பட மூலாதாரம், Getty Images
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
17 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்தியா – பாலத்தீன கால்பந்து அணிகளுக்கு இடையே நவம்பர் 17ஆம் தேதி மலேசியாவில் நடைபெற்ற போட்டி இரண்டு சம்பவங்களால் சர்ச்சைக்குள்ளானது.
முதல் சம்பவத்தில், இந்திய வீரரை உதைத்ததற்காக, பாலத்தீன வீரர் ஒருவருக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டது.
இரண்டாவது சம்பவத்தில், இந்திய அணியின் கேப்டனை நோக்கி மற்றொரு பாலத்தீன வீரர் இனவெறி சார்ந்த சைகை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. எனினும், அந்தச் சைகையை இனவெறி நோக்கத்துடன் செய்யவில்லை என்று சம்பந்தப்பட்ட வீரர் மறுத்துள்ளார்.
இந்தப் போட்டியில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆனால், போட்டியின்போது நடந்த இரண்டாவது சம்பவத்தின் காணொளி வெளியானதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் விவாதம் தொடங்கியது.
இந்த விவகாரம் தொடர்பாக இந்திய கால்பந்து சம்மேளனம், ஆசிய கால்பந்து கூட்டமைப்பிடம் (ஏஎஃப்சி) புகார் அளித்துள்ளது.
போட்டியில் உண்மையில் என்ன நடந்தது? இனவெறி சைகை செய்ததாக ஏன் குற்றச்சாட்டு எழுந்தது?
பாலத்தீன வீரருக்கு சிவப்பு அட்டை
இந்தியா மற்றும் பாலத்தீனம் இடையிலான இந்தப் போட்டி, 2027ஆம் ஆண்டுக்கான ஏஎஃப்சி 17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பைத் தகுதிச் சுற்றுப் போட்டிகளின் ஒரு பகுதியாகும்.
போட்டியின் எட்டாவது நிமிடத்தில் இந்திய வீரர் கம்கௌஹாவ் டோங்கல் கோல் அடித்து இந்திய அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.
இதற்குச் சிறிது நேரத்திலேயே பாலத்தீன வீரர் முகமது ஜம்ஹூருக்கும் இந்திய வீரர் ராஜ் சிங் வஹெங்பாமுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
ஜம்ஹூர் வஹெங்பாமை மைதானத்தின் எல்லைக்கோட்டுக்கு அருகே கீழே தள்ளினார். பின்னர், கீழே விழுந்துகிடந்த இந்திய வீரரை இரண்டு முறை காலால் உதைத்தார்.
இந்தச் செயலுக்காக நடுவர் கோ மின்குக், ஜம்ஹூருக்கு நேரடியாகச் சிவப்பு அட்டை காட்டினார். இதனால், போட்டி தொடங்கிய முதல் 10 நிமிடங்களுக்குள்ளேயே பாலத்தீன அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது.
போட்டிக்குப் பிறகு, பாலத்தீன அணியின் பயிற்சியாளர் யூசெஃப் ஷர்பாஜி தனது வீரரின் நடத்தைக்காக மன்னிப்புக் கேட்டார். அந்த வீரர் செய்த செயலுக்கு எந்த நியாயமும் இல்லை என்று அவர் கூறினார்.
இந்திய அணியின் கேப்டனை நோக்கி இனவெறி சைகை செய்ததாகக் குற்றச்சாட்டு
பட மூலாதாரம், Getty Images
போட்டியின் முதல் பாதியின் கடைசி நிமிடங்களில் மற்றொரு சம்பவம் நடந்தது. இந்த முறை பாலத்தீன நடுகள ஆட்டக்காரர் தாஹா சுவைதான் தொடர்பாகச் சர்ச்சை எழுந்தது.
போட்டியின் ஒளிபரப்புக் காணொளியில், இந்திய அணியின் கேப்டன் டல்லால்முவான் காங்க்டேவைக் கடந்து சென்ற சுவைதான், தனது கையால் மூக்கின் அருகே காற்றில் வீசுவதுபோன்ற சைகை செய்தது தெரிந்தது.
இந்தச் சைகையைப் பலரும் இனவெறி சார்ந்ததாகக் கருதினர். இந்தியர்களையும் தெற்காசிய மக்களையும் துர்நாற்றத்துடன் தொடர்புப்படுத்தும் இனவெறி சைகை இது என்று அவர்கள் கூறினர்.
இதற்கு காங்க்டே எதிர்ப்புத் தெரிவித்தார். இதையடுத்து இரு வீரர்களுக்கும் இடையே மைதானத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், நடுவர் கோ மின்குக் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தி எச்சரித்தார்.
