிகரிக்கலாம்.

தமிழ்நாட்டில் நவம்பர் 19 முதல் 22ஆம் தேதி வரை கனமழைக்கான எச்சரிக்கை இல்லை. இருப்பினும், சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 23 முதல் 25ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் எங்கு உள்ளது? எப்போது கரையைக் கடக்கும்?

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் நவம்பர் 19ஆம் தேதி காலை 5.30 மணி நிலவரப்படி, அக்வான் புயல் மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்தது. கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்துள்ளது.

அப்போது புயலின் மையம் 14.5 டிகிரி வடக்கு அட்சரேகையிலும் 85.3 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் அமைந்திருந்தது.

இது ஆந்திரப் பிரதேசத்தின் நரசாபூரிலிருந்து சுமார் 440 கி.மீ. கிழக்குத் தென்கிழக்கிலும், களிங்கப்பட்டினத்திலிருந்து 440 கி.மீ. தெற்கு தென்கிழக்கிலும் இருந்தது. சென்னையிலிருந்து சுமார் 580 கி.மீ. கிழக்கு வடகிழக்கிலும், ஒடிசாவின் கோபால்பூரிலிருந்து 530 கி.மீ. தெற்கிலும், பூரியிலிருந்து 590 கி.மீ. தெற்கிலும் புயல் மையம் அமைந்திருந்தது.

By admin