எனினும், இந்தச் சம்பவத்துக்காகப் போட்டியின்போது சுவைதானுக்கு சிவப்பு அட்டை காட்டப்படவில்லை.
பாலத்தீன வீரர் அளித்த விளக்கம் என்ன?
சர்ச்சை அதிகரித்ததைத் தொடர்ந்து, தாஹா சுவைதான் இன்ஸ்டாகிராமில் தனது தரப்பு விளக்கத்தை அளித்தார்.
சமூக ஊடகங்களில் தனக்கு எதிராகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளைக் கண்டு ஆச்சரியமடைந்ததாக அவர் கூறினார்.
மலேசியாவில் நிலவிய அதிக ஈரப்பதம் காரணமாகத் தனக்கு அசௌகரியம் ஏற்பட்டதாக சுவைதான் தெரிவித்தார். அதன் காரணமாகவே மூக்கின் அருகே கையால் காற்றை வீசுவதுபோன்ற சைகையைச் செய்ததாக அவர் கூறினார்.
இந்திய அணியின் கேப்டனை அவமதிக்கவோ அவரைக் குறிவைத்துச் செயல்படவோ தனக்கு எந்த நோக்கமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் சர்ச்சை எழுந்ததை அறிந்ததும், தானாகவே காங்க்டேவை அணுகி தனது நோக்கத்தை விளக்கியதாகவும் சுவைதான் கூறினார்.
இனவெறியின் அனைத்து வடிவங்களையும் தான் நிராகரிப்பதாகவும், தனது இயல்பான எதிர்வினை இனவெறி சைகையாகப் புரிந்துகொள்ளப்பட்டதற்கு வருந்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
நவம்பர் 17ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட அறிக்கையில் அவர் இந்த விளக்கத்தை அளித்திருந்தார்.
இந்திய கால்பந்து சம்மேளனம் கூறியது என்ன?
நவம்பர் 18ஆம் தேதி, இந்திய கால்பந்து சம்மேளனம் இந்த விவகாரம் தொடர்பாக ஆசிய கால்பந்து கூட்டமைப்பிடம் (ஏஎஃப்சி) அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தது.
இந்தச் சம்பவத்தை மறுஆய்வு செய்யவும், போட்டியின் காணொளிப் பதிவுகளை ஆய்வு செய்யவும், தொடர்புடைய விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கவும் ஏஎஃப்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இந்திய கால்பந்து சம்மேளனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இனவெறி மற்றும் எந்தவொரு பாகுபாட்டையும் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும் சம்மேளனம் கூறியுள்ளது.
கால்பந்து விளையாட்டு மரியாதை, சமத்துவம், நேர்மையான ஆட்டம் மற்றும் விளையாட்டு உணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தது என்று இந்திய கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது. இதில் இனவெறிக்கோ பாகுபாட்டுக்கோ இடமில்லை என்றும் அது கூறியுள்ளது.
இந்தச் செய்தி வெளியான நேரம் வரை, ஆசிய கால்பந்து கூட்டமைப்போ அல்லது பாலத்தீன கால்பந்து சங்கமோ இந்தப் புகார் குறித்து பதிலளிக்கவில்லை.
போட்டியின் முடிவு
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் இந்திய அணி ஆட்டத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது.
இந்தியா இந்தப் போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் சார்பில் எட்டாவது நிமிடத்தில் கம்கௌஹாவ் டோங்கல் முதல் கோலை அடித்தார்.
பாலத்தீன அணியின் கேப்டன் யசான் கலீஃபா 32ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்து ஆட்டத்தை 1-1 எனச் சமன் செய்தார்.
இரண்டாவது பாதியில் இந்திய அணியின் சார்பில் 52ஆவது நிமிடத்தில் முகுண்டோ சிங் நிங்தௌஜம், 59ஆவது நிமிடத்தில் கேப்டன் டல்லால்முவான் காங்க்டே, 89ஆவது நிமிடத்தில் ஜோரம்திந்தாரா லால்ஹுன்மாவியா ஆகியோர் கோல் அடித்தனர்.
பலத்த மழை காரணமாக இரண்டாவது பாதி ஆட்டம் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகத் தடைபட்டது.
இந்த வெற்றியின் மூலம், குரூப் இ பிரிவில் தொடர்ந்து மூன்று வெற்றிகளைப் பதிவு செய்த இந்திய அணி முதலிடத்தில் நீடித்தது.